நுவரெலியாவில் கடந்த 06.11.2023 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு கையளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பணிப்புரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு மட்டத்திலும் எதிர்ப்புகள் ஏற்பட்டன. மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தபால் துறையினர் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். ஆனால் கடந்த வியாழனன்று தபாலகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அபிவிருத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார உறுதிமொழி வழங்கியிருந்தார். இது தொடர்பாக நுவரெலியா மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தொடர்பான பார்வை.
நுவரெலியா யோகநாதன்
நுவரெலியா தபால்நிலையம் மட்டுமல்ல இலங்கை புகையிரத சேவை, இலங்கை மின்சார சபை இவை அனைத்தையுமே தனியாரிடம் கையளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அபிவிருத்தி அடைந்துள்ள எல்லா நாடுகளிலும் அநேகமான செயற்பாடுகள் தனியாரிடமே கையளிக்கப்பட்டுள்ளன. அப்படி செய்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். பல வருடங்களாக நட்டத்தில் இயங்கி வருகின்ற தபால் சேவையின் மூலமாக மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் கைத்தொலைபேசியின் பாவனையின் காரணமாகவும் இன்று பொது மக்கள் தபாற் சேவைகளை பயன்படுத்துவதில்லை.
ஆசிரியர் சிவகணேசன்
நுவரெலியாவின் அடையாளம் என்பது நுவரெலியா தபால் நிலையமே. அது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்த ஒரு இடம். எப்போது பார்த்தாலும் நுவரெலியா தபாற் நிலையத்துக்கு முன்னால் ஒரு கூட்டம் புகைப்படம் எடுப்பதையும் அந்த கட்டடத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதையும் நாம் காணலாம். எனவே இதனை தனியாரிடம் கையளிப்பது என்பது நுவரெலியாவின் அடையாளத்தை விற்பனை செய்வது போன்ற ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். எனவே இதனை பாதுகாக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
எஸ். தர்மராஜ் உல்லாச விடுதி உரிமையாளர்
இவர்களுக்கு இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதில் எந்தவிதமான அக்கறையும் இல்லை. இவர்கள் அனைவரும் விற்பனை முகவர்கள். இந்த நாட்டின் மீது பற்றில்லாதவர்கள். இன்று நுவரெலியா தபால் நிலையத்தில் ஆரம்பித்து படிப்படியாக எல்லாவற்றையும் விற்பனை செய்துவிடுவார்கள். ஏற்கனவே 2017 ஆம் ஆண்டும் 2019ஆம் ஆண்டும் இதனை விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை செய்யமுடியவில்லை.
கே. சுப்பிரமணியம் தோட்டத் தொழிலாளி
இன்றைய நிலைமையில் யார் எதனை விற்பனை செய்தாலும் நமக்கு என்ன நடக்கப்போகின்றது. அது விற்பனை செய்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் மாத்திரமே. அதனால் இதனை நாம் கண்டு கொள்வதில் அர்த்தமே இல்லை.
ஆர். பரசுராமன் அரசியல் செயற்பாட்டாளர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அவரிடம் தொலை நோக்கு பார்வை இருக்கின்றது. அவர் இந்த நாட்டின் கல்வி அமைச்சராக இருந்து மேற்கொண்ட வேலைத்திட்டத்தின் காரணமாகவே இன்றைய எமது கல்வி நிலை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பதற்கான தேசிய கல்வியற் கல்லூரி போன்ற நிறுவனங்களை உருவாக்கியவர். ஆனால் அன்றும் அதனை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் வீண் விரயம் எனக் கோசம் எழுப்பினார்கள். ஆனால் இன்று அதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் எத்தனை? எனவே இந்த நாட்டில் நட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரச நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்தி ஊழலை ஒழித்தால் மாத்திரமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். வெறுமனே எல்லாவற்றிற்கும் போராட்டம், எதிர்ப்பு என்று செயற்பட்டால் எதிர்காலத்தில் நாம் பிச்சை எடுக்கின்ற நிலைமையே ஏற்படும். இன்று ஏனைய நாடுகளை பார்க்கின்ற பொழுது எமக்கு பொறாமையாக இருக்கின்றது. ஆனால் அவர்கள் தனியார் மயப்படுத்தலின் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளார்கள். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தபாலகக் கட்டடத்தை முகவரியாக வைத்து
ஹோட்டல் அமைக்கப்படுவதில் என்ன தவறு?
அருளானந்தம் சக்திவேல், நுவரெலியா
நுகரெலியா தபாலகக் கட்டடம் பழம்பெருமை வாய்ந்தது மட்டுமல்ல நுவரெலியா நகருக்குள் நுழைவதற்கு முன் Gate way of NuwaraEliya என்பது போல உல்லாசப் பயணிகளை வரவேற்கும் வகையிலும் இக்கட்டடம் நிமிர்ந்து காணப்படுகிறது. இவ்வசீகரிக்கும் பழைய பிரிட்டிஷ்கால தபாலகத்தை அப்படியே அதன் பழைமை மாறாமல் பேணும் அதேசமயம் அதைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நவீன நட்சத்திர ஹோட்டலை அமைத்தால் அது நுவரெலியாவுக்கு அழகு சேர்க்கும் கட்டடமும் காப்பாற்றப்படும் என்பது என் கருத்து.
