இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிக மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி யார் ஆட்சிக்கு வருவார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக கருத்துக்கணிப்புகளும் அதிகம் நடத்தப்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஆளும் பா.ஜ.கவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜ.கவுக்கு இது சாதனை வெற்றியாகும். அதை விட முக்கியமாக முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக பதவியேற்கும் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெறுவார். அது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டு பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமெனில் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியமாகும். ஆகவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.கவுக்கு மிகவும் முக்கியமானது.
மறுபுறம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த அளவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ என்ற போராட்டமாக இருக்கிறது. ஏனெனில் கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இந்தக் காலத்தில் ஏராளமான கசப்பான சம்பவங்கள் கட்சிக்குள்ளும் வெளியேயும் நடந்திருக்கின்றன. குலாம் நபி ஆசாத் போன்ற முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியது, கப்டன் அம்ரீந்தர் சிங் போன்றோர் கட்சி தாவியது, பஞ்சாப்பிலும், டெல்லி உள்ளாட்சியிலும் ஆட்சியை இழந்தது, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு, நெஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியாவுக்கு நெருக்கடி என காங்கிரஸ் கட்சி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே இந்தத் தேர்தலில் பா.ஜ.கவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பெரிய அளவில் கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ். இதற்கு முன்னர் தங்களுடன் முரண்பட்டிருந்த ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைக் கூட சமாதானம் பேசி இந்தக் கூட்டணியில் இணைத்திருக்கிறது. இக்கூட்டணிக்கு ‘இந்தியா’ என்றும் பெயரிட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ்.
இந்தக் கூட்டணியின் 3 கட்ட கூட்டங்கள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தொகுதி பங்கீட்டில் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.கவும், காங்கிரஸும் எத்தனை இடங்களை வெல்லும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் தற்போது உத்தரப் பிரதேசத்திற்கான கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானதாகும். இங்கு அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பதால், தேர்தலில் பெரும்பான்மை வெற்றியைப் பெற காங்கிரஸும், பா.ஜ.கவும் மாறி மாறி இந்த மாநிலத்தை குறிவைத்து வருகின்றன.
இவ்வாறிருக்கையில், இந்தியா டி.வி-.சி.என்.எக்ஸ் (India TV-CNX) சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு 70 இடங்களும், காங்கிரஸுக்கு 2 இடங்களும் கிடைக்குமென கருத்துக்கணிப்பு கூறுகின்றது. சமாஜ்வாடி கட்சி 4, உ.பியின் மாநில கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 1 இடம், இராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1 இடம், அப்னா தளம் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியா டி.வி.-சி.என்.எக்ஸ் மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், நாகலாந்து மற்றும் மிசோராம் என 18 மாநிலங்களில் கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தது.
அதன்படி இந்த 18 மாநிலங்களில் மொத்தமுள்ள 282 எம்.பி தொகுதிகளில் 118 தொகுதிகளை பா.ஜ.கவும், 110 தொகுதிகளை இந்தியா கூட்டணியும் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தனர். தற்போது இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கருத்துக் கணிப்புகளும் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில், 543 எம்.பி தொகுதிகளில் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணி 318 இடங்களையும், இந்தியா கூட்டணி 175 இடங்களிலும் மற்ற கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க தமிழ்நாட்டில் 21 தொகுதிகளை வென்றெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 வடகிழக்கு மாநிலங்களில் இந்தியா கூட்ணி 3 இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜி ஜனதாதளம் 15 இடங்களிலும், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 15 தொகுதகிளிலும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சி 17 தொகுதிகளில் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சாரங்கன்