‘இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் சாதாரண பலஸ்தீன மக்களை பலிக்கடாவாக்கி விடக்கூடாது’ என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
‘இப்பிரச்சினையைத் தீர்த்து அந்தப் பிரதேசங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரின் செயற்பாடுகளுக்கு, எமது பூரண ஆதரவை வழங்குவோம்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய வைபவமொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியும் 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடொன்றின் தலைவருமாவார். அத்தோடு இஸ்ரேலுடனும் பலஸ்தீனுடனும் இராஜதந்திர உறவைப் பேணிவரும் நாடொன்றின் தலைவராகவும் அவர் இருக்கின்றார். அத்தோடு இஸ்ரேல்- காஸா யுத்தம் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளித்த120 நாடுகளில் ஒன்றின் தலைவராகவும் ஜனாதிபதி இருந்து கொண்டிருக்கின்றார்.
இவை மாத்திரமல்லாமல் இலட்சக்கணக்கான இலங்கைக் குடிமக்கள் தற்போது யுத்தம் இடம்பெற்றுவரும் இஸ்ரேல், லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களாகத் தொழில் புரிந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் சாதாரண பலஸ்தீன மக்களை பலிக்கடாவாக்கி விடக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
சாதாரண மக்களின் நலன்களை முன்வைத்தே அவர் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென்பதே உண்மையான அமைதி, சமாதானத்தை விரும்பும் அனைவரதும் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.
அதனால்தான் ஐ.நா. சபை உள்ளிட்ட உலகத் தலைவர்கள் காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் இந்த யுத்தம் ஏற்படுத்திவரும் இழப்புகளும் அழிவுகளும் மனித சமுதாயத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் இவ்வாறு அழிவுகளை ஏற்படுத்த இடமளிக்கப்பட்டிருப்பது மனித சமூகத்தையே வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
இது ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தமான போதிலும் காஸாவில் இடம்பெறும் அழிவுகள் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயமாகப் பதிவாகின்றன.
ஹமாஸ் இஸ்ரேலில் மேற்கொண்ட தாக்குதலில் 1400 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர். 200 மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 23 இலட்சம் பலஸ்தீன மக்கள் வாழும் காஸா மீது முழு அளவிலான போரை இஸ்ரேல் ஆரம்பித்தது. காஸாவுக்கான மின்சாரம், தண்ணீர், மருந்து விநியோகம், உணவு விநியோகம் அனைத்தையும் தடுத்து நிறுத்தி விட்டு இஸ்ரேல் இந்த யுத்தத்தை முன்னெடுத்துள்ளது. சுமார் மூன்றரை இலட்சம் படைவீரர்கள் காஸாவை சுற்றி வளைத்து முன்னெடுத்துள்ள இந்த யுத்தத்தில் அதிநவீன ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இக்குரூர யுத்தத்தை நிறுத்தி அமைதி வழிக்குத் திரும்புமாறு ஐ.நா. உள்ளிட்ட எல்லா நாடுகளும் முன்வைத்து வருகின்ற கோரிக்கைகள் ஆரம்பம் முதல் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. நீடித்துவரும் இந்த யுத்தம் காரணமாக காஸாவில் 9000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 3700 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளாவர். இந்த யுத்தத்தினால் குழந்தைகளும் பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுக்கட்டடங்கள், பள்ளிவாசல்கள், குடியிருப்புக்கள், அகதி முகாம்கள், தொடர் மாடிக்கட்டடங்கள் என்பன மாத்திரமல்லாமல் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் வான்வழித்தாக்குதல்கள் மூலம் அழித்து நிர்மூலமாக்கப்படுகின்றன.
ஹமாஸ் இயக்கத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்காக பலஸ்தீனின் காஸா மக்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்பதுதான் ஐ.நா. செயலாளர் நாயகம் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கருத்தாகும்.
காஸா என்பது பலஸ்தீனின் மத்திய தரைக் கடலோரப் பிரதேசம். 41 கிலோ மீற்றர் (25 மைல்கள்) நீளமும் 6 முதல் 12 கிலோ மீற்றர் அகலமும் (3.7 மைல் முதல் 7.5 மைல்) கொண்ட 365 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு 23 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
இவ்வாறான சிறிய பிரதேசமொன்றின் மீது முன்னெடுக்கப்பட்டுவரும் கடும் தாக்குதல்கள் காரணமாக காஸா உருக்குலைந்து வருகின்றது. ஆனால் யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதி ஏற்படும் போது அந்த மக்களுக்கு அத்தனை வசதிகளையும் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்காக மில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டாக வேண்டும்.
இது இஸ்ரேல்- பலஸ்தீன் பொருளாதாரத்தில் மாத்திரமல்லாமல் பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திலும் பாரிய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் நிச்சயம் ஏற்படுத்தவே செய்யும்.
ஏற்கனவே உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக அந்நாடுகளது பொருளாதாரத்தில் மாத்திரமல்லாமல் உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வறிய மற்றும் மூன்றாம் மண்டல நாடுகள் பலவிதமான நெருக்கடிகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்துள்ளன. அதனால்தான் இந்த யுத்தம் ஆரம்பமானதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த நெருக்கடி நிலைமை உலகளாவிய எரிபொருள் விலையில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான தாக்கத்தை சுட்டிக்காட்டி, ஆபிரிக்க ஒன்றியத்தின் பரிந்துரையின்படி, இந்த மோதலை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். அத்தோடு இம்மோதல்கள் காரணமாக எரிபொருளின் விலையில் நீண்டகால அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், இது இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்’ எனவும் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் அழிக்கப்படும் குடியிருப்புகளையும் கட்டடங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மீளக்கட்டியெழுப்பவே வேண்டும். அதற்காக கோடிக்கணக்கில் செலவிடவே வேண்டும். இது வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகளுக்கு நிச்சயம் தாக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கவே செய்யும்.
இந்த யுத்தம் ஆரம்பமான பின்னர் எரிபொருளின் விலை உலக சந்தையில் 3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதன் தாக்கத்தை ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் உணரவே செய்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களாக தொழில்புரிபவர்கள் அனுப்பி வைக்கும் அந்நிய செலாவணி குறைவடையக்கூடிய ஆபத்தும் உள்ளது.
இந்த யுத்தத்தின் விளைவாக இஸ்ரேலில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த இலங்கைப் பெண்ணொருவர் அண்மையில் கொல்லப்பட்டார். அவரது பிரேதம் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோன்று லெபனானில் பணிபுரிந்த பெண்மணியொருவரும் இந்த யுத்தத்தின் விளைவாக கொல்லப்பட்டுள்ளார்.
இதன் விளைவாக இந்த நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வதற்கும் பணியாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஆகவே காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களின் நலன்களை மாத்திரமல்லாமல் உலகளாவிய மக்களின் பொருளாதார நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும். அது பலஸ்தீன மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கும் ஆற்றும் பாரிய சேவையாகும். அதுவே அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும்.
மர்லின் மரிக்கார்