நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் காலை உணவை மாணவர்கள் பொலித்தீன் தாள்களில் சுற்றி வந்திருப்பதாக குற்றம்சாட்டி அதிபர் அவற்றை மாணவர்களை உண்ணுமாறு வற்புறுத்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர், காலை உணவை பொலித்தீன் தாள்களில் சுற்றிவந்துள்ளனர். சாப்பிட்டு முடிந்தவுடன் அகற்றப்பட்ட பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை மறுபடியும் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக புத்தக பையில் வைத்துள்ளனர். இதை வகுப்பறை வகுப்பறையாய் சோதனையில் ஈடுபட்டு வந்த பாடசாலை அதிபர் கண்டுள்ளார். இதனையடுத்து மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களது பைகளில் வைத்த பொலித்தீன் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை வெளியே எடுக்குமாறு பணித்ததுடன் அவற்றை உண்ணுமாறும் மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து மாணவர்களில் இருவர் நாவலப்பிட்டி மாவட்ட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தொண்டை வலி, வாந்தி, தொண்டை அழற்சி போன்ற நோய்ப் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்த முறைப்பாட்டுக்கமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களை பொலித்தீன் தாள்களை உண்ணுமாறு வற்புறுத்திய அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இப்பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதால், மாணவர்களை தண்டிக்கும் முகமாக பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு பாடசாலை அதிபர் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் பொலித்தீன் பாவனை கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகின்ற போதிலும் மாணவர்களின் மீதான அதிபரின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. இதனை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது.
இலங்கையில் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவதில் பாடசாலைகள் ஆற்றும் பங்கு அளப்பரியது. பிள்ளைகளை பாடசாலையில் அனுமதிக்கும் போதே பொலித்தீன் பாவனையின் தீமைகள் பற்றியும் அதற்கு மாற்றீடாக உபயோகிக்கக் கூடிய பொருட்கள் பற்றியும் விளக்கமளிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அநேகமான பாடசாலைகளில் உள்ள உணவகங்களில் கூட பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் இவ்விடயத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது.
பொலித்தீனில் காணப்படும் இலகுத்தன்மை, மலிவு காரணமாக அது எமது அன்றாட வாழ்வில் ஒன்றிப்போன ஒன்றாகவே ஊறிப்போன ஒன்றாகவே அது காணப்படுகின்றது.
எதிலீனில் மேற்கொள்ளப்பட்ட உயர் அழுத்தப் பரிசோதனையில் தவறுதலாக உருவான விளைவுதான் பொலித்தீன். ஆனால் இன்று உலகம் முழுவதையும் அது ஆக்கிரமித்துள்ளது.
இலகுவில் உக்கும் தன்மையற்ற அதன் இயல்பு காரணமாக படிப் படியாக சூழலில் சேர்ந்து நேரடி மறைமுகத்தாக்கங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு மனிதகுலத்தை தள்ளியுள்ளது.
இலங்கையில் பொலித்தீன் மாசு குறித்து ஹொரண ஆதார வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டொக்டர். குமாரவின் கருத்துப்படி நாளொன்றுக்கு 200,000 மதிய உணவு சுற்றிவரும் பொலித்தீன் தாள்களும் சுமார் 150,000 பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கின்றார். மாதாந்தம் தனிநபரின் பொலித்தீன் பாவனை சுமார் 0.5 கிலோ ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி 2050 ஆம் ஆண்டுக்கிடையில், பருவநிலை மாற்றம் ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்ப அழுத்தத்தால் ஆண்டுக்கு 250,000 கூடுதல் இறப்புகளை இது ஏற்படுத்தும். 2030ஆம் ஆண்டளவில் சுகாதாரத்துக்கு ஏற்படும் நேரடி செலவுகள் USD 2-4 பில்லியன்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் பல வருடங்களாகவே பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த கடும் பிரயதனத்தை மேற்கொண்டு வருகின்ற போதும், இதனுடைய பயன்பாட்டை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு சில நடைமுறை சிக்கல்களும் காரணமாகவுள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலித்தீன் பாவனைக்கான கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒருசில நிறுவனங்களிடம் மட்டுமே மட்டுப்படுத்தப்படல், பொலித்தீனுக்கு பதிலாக மலிவானதும் இலகுவானதுமான மாற்றீட்டு பொருட்கள் அறிமுகப்படுத்தப்படாமை, சட்டத்திட்டங்களில் காணப்படும் நெகிழ்வுத் தன்மை போன்ற விடயங்கள் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதில் அரசாங்கத்துக்கு சவாலாகவுள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நாடுகள், பொலித்தீன் பை வர்த்தகத்திற்கான வரியை அதிகரித்துள்ளன. தென்னாபிரிக்காவில் பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளும் பொலித்தீன் பைகளுக்கு தண்டப்பணத்தை அறவிடுகிறது. 1380 டொலர் அல்லது 10 வருட சிறைத் தண்டனையை பொலித்தீன் பாவனையால் அனுபவிக்க நேரிடுகிறது. இதனால் பொதுமக்களிடையே பொலித்தீன் பாவனை குறைவடைந்திருக்கிறது. பொருட்களை வாங்குவோர் இலகுவாக மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய தடித்த, தரமான பொலித்தீன் பைகளை கொள்வனவு செய்கின்றனர். வேறுசில நாடுகள் பொலித்தீன் பைகள் மூலம் ஏற்படும் ஆபத்துகளை களைய தொடங்கியிருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் பொதுமக்களுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்கியிருக்கிறது.
எனவே இலங்கையில் பொலித்தீன் தடையை முறையாக அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வருடம் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், கிளறிகள், கோப்பைகள், தட்டுகள், கத்திகள், ஃபோர்க்ஸ் மற்றும் ஸ்பூன்கள் மற்றும் பிளாஸ்டிக் கயிறுத் தட்டுகள் மற்றும் மாலை போன்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பெப்ரவரியில், நாட்டில் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் சுற்றாடல் அமைச்சால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் பொருட்களை உடைமையில் வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சுபோகரன் தெரிவித்திருந்தார்.
யாழ். மாவட்டத்தில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 13 தடவைகள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அதன் போது, உணவகங்கள், விற்பனை நிலையங்கள் என 205 வர்த்தக நிலையங்களில் சோதனையிட்டுள்ளோம்.
அவற்றில் 14 உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.
எதிர்வரும் காலங்களிலும் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். எனவே வர்த்தகர்கள் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் என்பவற்றை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ உடைமையில் வைத்திருக்கவோ வேண்டாம் என தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்ைககள் பரவலாக்கப்பட வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக அன்றி பரவலான சோதனைகள் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் பொலித்தீனை பயன்படுத்தும்போதும் அவற்றை அழிக்கும்போதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஒவ்வொரு குடிமகனும் அக்கறை கொண்டாலே போதுமானது. பல பிரச்சினைகளை தீர்த்துவிடலாம்.
வசந்தா அருள்ரட்ணம்