வரலாறு காணாத அளவில் துன்பங்களை அனுபவிக்கும் காசா மக்களுக்காக மக்கள் பெருந்தொகை பணத்தை அள்ளிக்கொட்டுகிறார்கள். காசா மக்களின் அவலங்களை பார்த்து கண் கலங்காத எந்தவொரு முஸ்லிமும் இருக்க முடியாது. சவுதி அரேபியா ஸாஹிம் எனும் மையத்தின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிதி சேகரிப்பில் மக்கள் ஆர்வத்துடன் தமது பங்களிப்புக்களை வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். காசா மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந் நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டது. சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோர் 50 மில்லியன் ரியால்களை நன்கொடையாக வழங்கி ஆரம்பிக்கப்பட்ட இந் நிதித் திரட்டல், 10 மணித்தியாலங்களில் 150 மில்லியன் ரியாலை தாண்டியது. பல நாடுகளிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் சவுதி அரேபியா கூடிய தொகையை குறுகிய நேரத்தில் திரட்டியது. தனி நபர், ஆட்சியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மார்க்க அறிஞர்கள் என்ற வேறுபாடின்றி சகலரும் பங்களிப்பு செய்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு தொடர் நிதி திரட்டும் திட்டம் என நிவாரணத்துக்கும் மனித நேய உதவிகளுக்குமான மன்னர் ஸல்மான் நிலையம் தெரிவித்துள்ளது. காசா மக்களுக்காக உதவி செய்வது எமது கடமையாகும். அது ஒரு தனி நாட்டின் அல்லது ஒரு சாராரின் பிரச்சினை அல்ல.
மாறாக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தம்மால் முடிந்த உதவிகளை இவ் இக்கட்டான சூழ்நிலையில் செய்வது கட்டாயமாகும். இந்த வகையில் சவுதி அரேபியா நிதியுதவி பெறும் நாடுகளில் பாலஸ்தீன் இரண்டாவது நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஸாஹிம் எனும் மையம் பாலஸ்தீனத்துக்காக மாத்திரம் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். யுத்த நிறுத்தத்துக்காக பல சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த சவுதி அரேபியா முயற்சி செய்தது. இலங்கை உட்பட பல நாடுகளிலும் கண்டனங்கள், அறிக்கைகள் விடப்பட்ட நிலையில் காசாமக்கள் மீதான அநியாயங்களும் அத்துமீறல்களும் தொடர்ந்து கொண்டிருப்பது உலக முஸ்லிம்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
இவ் இக்கட்டான சூழ்நிலையில் காசா மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் சவுதி அரேபியா மற்றும் பல நாடுகளும் நிதி சேகரிப்பை ஆரம்பித்துள்ளன.
அஷ்-ஷைக் M H பௌஸுல் அலவி (மதனி) செயலாளர், தாருல் ஈமான் நிறுவனம்