உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள், தீபத்திருநாளாம் தீபாவளியை இன்று கொண்டாடுகின்றார்கள். தீபத்திருநாள் தமிழர்களுக்கு மாத்திரம் உரியதன்று. உலகெங்கும் வாழ்கின்ற பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் இத்திருநாள் உரியதாகும்.
‘உள்ளத்தில் உள்ள இருளை அகற்றி, நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்பதே தீபாவளித் திருநாளின் அர்த்தமாகும். வீடுகளில் தீபஒளியை ஏற்றுவது போன்று, உள்ளத்திலும் நல்லொளியை ஏற்றி தீயஇருளை அகற்ற வேண்டும் என்பதையே தீபத்திருநாள் தத்துவங்கள் உணர்த்துகின்றன.
இந்துமதம் மிகவும் தொன்மையானது, ஆதியும் அந்தமும் இல்லாதது. இம்மதம் தோன்றிய காலப்பகுதியை இதுவரை வரலாற்று ஆசிரியர்களால் கண்டறிய முடியவில்லை என்பது இன்றும் வியப்பானது. அதேபோன்று இந்துமதம் சார்ந்த பண்டிகைகளும் அவை தோன்றிய காலத்தைக் கணிக்க இயலாதபடி தொன்மையானவையாகும். அவற்றுள் ஒன்றுதான் இன்றைய தீபாவளிப் பண்டிகை.
இந்துக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இன்றைய தீபத்திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்துக்கள் வாழ்கின்றார்கள். மேற்குநாடுகள், ஆபிரிக்க நாடுகள், இலங்கை, இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, மியன்மார், சிங்கப்பூர், மலேசியா உட்பட ஏராளமான நாடுகளில் இந்துக்கள் வாழ்கின்றார்கள்.
இந்துக்கள் தாங்கள் வாழ்கின்ற நாடுகள் எங்குமே அவர்களது மதம் மற்றும் கலாசார பாரம்பரியங்களைப் பேணியபடி வாழ்கின்றார்கள் எனலாம். அதற்கேற்ப அவர்கள் இந்துசமயம் சார்ந்த பண்டிகைகள் அனைத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். அப்பண்டிகைகளில் தமிழர்களின் முதன்மைப் பண்டிகையாக தீபாவளி விளங்குகின்றது.
அனைத்து மதங்களும் மக்களுக்கு நேரிய வாழ்க்கை முறையையே போதிக்கின்றன. ஏனைய மதங்களுக்கு மதிப்பளித்து, அம்மதம் சார்ந்த மக்களை அரவணைத்து ஐக்கியமாக வாழ வேண்டுமென்பதே மதங்கள் கூறுகின்ற போதனையாகும். இப்போதனையானது எமது தாய்நாட்டில் வாழ்கின்ற அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பொதுவானதாகும்.
இன, மத, மொழி என்ற ரீதியில் மக்கள் பிளவுபடுதல் ஆரோக்கியமானதல்ல. அவ்வாறு மக்கள் பிளவுபடுவார்களானால் எமது நாடு என்றுமே அபிவிருத்தியடையப் போவதில்லை. நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒற்றுமையே முதன்மையானது.
எமது தாய்நாட்டின் அனைத்து நெருக்கடிகளும் நீங்கி, இனங்களிடையே நீடித்த ஐக்கியம் நிலைபெற வேண்டுமென இன்றைய தீபத்திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திப்போம். வாசக நேயர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தினகரனின் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!