புதிய புதிய விடயங்களை உருவாக்காத தேசம் உலகில் உயராது என முனிதாச குமாரதுங்க கூறியிருக்கிறார். பெரிய பொருளாதாரப் படுகுழியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை போன்ற நாட்டுக்கு இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்படும் காலம் இது. குறிப்பாக ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கைக்கு, புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த நவம்பர் 23ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 25வது தடவையாக இடம்பெற்ற ‘ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழா’ இதற்கு சான்றளிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சிறந்த சேவையாற்றிய ஏற்றுமதியாளர்களைக் கௌரவிப்பதற்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வருடாந்தம் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. 2021/22 மற்றும் 2022/23 நிதியாண்டுகளுக்கான இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளர்களை கௌரவிப்பதற்காகவே இந்த ஆண்டு இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றது.
இதன்பிரகாரம், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மொத்தம் 13 விருதுகளும், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் 51 விருதுகளும் என இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் இதன்போது விருதுகள் வழங்கப்பட்டதோடு, விண்ணப்பதாரிகளின் செயற்திறன்களின் அடிப்படையில் நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் தகுதி பெற்ற துறைகளுக்காக இவ்வருடம் திறமைக்கான விருதுகள் வழங்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். திறமைக்கான விருது பெற்றவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. நாட்டினுள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் போது, தற்போதுள்ள ஏற்றுமதியை மேம்படுத்துவது மாத்திரம் போதுமானதல்ல, இதற்காக புதிய ஏற்றுமதி துறைகளிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
“நாம் எமது ஏற்றுமதியினை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் எமது கைத்தொழில் துறைகளையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் முதற் தடவையாக சிறிய மற்றும் மத்திய தர கைத்தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாம் புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்காக புதிய முதலீடுகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்”
இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், 2021/22 மற்றும் 2022/23 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதியாளர் விருது உள்ளிட்ட 16 ஜனாதிபதி விருதுகளை இந்நாட்டின் உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனமான MAS Holdings ன் துணை நிறுவனமான MAS Active Trading (Pvt) Ltd, MAS Intimates (Pvt) Ltd பெற்றுக் கொண்டது.
இதன் போது இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கான கம்பனிப் பங்களிப்பைக் கௌரவித்து MAS Active (Active மற்றும் KREEDA துறைகள்) யினால் 2021/22 மற்றும் 2022/23 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்காக இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை வென்றதோடு, இதற்குப் புறம்பாக MAS Active MAS Intimates இணைந்து 16 விருதுகளை வெற்றி கொண்டது.
இந்த கௌரவிப்பானது கைத்தொழில் துறையின் முன்னணியாளர் மற்றும் தேசியப் பொருளாதாரத்துக்கு முக்கியமான பங்களிப்பையும் வழங்குபவராக MAS Holdings ன் நிலைப்பாட்டை உறுதி செய்த தருணமாகவும் அமைந்தது.
இந்த விருது வழங்கும் விழாவில், 2021/22 ஆம் ஆண்டில் முன்னேறி வரும் ஏற்றுமதியாளருக்கான விருது Alumex PLC நிறுவனத்துக்கும், 2022/23ம் வருடத்தில் முன்னேறி வரும் ஏற்றுமதியாளருக்கான விருது Jaya Farm நிறுவனத்துக்கும் கிடைத்தது. 2021/22ம் ஆண்டின் சிறந்த பெண் ஏற்றுமதியாளர் விருது Senikma Holdings தனியார் நிறுவனத்துக்கும் கிடைத்தது. 2022/23ம் ஆண்டுக்கான இந்த விருதை New Lanka Cinnamon தனியார் நிறுவனம் வென்றுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் உரையாற்றினார். அமைச்சர்களான கலாநிதி பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, கனக ஹேரத், அரவிந்த குமார், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீன், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி கிங்ஸ்லி பர்னார்ட், வெளிநாட்டுத் தூதுவர்கள், அரசாங்க அதிகாரிகள், ஏற்றுமதித் துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுரேகா நில்மிணி இலங்கோன் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்