“தீபாவளிப் பண்டிகையின் உண்மையான அர்த்தத்தை நாம் மனதில் கொண்டால், பொதுநலனுக்காக நாம் ஒன்றிணைந்து இந்த சவாலான காலகட்டத்தை வெற்றி கொள்ள முடியும். அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, பொது உணர்வுடன் செயற்பட வேண்டியதொரு காலகட்டத்தை நாம் இன்று அடைந்துள்ளோம்” என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் முழு உலகிலும் தீமை எனும் அந்தகாரத்தை அகற்றி, நன்மை எனும் ஒளியை பரவச் செய்யும் உயர்ந்த நோக்குடனும் மிகுந்த பக்திப் பரவசத்துடனும் தீபங்களை ஏற்றி, தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர்.
ஆன்மிக இருளுக்கு எதிராக ஞான ஒளி, தீமைக்கு எதிராக நன்மை, அறியாமைக்கு எதிராக அறிவை வெற்றி கொள்வதைக் குறிக்கும் தீபத் திருநாள் தீபாவளியை அர்த்தப்படுத்தும் வகையில் பொது ஆன்மிக வெற்றிக்காக இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதி பூணுவோம்” எனத் தெரிவித்தார்.