இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அரச ஊழியர்கள் கோரிய 20000 சம்பள அதிகரிப்புக்குப் பதிலாக வாழ்க்கைச் செலவுப்படியில் 10000 அதிகரிப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு 2024 ஜனவரியிலிருந்து வழங்கப்படுமெனக் கூறப்பட்டாலும் அரச ஊழியரொருவர் அந்தக் காசை ஏப்ரல் மாத சம்பளத்திலேயே கண்ணில் காணமுடியும்.
முதல் மூன்று மாதங்களுக்கான முப்பதாயிரம் ரூபா நிலுவைத்தொகை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 2024 ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஓய்வூதியக்காரர்களுக்கு 2500ரூபா அதிகரிப்பும் ஏனைய தங்கி வாழ்வோருக்கான நலன்புரிக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2019இலிருந்து தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனை பொருட்கள் சேவைகளின் விலைகளும் இருமடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளன. விலைகள் அதிகரித்துச் செல்லும் வேகம் (பணவீக்கம்) தற்போது குறைவடைந்து சென்றாலும் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்த பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் பதிவாகவில்லை. ஆகவே 2019இல் என்ன சம்பளம் நிலவியதோ அந்தச் சம்பளம் இருமடங்காக அதிகரித்தால் மட்டுமே மக்கள் தமது கொள்வனவுச் சக்தியை தொடர்ந்து தக்கவைக்க முடியும்.
ஆகவே அரசு வழங்கியுள்ள சம்பள அதிகரிப்பு யானைப்பசிக்கு சோளப்பொரி போலத்தான் பார்க்கப்படும். ஆயினும் சுமார் 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கும் 6 இலட்சம் ஓய்வூதியக்காரர்கள் மற்றும் தங்கி வாழ்வோருக்கான கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் பாரியளவு நிதியை ஒதுக்க வேண்டியுள்ளதும் இன்றைய அரசநிதி நிலைமைகளில் அது மிகக் கடினமான ஒன்று என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இந்த அதிகரித்த கொடுப்பனவுகளின் நன்மை மக்களுக்கு உண்மையிலேயே கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கு இடமானது. ஏனெனில் இந்த நன்மை மக்களுக்கு கிடைக்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே 2024 ஜனவரியிலிருந்து பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர்வரி 15 வீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கும்.
அத்துடன் முன்னர் வற் வரி அறவீட்டிற்கு உட்பட்டிருக்காத பலபொருட்கள் சேவைகள் அதில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதனால் பொருட்கள் சேவைகளின் விலைகள் ஜனவரியில் அதிகரிக்கும். ஏற்கெனவே மின்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்போது மின்சாரமும் வற்வரியின் கீழ் கொண்டு வரப்படுமாயின் உற்பத்திச் செலவுகளும் வியாபாரம் செய்வதற்கான செலவுகளும் பாரியளவில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களின் பயன் பெயரளவினதாக மாத்திரமே இருக்கும். அது மட்டுமன்றி தனியார் துறையில் தொழில் புரியும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது பற்றிய வினா தொடர்ந்தும் தொக்கி நிற்கிறது.
ஒரு புறம் அரச கொள்கைப் பிறழ்வுகள் காரணமாக ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்தும் நீடித்துச் செல்கிறது. பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
வழமைபோலவே அடுத்து வரும் மூன்று மாதங்கள் மிகக் கடினமாக இருக்கப் போகிறது என்கிறது அரசாங்கம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் எந்தக்காலம் கடினமாக இருக்கவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எதிர்வரும் காலமும் இதைவிடக் கஷ்டம் என்றால் எப்போது அது குறையும் என்று சொல்லுங்கள் என்று மக்கள் கேட்பது நியாயம் அல்லவா? ஒரு புறம் பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் சடுதியாக அதிகரித்துச் செல்லும் அரச வரிகள் மற்றும் மூலப்பொருள் மற்றும் இடைநிலைப் பொருள் விலைகள் எல்லாமாக ஒன்று சேர்ந்து இலங்கையில் வியாபாரம் செய்வதை மிகக்கடினமானதாக மாற்றியுள்ளது.
அதனால் தனியார் துறை தமது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை. ஜோன் மொனார்ட் கெயின்ஸ் என்ற இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பொருளியலாளரின் கருத்துப்படி பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள ஒரு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அதனை பொருளாதார வளர்ச்சிப்பாதையில் நிலை நிறுத்துவதற்கும் அரசாங்கம் தீவிரமான பங்களிப்பு செய்ய வேண்டும். அதன் போது மக்களுக்கு தமது நாளாந்த செலவீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான வருமானம் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
அதனூடாகவே வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதார நடவடிக்கைகளை சீர்படுத்த முடியும் என்கிறார். ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பிழையான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே ஏற்பட்டதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் IMF இன் பரிந்துரைகளின் பேரில் மேற்கொள்ளப்படுவதாக தற்போது கூறப்படுகிறது.
ஆனால் தற்போது பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்யுமேயன்றி பொருளாதார நடவடிக்கைகளை விரிவாக்கச் செய்து மக்களின் வருமானத்தைப் பெருக்கி அதனூடாக அரசாங்கத்தின் வரிவருவாயை அதிகரிக்க முயற்சிக்க வேண்டுமேயல்லாது பொருளாதாரம் சுருங்கியுள்ள போது வரிகளைப் பெருமளவில் அதிகரித்தால் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமான அதிகரிப்பைப் பெறமுடியாது. ஏனெனில் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் சுருங்குவதோடு மக்களின் வருமானம் குறைந்து அவர்களின் செலவிடும் ஆற்றல் குறையும்.
இதனால் எதிர்பார்க்கும் வரிவருவாய் கிடைக்காது. அது மட்டுமன்றி ஒரு வரவு செலவுத்திட்டம் ஒரு வருட காலப்பகுதிக்கானது. அதை வைத்துக் கொண்டு நீண்டகால இலக்குகளை அடைய முயற்சிப்பது பொருளாதாரச் சுருக்கத்தை மேலும் நீடிக்கச் செய்யுமேயன்றி அதிலிருந்து மீட்சியடைய அது ஒருபோதும் உதவாது.
கேயின்ஸைப் பொறுத்தவரை அரசாங்கம் பொருளாதார மந்த காலங்களில் தமது செலவீடுகளை அதிகரிப்பதனூடாக மக்களின் கொள்வனவுச் சக்தியைப் பெருக்க வேண்டும். வரிகளை முடிந்தளவில் குறைக்க வேண்டும். வரவு செலவுத்திட்டத்தை ஒருவருடத்திற்குரிய திட்டமாக அமுல்படுத்த வேண்டும்.
அடுத்த வருடம் முன்னைய வருட வரவு செலவுத்திட்டத்தின் அடையப்பட்ட இலக்குகள் பரிசோதிக்கப்பட்டு அதன் குறைபாடுகள் களையப்படவேண்டும். ஒருவரவு செலவுத்திட்டத்தை நீண்டகால பொருளாதார இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது.
ஏனெனில் நீண்டகாலத்தில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம். ஆகவே இப்போதைய தேவை முதலில் மக்களை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான உடனடிக்கொள்கைத் திட்டங்களே தவிர, கனவு வேலைத்திட்டங்களல்ல.