“தீப ஒளியில் இருள் விலகுவது போல், உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்திருக்கட்டும். அத்துடன், எமது மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் என்று இந்த உன்னதமான நாளில் அழைப்பு விடுக்கின்றேன்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதாகவும், அவர் தெரிவித்தார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வரும் சூழ்நிலையிலேயே இம்முறை தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகின்றோம். எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள இருள் அகன்று, நாட்டுக்கும் மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இதுவாகும். ஒற்றுமை, ஐக்கியம் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் தீபாவளிப் பண்டிகை உணர்த்துகின்றது. ஆகவே, எமது மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் ஒன்றுபடுவோம் என்று இந்த உன்னதமான நாளில் அழைப்பு விடுக்கின்றேன்.
மேலும், எதைச் செய்தாலும், பாதுகாப்பு மிக முக்கியமானதென்பதுடன், மிகவும் பாதுகாப்பான முறையில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவோம். இல்லாதவர்களுக்கு எம்மிடம் உள்ளதை கொடுத்து, அவர்களை மகிழ்விப்போம். நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும். மகிழ்ச்சியான இந்த நாளில் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தீபாவளி நல்வாழ்த்தை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.