பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இரு தங்கப்பதக்கங்களை பெற்று வெற்றி பெற்ற முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய அகிலத்திருநாயகியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சின்னம் மற்றும் பணப்பரிசில் வழங்கி, பொன்னாடை போர்த்தி அவர் கௌரவிக்கப்பட்டதுடன், அவரது சாதனை தொடர்பாக வாழ்த்துரையாற்றப்பட்டது. பிலிப்பைன்ஸில் 1,500 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும் 5,000 மீற்றர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப்பதக்கங்களையும் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் அகிலத்திருநாயகி பெற்றிருந்தார். இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் லிங்கேஸ்வரன் , பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், சமுர்த்தி பணிப்பாளர் எம்.முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயபவானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.