சர்வதேச அரசியல் பரப்பானது வியத்தகு மாற்றங்களை அடைந்து வருகிறது. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர், சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார், ஹமாஸ் இஸ்ரேல் தாக்குதல், எல்லையற்ற மனித அவலத்தை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக அமைந்துள்ளது. மறுபக்கத்தில் இஸ்ரேலிய இராணுவமும் அதன் புலனாய்வுத் துறையின் குழப்பகரமான தகவல்களும் ஹமாஸின் உத்திகளும் என புதிய உலகத்தை நோக்கி அரசியல் நகர்கிறது. மிக நீண்டகாலமாக இஸ்ரேலிய புலனாய்வுத் துறையான மொஸாட் அமைப்பு உலகளாவிய ரீதியில் அதிக முக்கியத்துவம் பெற்ற நிலையிலிருந்து தோல்விகளை நோக்கி செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழ ஆரம்பித்துள்ளன. ஹமாஸ் அமைப்பின் செப்டெம்பர் 7 தாக்குதலை மொஸாட்டினால் கண்டறிய முடியவில்லை என்பது போல் தற்போது அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸின் கட்டளை பீடம் இயங்குவதாகவும் பணயக்கைதிகளை அங்குதான் ஹமாஸ் வைத்துள்ளதாகவும் மொஸாட் தெரிவித்திருந்த போதும் தற்போது எதுவுமற்ற நிலையில், இஸ்ரேலிய இராணுவம் வைத்தியசாலையை சூழ்ந்துள்ளது. உலகத்திற்கு ஒரு போலியான தகவலை வழங்குவதில் மொஸாட் மட்டுமல்ல அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வும் பங்காற்றியதாக தெரிகிறது. இக்கட்டுரையும் சீன, -அமெரிக்க உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தேடுவதாக அமையவுள்ளது.
15.11.2023 சான்பிரான்ஸ்சிஸ்கோவில் நடைபெற்ற ஆசிய, -பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து உரையாடியுள்ளார். இத்தகைய சந்திப்பின் முக்கியத்துவம் அதிகம் உலகளாவிய ரீதியில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இருநாட்டுக்குமான பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான முறுகல் அதிகம் நீடிக்கும் நிலையில் இத்தகைய சந்திப்பு நிகழ்ந்துள்ளமை முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாக உள்ளது. இச்சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இராஜதந்திரிகளும் உரையாடிய முக்கிய விடயங்களை நோக்குவது அவசியமானது.
பொருளாதார வர்த்தக ரீதியில் இரு நாட்டக்குமான பரிவர்த்தனைகளை மீள ஆரம்பிப்பதென்ற முடிவை எடுத்துள்ளதுடன், கடந்த காலத்தில் கைவிடப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மீள தொடங்குவதற்கான உரையாடல்களை தொடர்வதாக முடிவாகியுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு விடயத்தில் ஏற்பட்ட தடைகளை மீளமைக்க தொடர்ச்சியாக உரையாடுவதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்துள்ளனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியிலும் காணப்பட்ட வேகம் 2019 களுக்கு பின்னர் படிப்படியாக குறைவடைந்துள்ளது. அதனை சரிப்படுத்துவதில், இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. இரு நாட்டுக்குமான பொருளாதார ஒத்துழைப்பினை இச்சந்திப்பு ஏற்படுத்தும் என்ற எதிர்பார்க்கை இரு நாட்டு இராஜதந்திரிகளுக்கும் இருந்துள்ளது என்பதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக வர்த்தக ரீதியில் ஒத்துழைப்பினைக் கூட்டுவது ஏற்கனவே நின்றுபோன ஏற்றுமதி, இறக்குமதிக்கான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது என்பன இரு நாடுகளாலும் உரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டள்ளன.
