நாட்டில் அரிசியை பதுக்குவோர் மீது புதிய சட்ட நடவடிக்கை கொண்டு வரப்படவுள்ளதாக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
அந்த வகையில், இலங்கையிலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருக்கும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவுகின்ற சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்னும் இரண்டு மாதங்களினுள் இந்த சட்டமூலம் தயாரித்து முடிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அரிசி இருப்பு கையகப்படுத்தப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார். சம்பா மற்றும் கீரி சம்பா கையிருப்பை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.