தற்போது காஸா, இஸ்ரேல் யுத்தம் மிகக் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களால் அடக்கஸ்தலங்கள் உருவாக்கப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்த நிலையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் நிலவிய ஏகாதிபத்தியப் படையெடுப்பு மீண்டும் தலைதூக்கியதாகவே இதனை நான் பார்க்கிறேன். இந்த யுத்தத்துக்கு ஏகாதிபத்தியவாதிகளே முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் மூன்றாம் உலக நாடுகளின் அனைத்து வளங்களையும் அபகரித்து சொத்துக்களை சுரண்டி வல்லமை பெற்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏகாதிபத்திய படையெடுப்புக்கு இடமில்லை என்பது உறுதியானதையடுத்து தமது சொந்த நாட்டிலிருந்த ஹிட்லரின் துன்புறுத்தல்களுக்குள்ளான யூதர்கள் தமக்கு பல வருடங்களுக்கு முன்னர் தமக்கு உரிமையாக இருந்ததாகக் கூறப்படும் இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பலவந்தமாக பலஸ்தீனர்களை விரட்டும் திட்டத்தை ஆரம்பித்தனர். இது சியோனிச எண்ணக்கருவை தமது பயன்பாட்டிற்கு எடுப்பதாகும். இது ஒரு மனிதாபிமானமற்ற செயற்பாடாகும்.
இதற்கு இன்னமும் சர்வதேசத்தின் ஊடான மனிதாபிமான தலையீட்டைக் காண முடியவில்லையே?
தற்போது வரைக்கும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். இதில் அரைவாசிப் பேர் சிறுவர்களாவர். ஐக்கிய நாடுகள் சபையில் யுத்த நிறுத்தத்தைக் கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கும் எதிராகச் செயற்பட்ட வெட்கமில்லாதவர்கள் அவர்கள். எனவே ஏனைய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் பாடம் கற்பிப்பதற்கு அவ்வாறானவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. இது ஒரு மனித இன அழிப்பாகும். எனவே இந்த யுத்தத்திற்கு ஏகாதிபத்தியவாதிகளும் பொறுப்புக் கூற வேண்டும். யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவை வழங்காத பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
இந்த நெருக்கடியானது சர்வதேசப் பொருளாதாரத்திலும் இலங்கையின் பொருளாதாரத்திலும் செலுத்தும் தாக்கத்தை விபரித்தால்?
நிச்சயமாக தாக்கங்கள் ஏற்படக் கூடும். இந்த நிலை எமது எரிசக்தி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனிடையே பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக எமது நாட்டுத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகத் தெரியவருகின்றது. இது இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகும். மறுபுறத்தில் இந்த விவசாய பண்ணைகளில் இருந்த பலஸ்தீனர்களுக்கு இன்று வாழ்வதற்கு வழிகள் இல்லை. இதன் மூலம் மேலும் மோதல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். 20 வருடங்களாகத் திறந்த சிறைகூடமாகவே காஸா இருந்து வருகின்றது. அன்று அந்த மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கவனிக்கப்பட்டதன் ஊடாக வன்முறையில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றானது. இந்த வன்முறை, குரோதம், வெறுப்புக்களை ஏற்படுத்துவது ஏகாதிபத்தியவாதிகளாகும். இரண்டு சமத்துவமற்ற சக்திகளுக்கிடையிலான யுத்தத்தில் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் பின்னால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே உள்ளன. அவர்கள் தமது வீட்டோ அதிகாரத்தை ஐக்கிய நாடுகளின் பிரேரணைக்கு எதிராகப் பயன்படுத்தியதே இந்த மனித இனப் படுகொலை இந்தளவுக்கு மிக மோசமாக இடம்பெறக் காரணமாகியது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னால் இருப்பது முஸ்லிம் அடிப்படைவாதிகள் அல்ல, இஸ்ரேல் தீவிரவாதிகளே என நீங்கள் இதற்கு முன்னர் கூறினீர்கள். எப்படி அவ்வாறு கூறுகின்றீர்கள்?
நான் முன்னர் கூறிய ஒரு விடயத்தை மீளப் பெற மாட்டேன். நான் அவற்றைச் சாட்சியங்களுடன்தான் கூறினேன். கண்டிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. சில புலனாய்வு பிரிவுகள் இணைந்து இந்நாட்டின் கத்தோலிக்க மக்களையும், முஸ்லிம் மக்களையும் பிரிப்பதற்குச் செய்த பாரிய மனிதப் படுகொலை அது. இதற்கு இஸ்ரேல் ஒத்துழைப்பு வழங்கியதற்கு சாட்சி உள்ளது. சஹ்ரானுடன் தொடர்புகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இதனை ஜனாதிபதி ஆணைக்குழுதான் எழுதியிருக்கின்றது. எல்லோரும் இதனைத் மறைக்கவே பார்க்கின்றார்கள். இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாகும்.
தற்போதைய ஜனாதிபதி நாட்டை வீழ்ந்த இடத்திலிருந்து கட்டியெழுப்புவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறாரே?
