உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. சம்பியன் அணியை தேர்வு செய்வதற்கு இன்னும் மூன்று போட்டிகள் தான் எஞ்சியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி மும்பை, வாங்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருப்பதோடு அடுத்த நாளான நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும். அந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறப்போகிறது.
நவம்பர் 19 ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறப்போகும் இறுதிப் போட்டியில் சம்பியனாகப்போவது இந்த நான்கில் ஒன்றுதான். இந்தியா, அவுஸ்திரேலியா தவிர்த்து நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு உலகக் கிண்ணத்தை முதல் முறை வெல்ல மற்றொரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் இந்திய துணைக்கண்ட நாடுகளுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலவீனமாக இருந்ததோடு பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதனால் அவை அரையிறுதிக்கு முன்னேறாதது பெரிய ஆச்சரியமான ஒன்று அல்ல.
என்றாலும் நடப்புச் சம்பியன் இங்கிலாந்தின் ஆட்டம் ஆச்சரியத்தைத் தந்தது. அடுத்தடுத்த தோல்விகள், துடுப்பாட்டம், பந்துவீச்சு என்று எல்லாவற்றிலும் தடுமாற்றம் கண்டது.
எதிர்பாராத வகையில் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நெதர்லாந்து அணி தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தியதே பெரிய சாதனை. எனவே, நெதர்லாந்து கிரிக்கெட்டின் ஒரு படி முன்னேற்றம் என்று கூட இந்த உலகக் கிண்ணத்தை குறிப்பிடலாம்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த ஆரம்ப சுற்றுப் போட்டிகள் எதிர்பார்த்த அளவு பரபரப்புக் காட்டவில்லை. அணிக்கு அணி திறமையில் இருந்து ஏற்றத்தாழ்வு கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆட்டங்கள் ஒரு பக்க போட்டிகளாகவே இருந்தன. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே வெற்றி அணியை கணிக்க முடியுமாகவே இருந்தன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மெக்ஸ்வெல் இரட்டைச்சதம் அடித்து அவுஸ்திரேலியாவை மீட்ட போட்டியில் கூட ஒரு கட்டத்தில் மெக்ஸ்வெல்லின் துடுப்பாட்டம் அழுத்துப் போகும் அளவுக்கு இருந்தது. அதனைக் கூட முழுமையான பரபரப்பான ஆட்டமாக குறிப்பிட முடியவில்லை.
இதனால் உலகக் கிண்ணம் ஆரம்பித்து ரவுன்ட் ரொபின் சுற்றின் பாதியிலேயே அரையிறுதிக்கு முன்னேறும் குறைந்தது இரண்டு அணிகளை கணிக்க முடியுமாக இருந்தது. அதிலும் இந்திய அணியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் இலகுவாக வெற்றிகளை குறித்தது.
நியூசிலாந்து அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்ற பின்னர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தபோதும் அது அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு பொருத்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தென்னாபிக்க அணி நெதர்லாந்திடம் தோற்றாலும் அது அநாயாசமான 300 ஓட்டங்களை தாண்டும் அளவுக்கு பலமான துடுப்பாட்டத்தையும், கச்சிதமான பந்துவீச்சையும் கொண்டிருந்ததால் முதல் ஓரிரு போட்டிகளிலேயே அரையிறுதிக்கு முன்னேறுவதை கணிக்க முடிந்தது.
மறுபுறம் அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்டபோதும் எதிரணிகளின் பலவீனம் அந்த அணியின் அரையிறுதியை இலகுவாக்கியது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஆஸியை வீழ்த்த வாய்ப்பு அதிகம் இருந்தபோதும் அதனை தவறவிட்டன.
எதிர்பார்க்கப்பட்ட பொருத்தமான அணிகளே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. எனவே, எதிர்வரும் மூன்று போட்டிகலேனும் எதிர்பாராத பரபரப்புகளை தந்தால் நல்லது.