புத்தளம், நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மின் உற்பத்தி இயந்திரத்தின் (Unit 02 Generator) உயர் அழுத்த ஹீட்டர் சிஸ்டம் (High Pressure Heater System) திடீரென பழுதடைந்துள்ளதாகவும் இதன் திருத்த வேலைகளுக்காக 6 வாரங்கள் அதனை மூட வேண்டியுள்ளதாகவும், இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (17) இரவு முதல் ஜெனரேட்டரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அச்சபை தெரிவித்தது. இதனை சீர்செய்ய தேவையான பூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரின் முக்கிய பராமரிப்புப் பணிகள் (Level A – Major Overhaul) நிறைவடைந்து, தற்போது சோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கமைய இந்த மூன்றாவது ஜெனரேட்டரை, மிக விரைவாக மின்சாரம் தயாரிப்பதற்கு இயக்க முடியுமென்பதுடன், இந்தக் காரணத்தால் மின்சார விநியோகம் தடைப்படாதெனவும், இலங்கை மின்சாரசபை தெரிவித்தது.
மேலும், இந்த பராமரிப்புக் காலத்தில் அதிகபட்சமாக நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் மின்சாரத்தை தொடர்ந்து வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.