யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாகும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவராவார்.
யாழ். சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31 ஆவது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்படும் நீதிபதிகளைத் தெரிவு செய்யும் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி 67 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலமாக அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
பிரபல சட்டத்தரணியான நிரோசனின் மனைவியான இவர் யாழ்ப்பாணம் தொல்புரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.
தற்போது இவர் தனது கணவருடன் வேலணையில் வசித்து வருகிறார்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இவர், பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் படிப்பை விரும்பிய போதிலும் பெற்றுக் கொண்ட அதிக பெறுபேறு காரணமாக சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். நான்கு வருடங்களில் தனது சட்டக் கல்வியை முடித்துக் கொண்ட இவர், அதே பல்கலைக்கழகத்தில் சில வருடங்கள் சட்டத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றினார். பின்னர் வடக்கிலுள்ள பல நீதிமன்றங்களில் நான்கு வருடங்கள் இவர் சட்டத்தரணியாக முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.(சி.கா)