மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் சட்டவாதத்தை அடுத்து நீதிமன்றம் நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்குமாறும், இந்நிகழ்வில் பங்குபற்றக்கூடாதெனவும் கூறியதுடன், முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
இந்த விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேற்படி பிரமுகர்கள் சார்பாக, மட்டக்களப்பைச் சேர்ந்த பெருமளவான சட்டத்தரணிகளில் அனுசரணையுடன் த.தே.கூ எம்.பி. சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நடத்திய நீண்ட சட்டவாதத்தை அடுத்து, இந்த நிராகரிப்பு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. “உயிரிழந்த ஒருவருக்காக நினைவேந்தல் செய்யும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டென்பதுடன், அது அடிப்படை உரிமையாகும். ஆகையால், அதை மறுக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் துணை போகக்கூடாது. மாறாக, அந்த உரிமை நிலை நாட்டப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று சுமந்திரன் எம்.பி. வாதாடினார்.
வேறொரு வழக்குக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சுமந்திரன் எம்.பி. பிரசன்னமாகியிருந்த தருணத்திலேயே பொலிஸாரின் விண்ணப்பங்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது விடயத்தை அவதானித்த சுமந்திரன் எம்.பி., தடை விதிக்கக் கோரப்பட்ட பிரமுகர்கள் சார்பாக தான் முன்னிலையாகி பதில் வாதம் செய்ய விரும்புவதாக விண்ணப்பம் செய்தார். அவ்வேளை நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த ஏனைய தமிழ் சட்டத்தரணிகள், தாமும் சுமந்திரன் எம்.பி.க்கு அனுசரணை வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு பொலிஸாரின் விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் விண்ணப்பம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, முன்னைய வழக்கின் காரணங்களின் அடிப்படையில் இந்த விண்ணப்பமும் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.