அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் கொழும்புக்கு நவம்பர் 7முதல் -8 ஆம் திகதி வரை விஜயம் செய்திருந்த போது, பெண் தொழில்முயற்சியாளர்கள், நிலைபேறான நிதியளிப்பு மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு (MSMEs) ஆதரவளிக்கும் வகையில் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இந்த அர்ப்பணிப்புக்கான உறுதிப்படுத்தும் கைச்சாத்திடல் DFC இன் சார்பாக பிரதம நிறைவேற்று அதிகாரி நேதன் மற்றும் CDB சார்பாக முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் நாணயக்கார ஆகியோரிடையே கைச்சாத்திடப்பட்டிருந்தது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் USAID குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் கேப்ரியல் கிரவு ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று, இலங்கையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வலுவூட்டலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தியிருந்தனர்.
முதன் முறையாக, இந்தளவு உயர் பெறுமதியான நிதி வசதியை CDB பெற்றுக் கொண்டுள்ளதுடன், கூட்டாண்மை செயற்பாடுகளில் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், நிதியளிப்பு முகவர் அமைப்புகளால் CDB இன் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு இந்த கடன்வசதியளிப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன், உறுதித்தன்மை, ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்கு நிறுவனத்தின் பங்களிப்புகளையும் ஏற்றுக் கொள்வதாக அமைந்துள்ளது.