- மேலும் 05 வருடங்களுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
- பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதுடன் கல்வி அறிவு மற்றும் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் உணவு உதவி முயற்சி திட்டத்துக்காகவே அமெரிக்க USDA இந்த நிதியை வழங்குகிறது
பாடசாலை மாணவர்களின் உணவுத் திட்டத்துக்காக மேலும் ஐந்து வருடங்களுக்கு 32.5 மில்லியன் டொலரை வழங்குவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதுடன், கல்வியறிவு மற்றும் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் உணவு உதவி முயற்சியான Mc Govern-Dole International Food for Education and Child Nutrition திட்டத்துக்காக அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) இலங்கைக்கு இந்த நிதியை வழங்குகிறது.
பாடசாலை மாணவர்களுக்கான உணவு, ஆசிரியர் பயிற்சி மற்றும் தொடர்புடைய ஆதரவை வழங்குவதன் மூலம் McGovern-Dole திட்டங்கள் பாடசாலை சேர்க்கை மற்றும் கல்வி செயற்றிறனை அதிகரிக்க உதவுகின்றன.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சிறுவர்களை காப்பாற்றும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 200,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்த முயற்சியால் பயனடையவுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதி உதவியுடன் பாடசாலை உணவு வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயற்படுத்தப்படும் பல இடங்களுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், “இலங்கை குழந்தைகளின் வாழ்வில் பாடசாலை உணவு வழங்கும் திட்டத்தின் மாற்றமான தாக்கத்தை நான் கண்டுள்ளேன்.
USDA இன் McGovern-Dole International Food for Education மற்றும் Child Nutrition திட்டத்தின் மூலம் இந்த கூடுதல் 32.5 மில்லியன் டொலர் பங்களிப்பின் மூலம் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் முயற்சிக்கு அமெரிக்கா தனது ஆதரவில் உறுதியாக உள்ளது.
இந்தத் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் கல்வியை மேம்படுத்துவதுடன், இலங்கை மக்களுக்கான எமது நீடித்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது” எனத் தெரிவித்தார்.