மழையுடன் கூடிய காலநிலை நிலவும் போது இலங்கை முகம் கொடுக்கும் அனர்த்தங்களில் மண்சரிவும் ஒன்றாகும். இம்மண்சரிவு காரணமாக உயிரிழப்புக்களும், காயங்களும் மாத்திரமல்லாமல் சொத்தழிவுகளும் பொருளாதார இழப்புக்களும் ஏற்படவே செய்கின்றன. அந்த வகையில் கடந்த ஞாயிறன்று (12.11.2023) பலாங்கொடை, கரவங்கேன, வெஹிந்த பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். அவர்களில் தாயும் தந்தையும் அவர்களது இரு பிள்ளைகளும் அடங்கியிருந்தனர். இது அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவமானது.
என்றாலும் இராணுவத்தினரும், பொலிஸாரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும், பிரதேச மக்களும் விரைந்து செயற்பட்டு மண்மேட்டை அப்புறப்படுத்தி புதையுண்டவர்களை உயிருடன் மீட்டெடுக்கவென கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். இருப்பினும் அவர்கள் சடலங்களாகவே மறுநாள் கண்டெடுக்கப்பட்டனர்.
அத்தோடு இம்மண்சரிவின் விளைவாக அப்பிரதேசத்தில் மேலும் மூன்று வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மழையுடனான காலநிலையின் போது மலைகள் மற்றும் மலைசார்ந்த பிரதேசங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் அண்மைக்காலமாக ஏற்படக்கூடியனவாக உள்ளன. இந்நாட்டில் 14 மாவட்டங்கள்
மலைகளையும் மலை சார்ந்த பிரதேசங்களையும் கொண்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா, கண்டி,
மாத்தளை ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்க மாவட்டங்களாகும். இம்மாவட்டங்களில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்விடங்கள் தொடர்பில் அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இது தொடர்பில் அறிவூட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இருந்தும் கூட மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களிலும் மக்கள் வாழவே செய்கின்றனர். இவ்வருடம் (2023) செப்ம்டெபர் வரையும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் படி, நாட்டில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் 14 ஆயிரத்து 224 குடியிருப்புக்களும் கட்டடங்களும் அமைந்திருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
மண்சரிவு ஒரு அனர்த்தமான போதிலும் அவ்வனர்த்தம் ஏற்பட முன்னர் சில முன்னறிகுறிகளை குறித்த பிரதேசத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். குறிப்பாக நிலத்தில் திடீரென வெடிப்புக்கள் ஏற்படும். அவ்வெடிப்புகள் விரிவடைந்து பிளவுகளாகும். அவ்வாறான வெடிப்புக்களை கட்டடங்களின் சுவர்களிலும் வீதிகளிலும் அவதானிக்க முடியும். அது மாத்திரமல்லாமல் பிரதேசத்தில் புதிய நீரூற்றுக்கள் திடீரென ஏற்படும். அவற்றின் ஊடாக சேறு சகதிமிக்க நீர் வெளிப்படும். அப்பிரதேசத்தில் ஏற்கனவே நீரூற்றுக்கள் காணப்படுமாயின் அவை திடீரென காணாமல் போய்விடும். அப்பிரதேசத்திலுள்ள உயரமான மரங்கள், தொலைபேசி மற்றும் மின்கம்பங்கள் சரிவடையலாம். இவை அனைத்தும் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னறிகுறிகளாகும்.
அதனால் அவ்வாறான அறிகுறிகளை அவதானித்தால் தாமதியாது அப்பிரதேசங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் இவ்வறிகுறிகள் குறித்து பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அவர் மூலம் பிரதேச செயலாளர் ஊடாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்திற்கு இவ்வறிகுறிகள் குறித்து அறிவிக்க வேண்டும். இது மக்களின் பொறுப்பாகும்.
இருந்த போதிலும் மண்சரிவு குறித்த அறிவுரை மற்றும் ஆலோசனைகள் தொடர்பிலோ தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுக்கின்ற மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் குறித்தோ கவனம் செலுத்தத் தவறிவிடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவ்வாறானவர்கள் மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளாகும் துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுக்கின்றனர். ஆனால் மண்சரிவு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னெச்சரிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயற்படும் போது இவ்வனர்த்தத்தின் பாதிப்புக்களைக் குறைத்தும் தவிர்த்தும் கொள்ளலாம் என்பது தான் பூகற்பவியலாளர்களின் கருத்தாகும்.
இந்நாட்டில் கடந்த செப்ம்டெபர் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. அதனால் செப்ம்டெபர் 31ஆம் திகதி தொடக்கம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கைகளை தொடராக வழங்கி வருகின்றது. அதுவும் தினமும் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அப்படியிருந்தும் கூட இம்முறை ஏற்பட்டுள்ள மண்சரிவுகளினால் 07 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஐவர் இரத்தினபுரி மாவட்டத்தையும் காலி மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா ஒருவருமாக 07 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இம்முறை மழைக் காலநிலை ஆரம்பித்தது முதல் கடந்த ஆறு வார காலப்பகுதியில் (16.11.2023 வரை) 996 மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை நாட்டிலுள்ள மலை மற்றும் மலைசார்ந்த 13 மாவட்டங்களில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில், பதுளையில் 26, கொழும்பில் 14, காலியில் 133, ஹம்பாந்தோட்டையில் 61, களுத்துறையில் 50, கண்டியில் 21, கேகாலையில் 221, குருநாகலில் 19, மாத்தளையில் 20, மாத்தறையில் 321, நுவரெலியாவில் 25, இரத்தினபுரியில் 74, கம்பஹாவில் 11 என்றபடி வெவ்வேறுபட்ட எண்ணிக்கையில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் அச்சுறுத்தல் முகாமைத்துவப் பிரிவு சிரேஷ்ட பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க, இம்மண்சரிவுகளில் பெரும்பாலானவை மனிதர்கள் நிலத்தைத் தவறாகவும் பிழையாகவும் பயன்படுத்தியதன் வெளிப்பாடு’ என்று கூறியுள்ளார்.
இம்முறை ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில் பெரும்பாலானவை தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளைச் செய்துள்ளது. அந்த ஆய்வுகளின் படி அவற்றில் 75 தான் உண்மையான மண்சரிவுகள்.
ஏனைய 529 உம் குடியிருப்புக்கள், கட்டிடங்கள், வீதிகள் அமைக்கவும் விவசாயப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகவும் நிலத்தை ஒழுங்குமுறையாகப் பயன்படுத்தத் தவறியதன் விளைவாக ஏற்பட்ட மண்மேடுகளின் சரிவாகுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார் பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க. இந்நிலையில் தான் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் கட்டடங்களை நிர்மாணிக்க முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.
அதேநேரம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் ஊடாக புதிதாக ஏற்பட்ட மண்சரிவுகளும் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மண்சரிவுகள் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டிருக்கின்றது. குறிப்பாக மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் புதிதாக மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள அதேநேரம், பதுளை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் பழைய இடங்களில் மீண்டும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மாத்தறை, இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு தற்போதும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுவதைக் குறைத்து உயிரிழப்புக்களையும், காயங்களையும் மாத்திரமல்லாமல் சொத்தழிவுகளையும் தவிர்க்கவே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மழைக் காலங்களில் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் மற்றும் அது தொடர்பிலான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அது மக்கள் முன்பாக உள்ள பாரிய பொறுப்பாகும்.
மர்லின் மரிக்கார்