அவ்வாறே உலகளாவிய பிணக்குகள் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடியுள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அதற்கான முக்கியத்துவத்தை விட பொருளாதார உறவுக்கான முக்கியத்துவமே அதிகமாக இருந்துள்ளது. அதனைக்கடந்து உக்ரைன் -ரஷ்யப் போர் பற்றியோ, ஹமாஸ், -இஸ்ரேலிய அமெரிக்க கூட்டுப் போர் பற்றியோ அதிக முக்கியத்துவம் இரு நாட்டுத் தலைவர்களது உரையாடலிலும் இருந்ததாக கூறிவிட முடியாது. அந்தளவுக்கு, சீனா உலகளாவிய போர் விடயங்களில் முக்கியத்துவம் பெறும் நாடாக தன்னைக் காட்டிக் கொள்வதில் கவனமாக செயல்படுகிறது. இரு போர்களிலும் மறைமுகமாக செயல்படுகின்றதே அன்றி நேரடியான எதிர்வினையை ஆற்றும் திறனை சீனா வெளிப்படுத்தவில்லை என்றே குறிப்பிடலாம். ஆனால் இத்தகைய போர்கள் எந்தளவுக்கு இரு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது என்பதில் கவனம் கொண்ட நாடாகவே சீனா காணப்படுகிறது. சீனாவின் தற்போதைய உலகளாவிய இலக்கு பொருளாதாரமே. அதன் வளர்ச்சியே இராணுவ அரசியல் விடயங்களில் சீனாவை பலமடையச் செய்யும் என்ற தெளிவான கருதுகோளுடன் செயல்படும் நாடு சீனா. அதற்கு அமைவாகவே உலகளாவிய ரீதியில் சீனாவின் அரசியல் நகர்த்தப்படுகிறது.
இதனோடு இந்தோ-, பசுபிக் பொருளாதாரப் பிரச்சினை, மருத்துவம், காலநிலை மாற்றம் தொடர்பிலும் இரு நாட்டுக்கும் முக்கிய உரையாடல் நிகழ்ந்துள்ளது. அதிலும் ஈரான் விடயம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மேற்காசியாவில் ஈரானின் நடவடிக்கைகளை அதிகம் எதிர்நோக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். அது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் நெருக்கடியான நிலையை கொடுப்பதாகவே அமெரிக்க நகர்வுகளும் உரையாடலும் அமைந்துள்ளதாகத் தெரியவருகிறது. காரணம் ஈரானுடனான நெருக்கமான உறவை கொண்டுள்ள சீனாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், கண்டிக்கவும் அமெரிக்கத் தலைவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருந்தமை கண்டு கொள்ள முடிந்தது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தாய்வான் விடயத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உரையாடியதாக தகவல்கள் உண்டு. அதற்கான முக்கியத்துவமே இரு நாட்டு தலைவர்களது உரையாடலுக்கும் அடிப்படை என்ற விவாதம் உள்ளது. அதனை விரிவாக தேடுவது அவசியமானது.
ஒன்று, தாய்வான் தொடர்பில் அமெரிக்காவின் நகர்வுகள் அதிகம் இரு நாட்டுக்குமான விரிசலை அதிகரித்திருந்தது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவின் இராணுவ உதவிகளும் பொருளாதார ஒத்துழைப்பும் தாய்வான் இருப்பினை பலப்படுத்தி வருகிறது. அமெரிக்காவுக்கும் தாய்வானை முதன்மைப்படுத்திக் கொள்வதன் வாயிலாக சீனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டிலும், அமெரிக்க, ஆசிய-, பசுபிக் வர்த்தக மற்றும் இராணுவ போக்குவரத்துக்கான வாய்ப்புக்களை பாதுகாப்பதற்கும் அவசியமானது. அத்தகைய வாய்ப்புக்களை பலப்படுத்த வேண்டுமாயின் தாய்வான்- அமெரிக்க உறவு பலமானதாக அமைந்திருத்தல் வேண்டும். அது தனித்து சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதல்ல. மாறாக அமெரிக்க இராணுவ பலத்தை தக்கவைப்பதாகவே உள்ளது. இதனால் அமெரிக்க தாய்வான் உறவு பிராந்திய பொருளாதார இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது.
