இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், கைரானகம வித்தியாலயத்துக்கு இசைக் கருவிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது. பாடசாலையின் நாடக ஆசிரியர் புத்திமா அபேசிங்கவின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நன்கொடையை வழங்கியிருந்தது. நாடகப் பாடத்தை அறிமுகம் செய்வதில் அபேசிங்க ஆசிரியரின் அர்ப்பணிப்பினூடாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடத் தெரிவுகள் விஸ்தரிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.
2016ஆம் ஆண்டில் பாடசாலையில் அவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பாடசாலையில் கலை தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட பாடத் தெரிவுகள் நிலவுவதை அவதானித்திருந்தார். பல சவால்களுக்கு மத்தியிலும், மாணவர்களுக்காக நாடகப் பாடத்தை அறிமுகம் செய்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இவரின் அயராத முயற்சி, அணியினரின் ஆதரவுடன் கைரானகம வித்தியாலயத்தின் இளம் திறமைசாலிகளுக்கு பல்வேறு கௌரவிப்புகளை பெற்றுக் கொடுக்க முடிந்திருந்தது. சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை போன்ற விருதுகளை பிராந்திய மற்றும் மாவட்ட போட்டிகளில் வெற்றியீட்ட முடிந்தது.