Home » லலித் கொத்தலாவலவின் மரணத்தில் மறைந்துள்ள இரகசியங்கள்

லலித் கொத்தலாவலவின் மரணத்தில் மறைந்துள்ள இரகசியங்கள்

வெடித்துக் கிளம்பும் புதிய சர்ச்சை

by Damith Pushpika
November 12, 2023 6:59 am 0 comment

செலிங்கோ கூட்டு நிறுவனத்தின் அதிபதி லலித் கொத்தலாவல கடந்த ஒக்டோபர் மாதம் 21ம் திகதி லங்கா ஹொஸ்பிட்டலில் மரணமானார். மரணிக்கும் போது 84 வயதைக் கடந்திருந்த கொத்தலாவலவின் மரணம் சந்தேகத்திற்கிடமானது எனக் கூறி அவரது மனைவி சிசிலியா கொத்தலாவலவின் சகோதரியான ஷெரின் பெர்னாண்டோ விஜேரத்ன (84) என்பரால் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு காரணமாக பொலிஸார் கொழும்பு பிரதான நிதவான் பிரசன்ன அல்விஸூக்கு விடயங்களைச் சமர்ப்பித்தனர். பின்னர் பிரதான நீதவான் லங்கா ஹொஸ்பிட்டலுக்குச் சென்று மரணித்தவரின் சடலத்தைப் பரிசோதனை செய்து விட்டு பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தவிட்டார்.

தனது மைத்துனரான லலித் கொத்தலாவலவின் மரணம் நிகழ்ந்த காலகட்டத்தில் அவர் தனது சகோதரியான சிசிலியா கொத்தலாவலவிடமிருந்து பிரிந்திருந்ததால் அவரது மரணம் நிகழ்ந்த முறையினை அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகக் குறிப்பிட்டு ஷெரின் விஜேரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

லலித் கொத்தலாவலவின் சடலத்தைப் பொறுப்பேற்க சிசிலியா கொத்தலாவல மறுத்ததாகவும், சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக சிசிலியா கொத்தலாவலவின் சகோதரியான ஷெரின் விஜேரத்ன விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதோடு, இதனடிப்படையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு ஷெரின் விஜேரத்னவிடம் ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொத்தலாவலவின் மரண விசாரணையின் சாட்சியங்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, ஏழு சாட்சியாளர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்த நீதிமன்றம் மரணத்துடன் தொடர்புடை தீர்ப்பை வரும் 14ம் திகதி வழங்குவதற்குத் தீர்மானித்தது. இது அந்த மரண விசாரணையின் போது சாட்சியாளர்கள் வழங்கிய சாட்சியங்களாகும்.

“லலித் கொத்தலாவலவின் மரணம் இயற்கையான நிலைமையில் கீழ் இடம்பெறவில்லை. பல நபர்களின் தவறான செயற்பாடுகள் காரணமாக இடம்பெற்ற மரணமாகும். எதையும் தங்களுக்குச் சாதகமாகச் செய்யும் வாய்ப்புகள் அவர்களுக்கு உண்டு. எனவே, இந்த மரணம் இயற்கையானது அல்ல என்று நான் நம்புகிறேன். அவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்து கொண்டதன்பின், கொத்தலாவல உயிருடன் இருக்கக் கூடாது என அவர்கள் நினைத்திருக்க வேண்டும்” என சிசிலியா கொத்தலாவலவின் சகோதரி ஷெரீன் பெர்னாண்டோ விஜேரத்ன கடந்த 06 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசிங்க முன்னிலையில் பிரேத பரிசோதனை சாட்சியங்களை வழங்கும் போது தெரிவித்தார்.

லலித் கொத்தலாவலவின் பிரேத பரிசோதனை சாட்சியத்தில் இரண்டாவது சாட்சியாக ஷெரின் பெர்னாண்டோ விஜேரத்ன ஆங்கிலத்தில் தனது சாட்சியத்தை வழங்கியதோடு நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். மனுதாரர் சார்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இருதய நோய் காரணமாக தனது மைத்துனருக்கு ‘பேஸ் மேக்கர்’ இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக அவரது மரண சாட்சியத்தின் போது சட்ட வைத்திய அதிகாரி தன்னிடம் கூறியதோடு, அப்படியான இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது தனக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள எவருக்கோ தெரியாது எனவும் ஷெரீன் பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார்.

ஷெரீன் செஷன்ஸ் கிறிஸ்டோமல் பெர்னாண்டோ விஜேரத்ன தொடர்ந்து சாட்சியமளிக்கும் போது, தனது மைத்துனர் கடைசியாக கொழும்பு 04, டிக்மன் வீதி, இலக்கம் 13, உள்ள தனது அலுவலகத்தில் வசித்ததாகவும், அவர் ஓரிரு குழுக்களால் பிணைக் கைதியாக சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சாட்சியாளர் – அதற்கு முன்னர் அவர் வசித்தது இல. 28, எலிபேன்ங் வீதி, கொழும்பு 05 என்ற முகவரியில் அவரது மனைவி மற்றும் எனது சகோதரியான சிசிலியா கொத்தலாவலவுடனாகும். அவர் 2000ம் ஆண்டு வரைக்கும் அங்கு வசித்தார். அதன் பின்னர்தான் அவர் அவரது அலுவலகத்திற்குச் சென்றார்”.

