மாஸ், -இஸ்ரேலியப் போர் முடிவை நோக்கி நகர்வதாக தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய போர் முடிவடைவது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் துயரத்தை மீண்டும் ஒரு தடவை நெருக்கடிக்கு உள்ளாக்கிதை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. தேசிய இனம் ஒன்றின் விடுதலைக்கு ஹமாஸின் அணுகுமுறை சரியானதா என்பதற்கு அப்பால் மீண்டும் ஒரு அழிவையும் துயரத்தையும் பாலஸ்தீன மக்களுக்கு உலக அரசியல் தந்துள்ளது. 1948ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இரு நாட்டுத்தீர்வுத் திட்டம் பற்றிய உரையாடல் மீளவும் முன்வைக்கப்படுவதோடு இரு இனங்களுக்குமான அரசியல் தீர்வு கைவிடப்படுவதாகவே தெரிகிறது. தற்போது ஹமாஸ் அமைப்பினை அழிப்பதோடு காஸாவை இஸ்ரேலின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதும் அதன் பாதுகாப்பினை தமக்குரியதாக மாற்றுவதுமே இஸ்ரேலின் உத்தியாக தெரிகிறது. ஆனால் போர் முடிந்ததாகவும் அதில் இஸ்ரேல் வெற்றியை எட்டியுள்ளதாகவும் பிரசாரம் செய்யப்படுகிறது. உளவியல் ரீதியில் போர் முடிவடைந்துள்ளதாக ஊடகங்கள் விதந்துரைக்கின்றன. இக்கட்டுரையும் ஹமாஸ், -இஸ்ரேலியப் போரின் நிலையை தேடுவதாக அமையவுள்ளது.
ஹமாஸ், -இஸ்ரேலியப் போர் காஸாவின் வடக்குப் பகுதியை அழித்தொழித்துவிட்டு தற்போது கிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் மேற்குக்கரை பிரதான போர்க்களமாக மாறியுள்ளது. மேற்குலகத்தின் பாதுகாப்புடன் இஸ்ரேல் முழுமையான போரை பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொண்டுவருகிறது. காஸாவுக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்த போது அதிக பாதிப்பினை ஏற்படுத்த தொடங்கிய ஹமாஸ் அமைப்பும் அதன் பதுங்கு குழிகளும் இஸ்ரேலிய உத்திகளால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் அதிகம் உள்ளது. இரசாயனக் குண்டுகள், ரோபோக்கள், மோப்ப நாய்கள் என தொடராக பல உத்திகளை இஸ்ரேல் பயன்படுத்திவருகிறது. இவை அனைத்தும் வெளிப்படுத்தும் செய்தி இஸ்ரேல் எதிர்பார்த்தது போன்று காஸாவை முழுமையாகக் கைப்பற்றுவதும் அதனை இஸ்ரேலிய பிரதேசமாக மாற்றுவதும் இலகுவான விடயமாக தென்படவில்லை என்றே தெரிகிறது. ஆனாலும் போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துவருகிறது. இத்தகைய உளவியல் போரை உலகளாவிய மட்டத்தில் முதன்மைப்படுத்தும் இஸ்ரேல், எகிப்தின் சினாய் பகுதியை நோக்கி பாலஸ்தீன மக்களை நகர்த்துகிறது. பதினோராயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காஸாவை விட்டு பாலஸ்தீன மக்களை வெளியேற்ற இஸ்ரேல் முயலுகிறது.
