யாழ். சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞர் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 04 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போது, இந்த இளைஞரின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை எனும் நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்தது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றது. வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கடந்த 11ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதே, இந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.