இரண்டு, தாய்வானின் புவிசார் அரசியல் சீனாவுடனான போருக்கு வாய்ப்பான களத்தை தாக்கக்கூடியதாக உள்ளது. அதனால் தாய்வானை மையப்படுத்தி ஒரு போரை அமெரிக்க திறக்குமாயின் அதன் விளைவு சீனாவுக்கு ஆபத்தானதாக அமையும். சீனாவின் இராணுவத் திறனுடன் தாய்வானை ஒப்பிட்டால் சீனாவுக்கு தாய்வானை கைப்பற்ற ஓரிரு மணித்தியாலங்கள் போதுமானது. ஆனால் அதற்கான அணுகுமுறையல்ல தாய்வான் விடயம். அதன் புவிசார் அரசியல் இருப்பு, போரை நீடிக்கவும் தாக்குப்பிடிக்கவும் உதவக் கூடியது.
அதனால் உலகம் ஒரு பாரிய மாற்றத்திற்கு நகரும் போதோ, அல்லது அமெரிக்கா பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போதோ, சீனா தாய்வானைக் கைப்பற்ற முனையும். அதற்கு முன்பான போர், சீனாவின் அனைத்து வளர்ச்சியையும் பாதிப்பதாகவே சீனார்கள் கருதுகின்றனர். அதனால் இந்தப் போரை தடுப்பதிலும் காலம் தாழ்த்துவதிலும் சீனாவின் நகர்வு அடிப்படையானதாகவே அமையும்.
மூன்று, அண்மைய உலகளாவிய அரசியலில் அமெரிக்கா சிறிய போர்களையும் போர்க்களங்களையும் உருவாக்குவதிலும் கவனம் கொள்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தால் திறக்கப்பட்ட களமாகவே உக்ரைன், ரஷ்ய போர் அமைந்திருந்தது. அடிப்படையில் அந்தப் போரில் எந்தத் தரப்பும் வெற்றி கொள்ளாத போதும் ரஷ்யா வெற்றி கண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் பொருளாதாரத்தில் ரஷ்யா பாரிய நெருக்கடியை போரால் எதிர் கொண்டுள்ளது. அவ்வாறான நிலையை நோக்கியே இஸ்ரேலிய பொருளாதாரம் மட்டுமல்ல அதன் புலனாய்வு மற்றும் இராணுவ நகர்வுகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய செய்முறைக்கான நகர்வு தாய்வான் பரப்பிலும் ஏற்பட்டால், சீனாவின் பொருளாதாரப் பாய்ச்சல் மற்றும் 2070ஆம் ஆண்டில் சீனாவின் இலக்கு என்பன காணாமல் போய்விடும் என்பதே இரு தரப்புக்குமான சந்திப்பின் அடிப்படையாகும். சீனாவைப் பொறுத்தவரை தாய்வான் தனது நிலம் என்பதற்கு அப்பால் அதனை கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல எனக் கருதுகிறது. அதனால் தாய்வான் பரப்பில் ஒரு போருக்கான வாய்ப்பினை முடிவுக்கு கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, -சீன உறவை கையாள முனைகிறது. அதன் எல்லை மீறும் போது அதனைக் கண்டு கொள்ளாது இருக்காது என்பதும் அதன் இன்னோர் செய்தியாக அமைந்துள்ளது.
எனவே சீ-ன, அமெரிக்கத் தலைவர்களது சந்திப்பு உலகளாவிய விடயங்களை விட இரு நாட்டுக்குமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவைப் பலப்படுத்துவதுடன் தாய்வான் விடயத்தில் அமெரிக்காவின் தீவிரத்தன்மையை குறைப்பதாகவே தெரிகிறது. உலகளாவிய விடயங்களில் சீனாவின் போக்கும் அதன் தலைமையின் அணுகுமுறையும் வேறுபட்டது.
சீனா உலகளாவிய அரசியல், -இராணுவ விடயங்களில் அதிகம் மௌனமாகவே செயல்படுகின்றது. அதன் உலகம் வேறானதாகவே உள்ளது. எல்லாவற்றிலும் மறைமுகமாக இயங்க முனைகிறது. தனக்குரிய காலத்தை நோக்கி மட்டுமே சீனா நகர்வதாக தெரிகிறது. அவ்வப்பொது சீனாவுக்கு ஏற்படும் நெருக்கடிக்கு எதிர்வினையாற்றுவதிலேயே கவனம் கொண்டு செயல்படுகிறது.