மரணித்தவரைப் பற்றித் தேடிப் பார்க்க நீங்கள் போனீர்களா? என பொலிஸார் வினவ

சாட்சியாளர் – அவர் அவரது அலுவலகத்தில் இருந்த காலத்தில் எம்மோடு குறைவாகவே பேசுவார். அதற்கு முன்னர் எம்மோடு நிறையத் தொடர்புகள் இருந்தன. அவர் பிணைக்கைதியாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரைத் தடுத்து வைத்திருந்தவர்கள் அவரைப் பார்க்க வரும் குடும்பத்தர்கள், நண்பர்களைத் தடுத்தார்கள். மைத்துனரின் நலன்களைப் பார்ப்பதற்காகச் செல்லும் போது அவரைப் பிணையக் கைதியாகத் தடுத்து வைத்திருந்த குழுவின் நிரோஷா பிரியதர்ஷனி என்பரின் அனுமதியைப் பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றுக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றாலும் அவரோடு சுதந்திரமாகப் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவ்விடத்தில் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் இருப்பார். அவரோடு பேசுவதற்கு மிகக் குறைந்த நேரமே வழங்கப்படும் என்றார்.

– கொத்தலாவலவின் மரணம் தொடர்பில் யார் உங்களுக்கு அறிவித்தது? என பொலிஸார் வினவ

– ஒக்டோபர் 19ம் திகதி இரவு தினேஷ் ஜயவீர என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொத்தலாவலவை வைத்தியசாலையில் அனுமதித்திருப்பதாகக் கூறினார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் அப்போதுதான் அவர் தொலைபேசியில் என்னோடு பேசினார்.

நான் 20ம் திகதி காலை எனது மகளுடன் கொத்தலாவலவைப் பார்க்க வைத்தியசாலைக்குச் சென்றேன்.

அங்கு யார் இருந்தார்கள்? என வினவ

சாட்சியாளர் – நாம் வைத்தியசாலை அறைக்குள் சென்ற போது நிரோஷா என்ற பெண் பாதுகாவலருடன் அங்கிருந்தார். நாம் வருவதைக் கண்டதும் அவர் மறைந்து கொண்டார் என்றார்.

– அந்த நேரத்தில் நீங்கள் கொத்தலாவலவுடன் கதைத்தீர்களா ?

ஆம். வந்ததுக்கு நன்றி என அவர் கூறினார். அதே போன்று அவர் எம்மிடம் பாசமாக இருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அறையிலிருந்து வெளியில் வந்து நாம் அவ்விடத்திலிருந்த அதிகாரியிடம் கொத்தலாவலவின் உடல் நிலை தொடர்பில் கேட்டோம். உடம்பில் சோடியம் குறைந்துள்ளது.

அதனால்தான் அவர் அரைத் தூக்க நிலையில் உள்ளார் என்றார் அவர்.

நிரோஷா என்பவர்தான் கடைசி காலத்தில் கொத்தலாவலவுக்கு மருந்துகள் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்களையும் வழங்கினார். மருந்துகளை உரிய நேரத்திற்கு வழங்காவிட்டால் அவர் மரணிப்பார்.

சாட்சியாளரான மஹிந்த உபசேன கமகே (68) என்பவர் சாட்சியமளிக்கும் போது இவ்வாறு கூறினார்.

“நான் கொத்தலாவலவின் நிறுவனத்தில் இணைந்து 35 வருடங்கள் பணியாற்றினேன். பின்னர் மீண்டும் 2021ம் ஆண்டில் இணைந்து கொண்டேன். நான் நிர்வாக ஆலோசகராகவே செயற்பட்டேன்”.

அப்படித்தான் கடந்த ஒக்டோபர் 18ம் திகதி மாலை கொத்தலாவலவின் அலுவலகத்திலிருந்து சட்டத்தரணி என்னோடு தொடர்பு கொண்டு நமது தலைவருக்கு சுகமில்லை, வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறினார். அதன் பின்னர் நான் அவரது அலுவலக அறைக்குச் சென்றேன். கொத்தலாவல நடந்தே வந்தார். அப்படியே அவரது வாகனத்தில் ஏறி நாம் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். டாக்டர் உபாலி வேரகமவுக்கு சட்டத்தரணி தினேஷ் பேசிய போது மாலை 4 மணிக்கு வருமாறு கூறியிருந்தார்.

எனினும் கொத்தலாவல “எனக்கு இப்போதே போக வேண்டும். இருமல் ஏற்பட்டுள்ளது. இப்போதே போக வேண்டும்” எனக் கூறினார். எனவே நாம் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம்.

சிறிது நேரத்தின் பின்னர் டொக்டர் வந்து பரிசோதித்து விட்டு “மிஸ்டர் கொத்தலாவலவுக்கு ஒரு பிரச்சினையுமில்லை. சில பரிசோதனைகளைச் செய்வதற்காக ஒரு நாள் வைத்தியசாலையில் இருங்கள்” எனக் கூறினார்.

நான் அவருக்கு அருகில் நின்றிருந்ததால் டாக்டர் கூறியதைக் கேட்டேன்.

பின்னர் தினேஷ் வைத்தியசாலையின் மேல் மாடிக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து அந்த வைத்தியசாலை கொத்தலாவலவுக்குச் சரியானதாக இல்லை என்றும், வேறு ஆஸ்பத்திரிக்குச் செல்வோம் என்றும் கூறினார்.

அந்நேரத்திலிருந்து மூன்று நாட்கள் கொத்தலாவல அங்கிருந்து சிகிச்சை பெற்றார். பின்னர் 21ம் திகதி அதிகாலை தினேஷ் என்னோடு தொடர்பு கொண்டு கொத்தலாவல மரணித்துவிட்டதாகக் கூறினார்.

-இதனடிப்படையில் இந்த மரண விசாரணையின் சாட்சி விசாரணைகளை முடித்துக் கொண்ட நீதிமன்றம், அதன் தீர்ப்பை வரும் 14ஆம் திகதி வழங்க உத்தரவிட்டு அதுவரைக்கும் வழக்கை ஒத்தி வைத்தது.

சிறில் லியனராச்சி தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division