இன்னும் நாம் எழுந்து மேலே வரவில்லையே. கடன் மறுசீரமைப்பு, கடன் வழங்கிய நாடுகள், தனியார் கடன் வழங்கல் போன்ற நடவடிக்கைகள் இன்னும் நடக்கவில்லை. இவை இன்னமும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. 2021ஆம் ஆண்டில்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு சென்றிருந்தால் பிரச்சினை தோன்றியிருக்காது. 2021 நவம்பர் மாதத்தில் நாம் தொடர்ந்தும் இதைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசினோம். நாம் தொடர்ந்தும் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ராலிடம் இதைப் பற்றிக் கூறினோம். அவர்கள் அன்று என்னைக் கேலி செய்தார்கள். அப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றார்கள். தற்பெருமை காட்டினார்கள். இன்று என்ன நடந்தது?
நீங்கள் அவ்வாறு கூறினாலும் பணவீக்கத்தில் பாரிய வீழ்ச்சியைக் காண முடிகிறதே?
பணவீக்கம் குறைந்த போதிலும் பொருட்களில் விலை அதிகரிக்கின்றது. எவ்வாறு அப்படிச் சொல்ல முடியும்? அன்று 500 ரூபாவுக்கு வாங்கிய பொருளை இன்று அந்த விலைக்கு வாங்க முடியுமா? அதற்கிடையில் மீண்டும் சீனி இறக்குமதியில் வரி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 ரூபாவினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரியளவிலான வர்த்தகர்கள் சிலர் முறையற்ற வகையில் இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவை வெட்டவெளியில் நடகின்றது. அதனைச் செய்து தமது பொக்கற்றுகளை நிரப்பிக் கொள்கிறார்கள்.
கிரிக்கெட்டில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் எந்த இடத்தில் நிற்கிறது?
ஐயோ அது திருட்டுக் குகையாச்சே. தொடர்ந்தும் ஒரே தரப்பினர் இருக்கக்கூடிய வகையில்தான் அதன் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றச் சட்டத்தின் ஊடாக இந்நாட்டின் கிரிக்கெட் நிர்வகிக்கப்பட வேண்டும். கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அரசியல் தலையீடு தேவையில்லை.
துறைசார்ந்தவர்கள், தொழிற்துறையினர்கள் குழுவின் பிரதிநிதிகளின் ஊடாகவே இது நிர்வகிக்கப்பட வேண்டும். நாம் இதற்கான சட்டம் ஒன்றை கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். தற்போதிருக்கும் நிர்வாகம் கலைக்கப்பட வேண்டும். அனைவரும் முழு உலகமும் பேசும் இந்த விளையாட்டை படுகுழிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றார்கள். எம்மிடம் 24க்கும் அதிகமான கிரிக்கட் கழகங்கள் இருக்கின்றன. 12 கழகங்களுக்கு அதிகமாக இருப்பது தேவையற்றது. அவுஸ்திரேலியாவில் 8 கழகங்களே உள்ளன. இங்கிலாந்தில் 18 கழகங்கள் இருக்கின்றன. எனினும் இலங்கையில் 24 கழகங்கள் இருக்கின்றன. இந்த கிரிக்கெட் கழகங்களுக்கிடையில் போட்டித்தன்மை இல்லை.
அரசாங்கத்துடன் இணைவதற்கு முஸ்லிம் காங்கிரஸூக்கு அழைப்பு கிடைக்கவில்லையா?
இணைவதற்கு எதற்கு அழைப்பு?
நாம் இணைந்திருக்கலாம். தேர்தலை நடத்துங்கள் என்றே நாம் கூறுகின்றோம்.
அடுத்த வருடம் தேர்தல் வருடமாகும். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?
தேர்தலை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டும். இன்று அரசாங்கம் பயணிப்பது மக்கள் ஆணையும் இல்லாமலாகும். நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன்தான் தற்போது இருக்கின்றோம். தேர்தலுக்குச் செல்லும் போது வெற்றி பெறுவதற்கு ஒரு கூட்டணியாக ஒன்றுபட வேண்டும். அனைத்துக்கும் முன்னர் முதலில் எந்த தேர்தல் நடக்க உள்ளது என்பது தெரிய வேண்டும். அன்று இணைவதற்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. தற்போதும் அதில் சில சவால்கள் இருப்பது தெரிகிறது.
புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அது நல்ல விடயம்.
ஆங்காங்கே முஸ்லிம் அடிப்படைவாதிகள் தோன்றுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற வகையில் நீங்கள் அதற்காக எவ்வாறான யோசனைகளை முன்வைக்கப் போகிறீர்கள்?
நாம் அவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கின்றோம். அடிப்படைவாத கதைகளைப் பிரசாரப் படுத்துவது திருட்டுக் கூட்டமாகும். அதன் ஊடாக தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துகின்றார்கள். நாம் ஓரளவுக்குத் தலைதூக்கி இருப்பது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால்தானே. இவ்வாறு செய்யப்படும் விளம்பரங்கள் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை நிறுத்தி விடும்.
சுபாஷினி ஜயரத்ன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்