கொழும்பு கோட்டையில் டிரான்ஸ்வேர்க்ஹவுஸ் என்ற பெயரில் ஒரு சிவப்புநிற பழைய கட்டடம் உள்ளது. தொண்ணூறுகளில் தகவல் திணைக்களம் அதில் இயங்கி வந்தது. பின்னர் பராமரிப்பின்றி அக்கட்டடம் சிதிலமடையத் தொடங்கியது. தற்போது அக்கட்டடத்தையும் அது சார்ந்த காணியையும் பொறுப்பேற்ற சீன நிறுவனம் அக்கட்டடத்தை மெருகு குலையாமல் திருத்தி, செப்பனிட்டு புதுப்பித்துள்ளதோடு அதன் பின்னணியில் பல்லடுக்க வர்த்தக மாடிக் கட்டடங்களையும் நிர்மாணித்து வருகிறது. சிதிலமடைய வேண்டிய ஒரு பழைய கட்டடம் காப்பாற்றப்பட்டும் விட்டது.
நீங்கள் கொழும்பு காலிமுகத்திடல் தொடர்பான பழைய புகைப்படங்களை பார்த்தீர்களானால் உங்கள் கண்களுக்கு கட்டாயமாக ஒரு கட்டடம் தென்படும். அது தான் சமுத்ரா ஹோட்டல். காலிமுகத்திடல் குதிரைப்பந்தயத் திடலாக பயன்படுத்தப்பட்ட போது பிரித்தானியர் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களுக்காக அமைக்கப்பட்ட ஹோட்டல் அது.
பின்னர் எழுபதுகளில் சமுத்ரா என்ற பெயரில் இயங்கிவந்தது. அதன் பின்னணியில் தான் தாஜ்சமுத்ரா நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டது. பழைய சமுத்ரா கட்டடம் இன்றைக்கும் அதே வடிவில் பிராமரிக்கப்பட்டு வருகிறது.
தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனமே நுவரெலியா தபாலகக் கட்டடத்தை மையப்படுத்தியதாக ஒரு நட்சத்திர ஹோட்டலை அங்கே அமைக்க விரும்புவதாக நாம் அறிகிறோம்.
தாஜ் ஹோட்டல் நிறுவனம் டாட்டா குழுமத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. கொழும்பில் பழைய சமுத்ரா ஹோட்டல் கட்டடத்தை நன்றாகவே பராமரித்து வருவதைப் போலவே
தான் நுவரெலியா தபாலகத்தையும் அதன் வசீகரம் குன்றாமல் பராமரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் அமைக்கப்போகும் நட்சத்திர ஹோட்டலுக்கு இத் தபாலகக் கட்டடம் ஒரு முகவரியாக இருக்கப்போகின்றது.
அவ்வளவு தானே! இதற்கு ஏன் இவ்வளவு பதற்றம்!
இன்றைய தபால் திணைக்களத்தின் பராமரிப்பைவிட சிறப்பாகவே ஹோட்டல் நிர்வாகம் பராமரிக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
நுவரெலியாவின் வருமானம் இரண்டில் இருந்தே வருகிறது. ஒன்று விவசாயம். இரண்டாவது சுற்றுலாத்துறை. ஏராளமானோருக்கு சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பு அளிக்கிறது. நான் ஹோட்டல் துறையில் பயிற்சிபெற்றவன்.
தாஜ்போன்ற சர்வதேச ஹோட்டல்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டு ஹோட்டல்களில் பணியாற்றும் சந்தர்ப்பம் எளிதாக வாய்க்கும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இக்காணியை பொறுப்பேற்கவுள்ள நிறுவனம் இக்கட்டடத்தை முகவரியாகக் கொண்டே ஹோட்டலை அமைக்கவுள்ளது. எனவே இக்கட்டடம் மேலும் பொலிவுபெறப் போகிறது என்பதே இதன் அர்த்தம். தபாலக பராமரிப்பைவிட சிறந்ததாகவே அது இருக்கும். எனவே தபாலகக் கட்டடத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக புனையப்படும் கதைகளும், ஆர்ப்பாட்டங்களும் அரசியல் ரீதியானதாகவும் இருக்கலாம் உணர்வுபூர்வமாகவும் இருக்கலாம்.
ஆனால் அறிவுபூர்வமாக சிந்தித்தால் ஹோட்டல் அமைக்கப்படுவதே நீண்டகால நன்மைக்கு உகந்ததாக இருக்கும் என்பது என் கருத்து. எதிர்க்கவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்த்துக் ெகாண்டிருந்தால் எப்படி?
நுவரெலியா தினகரன் நிருபர்