பூக்கள் மலர்வதைப் போலவே
புதுக் காலையும் புலரட்டும்
எந்நாளும் உனக்கு
இதயமும்
இன்பங்கள் நிறைந்தே
விரியட்டும்
பணிவும் பக்குவமும்
படைத்தவனின்
பெருங் கொடையாய்
உன்னில்
போர்வை போர்த்தி
பெருமிதமடையட்டும்
பெறுமதியும் தந்திடட்டும்
சோக மூட்டைகளை
தினந்தினம்
சுமக்க விரும்பாதே
ஒரு கழுதை போல
அடுத்தவரை ஆழம் பார்த்து
ஆனந்தம் அழித்து
உள்ளுக்குள் புழுங்கி
உவகை நொறுக்கியுழலும்
ஓயாத மனக்கவலையையும்
உனக்குள் இருத்திக்கொள்ளாதே
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற
வேட்கையோடும்
புன்னகைப் பரிமாறல்களோடும்
எதிரியையும் கூட
மகிழ்வோடு கடந்திடு
ஒவ்வொரு கணத்துளியையும்
கலகலப்பாய்க் கழி
சந்தோசம் உன் வாழ்வெங்கும்
இறக்கைகள் விரிக்கட்டும்
விதியை நொந்துவிழுந்திடாது
சதிகள் கண்டுகதிகலங்கிடாது
உன் நாழிகைகளை
நலவை நோக்கியே
நகர்த்திச் செல்
நல்லெண்ணம் கொண்டு
நல்லவை செய்வதே
உள்ளத்தின் நோக்கமாக்கி
உயரத்தில் நில்
வாசம் வீசும்
வண்ண மலராய் இரு
நாசம் செய்திடவும்
மோசம் செய்திடவும்
முயற்சிகள் செய்திடாதே
அடுத்தவரை உயர்த்தி விடும்
ஏணியாகவே
இருந்துவிட்டுப் போ
முண்டியடித்து
முந்திக் கொண்டு
தள்ளிவிட்டு தாவிச்
செல்பவர்களுக்கு
தள்ளி நின்று
வழி விடு
உனக்கான இடம்
உனக்காகவென்றே
தனித்துவமாய்க்
காத்துக் கிடக்கிறது.
ஒரு வானம்பாடியாய்..
ஒரு வண்ணத்துப்பூச்சியாய்..
ஏன்
ஒருபுற்றீசலாய்
இருந்தாலும் கூட
வாழ்வினை இரசித்து
இன்பம் காண்.
வாழ்க்கை
சுவாரசியமாய் தெரியும்
மகிழ்ச்சி என்பது
மற்றவர்களிடமில்லை
மனதுக்குள் தான்
மறைந்து கிடக்கிறது
வாழ்க்கை வாழ்வதற்கே
432
previous post