ஆட்சியதிகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அமர்ந்திருக்கின்ற காலத்தில் நாட்டில் பஞ்சம் நிலவுவதில்லையென்ற ஐதீகம் இன்றும் கூட மக்கள் மத்தியில் நிலவுகின்றது. பெரும்பாலும் கிராமப்பகுதிகளிலுள்ள சாதாரண மக்கள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொள்வதுண்டு.
ஐ.தே.க ஆட்சி நிலவுகின்ற காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மக்களின் கைகளில் பணம் இருக்குமென்றும், உணவுக்குப் பஞ்சம் நிலவுவதில்லையென்றும் அக்காலம் தொடக்கம் மக்கள் பேசிக் கொள்வது வழக்கம்.
மக்களின் அவ்வாறான நம்பிக்கையில் உண்மை இல்லாமலில்லை. ஐக்கிய தேசியக் கட்சியானது அமரர் டி. எஸ்.சேனநாயக்க காலம் தொட்டு சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து விசேட அக்கறை செலுத்தி வருகின்றது எனலாம். முக்கியமாக, கிராமத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஐ.தே.கவுக்கு விசேடமான அக்கறை உண்டென்பதை மறுப்பதற்கில்லை.
கிராமத்து மக்களின் விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவு நல்க வேண்டும். அரசாங்க ஊழியர்களுக்கு முடிந்தளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்துறையைப் போன்று தனியார்துறையும் ஊக்குவிக்கப்பட வேண்டியது மாத்திரமன்றி, தனியார்துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுவது அவசியம்.
இவையெல்லாம் ஐ.தே.கவின் பாரம்பரியக் கொள்கைகள் ஆகும். அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகளில் பெரும்பாலானவை ஐ.தே.க காலத்திலேயே வழங்கப்பட்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
இவ்வாறான வரலாற்று யதார்த்தத்தையும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் சமர்ப்பித்திருந்த 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தையும் சமாந்தரப்படுத்தியே நோக்க வேண்டியுள்ளது.
இன்றைய அரசாங்கத்தின் பங்காளியாக ஐ.தே.க உள்ள போதிலும், அக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே ஆட்சித்தலைவராக உள்ளாரென்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற போதிலும் அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியக்காரர், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற மக்கள் போன்றோரையெல்லாம் இந்த வரவுசெலவுத் திட்டம் நன்றாகவே பொருட்படுத்தியிருக்கின்றது. அதுமாத்திரமன்றி தனியார்துறை, கல்வி, வர்த்தகம் போன்ற துறைகளுக்கும் ஜனாதிபதி கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பதைக் காண முடிகின்றது.
பொருளாதார நெருக்கடியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்து ஜனாதிபதி காண்பித்திருக்கின்ற விசேட அக்கறை குறித்து பாராட்டாமலிருக்க முடியாது.
அதேவேளை அரச ஊழியர்களுக்கும் இந்த விடயத்தில் தார்மிகப் பொறுப்பு உள்ளது. பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வென்பது இன்றைய பொருளாதார நெருக்கடி வேளையில் சாதாரண விடயமல்ல. ஆகவே அரச ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை மேலும் வினைத்திறனுடன் ஆற்ற வேண்டுமென்பதே இங்கு எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாகும்.