இதேநேரம் காஸா நகரில் குவிந்துள்ள மக்களையும் ஹமாஸ் தரப்பினரையும் வேறுபடுத்தும் நடவடிக்கையில் இஸ்ரேலிய,- அமெரிக்க கூட்டு திட்டமிட்டு வருகிறது. அதற்கான போர் நிறுத்தம் ஒன்றினை அறிவித்துள்ளது. 09.11.2023 முதல் தினமும் 4 மணி நேரம் வடக்கு காஸாவிலிருந்து தெற்கு காஸாவுக்கு மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏறக்குறைய இந்த போரை நிகழ்த்தும் அமெரிக்கா, தெளிவான திட்டத்தோடு போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதாவது வடக்கு காஸாவை முழுமையாக கைப்பற்றுவது மற்றும் அப்பகுதியிலிருந்து பாலஸ்தீன மக்களை முற்றாக வெளியேற்றுவது என்ற இலக்கோடு இத்தகைய போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இது ஹமாஸ் அமைப்பினரை பொது மக்களிடமிருந்து வேறுபடுத்தவும் தனிமைப்படுத்தவும் போரை இலகுபடுத்தவும் உதவியாக அமையும் என்ற எதிர்பார்க்கையுடன் இரு நாடுகளின் கூட்டுத் திட்டமும் அமைந்துள்ளது. இதன் விளைவுகள் காஸா நகரத்தை மையப்படுத்தியுள்ள ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதுடன் வடக்கு காஸாவை முழுமையாக இஸ்ரேலிய கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதாகும். வடக்கு காஸா பகுதிக்குள்ளாலேயே இஸ்ரேல் நோக்கிய தாக்குதலை ஹமாஸ் நிகழ்த்தியதாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரவும், அந்த பிரதேசத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், அதன் பாதுகாப்பை தமது எல்லைக்குள் வைத்திருப்பதன் மூலம் தொடரான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியுமென இஸ்ரேல்- அமெரிக்க கூட்டு கருதுகிறது. அதற்கு அமைவாகவே போர் நிறுத்தம் எனும் உத்தியை இஸ்ரேல்- அமெரிக்க கூட்டு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, எகிப்தின் சினாய் பகுதியை நோக்கி பொது மக்களை நகர்த்த திட்டமிட்ட இரு தரப்பின் கூட்டு முயற்சி நெருக்கடிக்கு உள்ளாக தற்போது தெற்கு காஸாவை நோக்கி மக்களை நகர்த்துவதில் கவனம் செலுத்திவருகின்றன. இது பாலஸ்தீனர்கள் முழுமையாக காஸாவை இழப்பதற்கான நகர்வாகவே திட்டமிடப்படுகிறது. இது மறைந்து பதுங்கு குழிகளில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை வெளியே கொண்டுவருவதற்கான உத்தியாகவும் அமைந்துள்ளது. காரணம் ஹமாஸ் தரப்பினர் கொரில்லா போர் முறையினை தேர்ந்தெடுத்திருப்பதனால் இலகுவில் அவர்களை வெற்றி கொள்வது கடிமாகவே உள்ளது எனத் தெரிகிறது அதற்கான போர்நிறுத்தமே தற்போது இஸ்ரேல் அறிவித்துள்ள நகர்வு. இஸ்ரேல்- அமெரிக்கத் தரப்பு இரு பிரதான விடயங்களில் கவனம் கொண்டுள்ளது. ஒன்று, காஸாவின் பாதுகாப்பினை முழுமையாக இஸ்ரேலியத் தரப்பிடம் ஒப்படைப்பது. இரண்டாவது, ஹமாஸ் அமைப்பினரை பதுங்கு குழிகளிலிருந்து வெளியே கொண்டுவருவது. இதற்கான நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தும் விடயமே நான்கு மணிநேர போர் நிறுத்தமாகும்.
இதனால் பிணைக்கைதிகள் விடயத்தை கையாள இஸ்ரேல்-, அமெரிக்கத் தரப்பு முயல்வதாகவும் தெரிகிறது. காரணம் 35 நாட்களுக்கு மேலாக பிணைக் கைதிகளை மீட்கவோ அவர்கள் இருக்கும் இடத்தை அணுகவோ முடியவில்லை என்பது போரியல் வரலாற்றில் இஸ்ரேலியர்களது தோல்வியாகவே தெரிகிறது.
ஆனால் எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டும் இஸ்ரேல், ஹமாஸ் தரப்பு கைது செய்துள்ள பிணைக்கைதிகளை இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பது அதிக குழப்பத்தை இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பு அதனை போர்உத்தியாகவே பிரயோகித்து வருகிறது. இஸ்ரேலிய புலனாய்வுக்கும், இராணுவத்திற்கும் பாரிய நெருக்கடியாகவும் அவமானகரமானதாகவும் அமைந்துள்ளது. யூதர்களது இருப்பானது இராணுவத்தினது புலனாய்விலேயே தங்கியுள்ளது என்பது முக்கியமானது. அதனை இஸ்ரேல் தற்போது இழந்துள்ளதாகவே தெரிகிறது. இதனை மறைக்கவும் கையாளவுமே பாரிய இராணுவ தாக்குதலை அப்பாவி மக்கள் மீதும், சிறிய ஆயதங்களோடு செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் மீதும் மேற்கொண்டது. தற்போதும் அத்தகைய பிணைக் கைதிகள் விவகாரம் இலகுவானதாக அமையவில்லை என்பதும் கவனத்திற்குரியதாகும். இத்தகைய பிணைக்கைதிகள் விவகாரம் ஹமாஸ், -இஸ்ரேலிய போரை நீடிப்பதற்கான வாய்ப்பினை கொண்டுள்ளதாக தெரிகிறது.
