மனித குலத்துக்குள்தான் எத்தனை பேதங்கள், முரண்பாடுகள், வெறுப்புகள்! மற்றொரு தரப்பின் மீது வெறுப்பு கொள்வது ஒருபுறமிருக்க, அவ்வெறுப்பை வெளிக்காட்டுவதில் சிலர் காண்பிக்கின்ற தீவிரம் அதிகம்.
மதம், இனம், பிரதேசம், மொழி என்றெல்லாம் பல்வேறு பேதங்களின் பேரில் யுத்தங்களும் மோதல்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. மனித உயிர்களும் உடைமைகளும் அழிந்து கொண்டேயிருக்கின்றன. இம்மோதல்களில் பாதிக்கப்படுவோரில் அதிகமானவர்கள் அப்பாவி மக்களேயாவர்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் மனிதகுலத்தினுள் பேதங்கள் நிலவுகின்றன. இலங்கையிலும் இவ்வாறு பேதங்கள் நிலவுவதால்தான் எமது நாட்டில் நிரந்தர ஐக்கியத்தை இன்னுமே தோற்றுவிக்க இயலாதிருக்கின்றது. மதம், மொழி, இனம் என்றெல்லாம் மக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை உருவாக்கியுள்ளனர்.
மக்கள் மத்தியில் பேதங்கள் தானாகவே உருவாகுவதில்லை. அப்பேதங்களை மக்களுக்கு ஊட்டி வளர்ப்பதற்கென்றே பலர் உள்ளனர். அரசியல்வாதிகளில் மாத்திரமன்றி சமூகப் பிரமுகர்கள் மத்தியிலும் அவ்வாறான தீயநோக்கம் கொண்டவர்கள் உள்ளனர்.
இந்திய தேசம் மீது இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதுமே அபிமானம் உள்ளது. அது ‘தொப்புள் கொடி உறவு’ போன்றது. இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல் நேருகின்ற போதெல்லாம் ஆதரவுக்குரல் தருகின்ற நாடு இந்தியா ஆகும். எனவேதான் இலங்கைத் தமிழர்கள் இந்திய தேசத்தை எப்போதும் பாசத்துடன் நோக்குகின்றனர்.
ஆனால் இலங்கைத் தமிழர்கள் மீது மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இலங்கையர்கள் மீதும் அக்கறையும் பற்றுதலும் கொண்ட நாடு இந்தியா என்பது பல தடவைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த காலப்பகுதியில், தடுப்பூசி மருந்தை உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பி வைத்த தேசம் இந்தியா.
அதுமாத்திரமன்றி, இலங்கையில் மிகமோசமான பொருளாதார நெருக்கடி நிலவிய வேளையில் உணவு, மருந்துப்பொருட்கள், எரிபொருள் போன்றவற்றை அனுப்பி எமது மக்களின் துயர்துடைத்த நாடு இந்தியா என்பதை மறந்து விடலாகாது.
‘இலங்கை எமது சகோதர நாடு’ என்று இந்தியத் தலைவர்கள் பெருமையுடன் கூறுவதுண்டு. ‘அயல்நாட்டுக்கே முன்னுரிமை’ என்பது இந்தியாவின் கோட்பாடு ஆகும். அக்கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது இந்தியா.
இவ்வாறான நாட்டுடன் நெருக்கமான நட்புறவை இலங்கை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறிருக்கையில், சர்வதேச கிரிக்கட் போட்டி முடிவில் நடந்துள்ள சில சம்பவங்கள் வேதனை தருகின்றன. இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடும் வகையில் ஒருசிலர் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
ஒருசிலரின் மனப்பக்குவமற்ற இச்செயலானது இலங்கை மக்கள் பலரின் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தியதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டாமலிருக்க முடியாது!