இப்போர் காஸாவை கடந்து நகர முடியாதுள்ளது. ஹமாஸ் வகுத்துள்ள உத்தி என்பதை விட அமெரிக்க -இஸ்ரேலிய அணுகுமுறையும் அதுவாகவே உள்ளது. குறிப்பாக ஏனைய நாடுகள் இஸ்ரேலை தாக்காது பாதுகாக்கும் விடயத்தில் அமெரிக்கா கவனமாக செயல்படுகிறது. தற்போது ஹிஸ்புல்லா போன்ற அமைப்புக்களும் தாக்குதலை மேற்கொள்ளா திருக்க அமெரிக்கா தொடர்ச்சியான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறே ஈரான் விடயத்திலும் அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை செய்து வருகிறது. இதுவே பிராந்திய போராகவோ உலகளாவிய போராகவோ நகர முடியாதுள்ளதற்கு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மட்டுப்படுத்தப்பட்டதும் நாடுகளுக்கிடையிலான போர்களையே அதிகம் உருவாக்குவதில் கவனம் கொள்கிறது. அத்தகைய போர்கள் அமெரிக்கா உட்பட்ட மேற்கின் நலன்களுக்கு சாதகமானதாகவே உள்ளதென்பது தெரிகிறது. தாய்வானில் புதிய போர்க்களத்தை திறக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு அமைவாக தாய்வானுடன் இராணுவ ஆயுத தளபாடங்களை வழங்கும் உடன்பாட்டில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளமை கவனத்திற்கு உரியதாகும். அவ்வாறாயின் போர்க்களங்களால் அமெரிக்காவின் நலன்கள் பாதுகாக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இப்போர், ஹமாஸ் அமைப்புக்கும் பலஸ்தீன மக்களுக்கும் மட்டும் தோல்வியல்ல. முழு அரபு நாடுகளுக்கும் தோல்வியாகவே உள்ளது. காரணம் ஹமாஸ் அமைப்பு ஏற்படுத்திய வாய்ப்பினை அரபு நாடுகள் சரிவர பயன்படுத்த முடியாத நிலையை, அரபு நாடுகளின் பகைமையும், முரண்பாடும் தந்துள்ளதாகவே தெரிகிறது. இஸ்ரேலை தோற்கடிக்க முடியா விட்டாலும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்க வாய்ப்புக் கிடைத்தது. அதனை சரிவர அரபு நாடுகள் கையாளவில்லை. பாகிஸ்தானிடமுள்ள அணுவாயுதமே அராபியர்களது பலமாகும். அதனைக்கூட வைத்துக் கொண்டு அரபு உலகம் செயற்படவில்லை. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து கொண்டு அராபியர்களை மட்டுமல்ல முழு உலகத்தையும் கையாண்டுவருகின்றன. இதுவே மேற்குலகத்திற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடாகும். போர் என்பதன் முன் கருத்தியலையும் சித்தாந்தங்களையும் சர்வதேச விதிகளையும் கைவிட்டுவிடும் மேற்குலகம் போரை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து விடும். போரை எப்படி வெல்வதென்பதே மேற்குலகத்தின் நோக்கமாக மட்டுமே காணப்படுகிறது.
எனவே ஹமாஸ், -இஸ்ரேலிய போர் மேற்குலக ஊடகங்கள் கூறுவது போரில் முடிவுக்கு வந்துவிட்டதாக கொள்ளலாமா என்பது கேள்விக்குரியதாகும். பிணைக்கைதிகள் மீட்கப்படும் வரை போர் ஹமாஸ் தரப்பிடமே அதிகமாக காணப்பட வாய்ப்புள்ளது. இது இஸ்ரேலிய புலனாய்வுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். ஆனால், இப்போர் இஸ்ரேலியர்களுக்கு அதிக வாய்ப்புக்களை தந்தது போல், அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்திற்கும் அதிக இலாபகரமான போராக மாறியுள்ளது. மேற்குலகத்தின் பலவீனங்கள் முழுவதும் திசைதிருப்பப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யப் போரில் இழந்தவற்றை மேற்குலகம் சரி செய்துள்ளது. அமெரிக்க அணுகுமுறைகள் அனைத்தும் இஸ்ரேலுடனான கூட்டுத்தாக்குதலாகவே உள்ளது.