2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதுடன், வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளது.
ஆளுநர் ஒருவரைப் பற்றி ஜனாதிபதிக்கு முறைப்பாடு
அநுராதபுரத்திற்குத் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் கடந்த சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார். தனிப்பட்ட விஜயத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஏற்பாடு செய்திருந்த சர்வ மதத்தலைவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி ஒரு சம்மதம் தெரிவித்திருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேரர்கள் உள்ளிட்ட ஏனைய மதங்களின் தலைவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
குருந்தீவு விகாரையை மையப்படுத்தி ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பிலும் இதன் போது தேரர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த அனைத்துப் பிரச்சினைகளும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அப்பிரதேசங்களுக்கு வெளியிலிருந்து வந்தவர்களாலேயே ஏற்பட்டுள்ளது என வவுனியா பௌத்த விகாரையில் விகாராதிபதி சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் பகிரங்கமாகவே கூறினார்.
இதன்போதே திருகோணமலை மதத் தலைவர்கள் கிழக்கு ஆளுநரின் விவகாரத்தையும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தனர். சகல விடயங்களையும் கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி ரணில் அவற்றிற்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரவுள்ள பல்கலைக்கழகம் தொடர்பிலும், மன்னார் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்யும் முறையையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காடுகள் குறைவாக உள்ள இடங்களில் காடு வளர்ப்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
சம்பளத்தை அதிகரிக்கும் முறையை ஜனாதிபதி கூறினார்.
அனுராதபுரத்தில் தனது ஓய்வைக் கழித்த ஜனாதிபதி ரணில், திங்கட்கிழமை காலை கொழும்பு திரும்பினார். அன்று அலுவலகத்திற்குச் சென்ற ரணில் முதலில் ஊடக அதிகாரி குழுவைச் சந்தித்ததுடன், அதன் பின்னர் நிதியமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
இதன் போது எதிர்வரும் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அன்றைய தினம் மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பிலும் ஜனாதிபதி நீண்ட விளக்கமளித்தார். அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது அதற்குச் சமனாக வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகவேயாகும் எனவும் அமைச்சரவையின் கரகோஷங்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகள் மற்றும் இந்நாட்டின் நிதித்துறைத் தலைவர்களுக்கிடையில் இடம்பெறும் வட்டமேசை கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்குச் சென்றார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 10 நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, நெருக்கடியிலிருந்து மீள்வது மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பிலும் உரையாற்றினார்.
ரணில் – மஹிந்த சந்திப்பு
செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி ஷங்கரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சியெட் டயர் நிறுவனத்தின் 25வது வருட நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்ததோடு, அவர்கள் இருவரும் ஒரே மேசையில் அமர்ந்திருந்ததால் அரசியல் சாராத பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர்.
சர்வதேச வீதிப் பாதுகாப்பு மாநாடு கடந்த புதன்கிழமை காலை ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. வீதிப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக உயர்மட்ட குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இதன் போது ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட யோசனைகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உள்நாட்டு வர்த்தகர்கள் உள்ளிட்ட தனியார் துறை தலைவர்கள் சிலருடன் ஜனாதிபதி ரணில் அன்றைய தினம் கலந்துரையாடினார்.
தொழிலதிபர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி தேசிய கைத்தொழில் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது. அன்றைய தினம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக தனியார் துறையின் முன்மொழிவுகளையும் உள்ளடக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அமைச்சரவை மிகவும் கஷ்டமான தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில், இளம் அமைச்சரான ரமேஷ் பத்திரன போன்று அனைவரும் செயற்பட்டால் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது கடினமல்ல என அவரைப் பார்த்து தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை வரவு செலவு திட்டம் தொடர்பாக தனியார் துறை குழுவுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது. தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளோடு 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது அவர்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே இடம்பெற்றது. கடந்த வாரம் முழுவதும் இதுபோன்ற பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
காலநிலை மாற்றம் தொடர்பாக மெலிண்டா கேட்ஸ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் பிரதான மண்டபத்திற்குச் சென்றார். ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி சாகலவின் ஒருங்கிணைப்பில் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இந்நாட்டுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
அதனை முடித்துக் கொண்டு அவர் திரும்பும் போது ஜனாதிபதி செயலகத்துக்கு அமைச்சர்கள் குழுவொன்று வாரத்தின் செயற்பாடுகள் மற்றும் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வருகை தந்திருந்தனர்.
அவர்களது பிரதான தலைப்பு மொட்டுக் கட்சி ஜனாதிபதி ரணிலை விட்டு தூரமாவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பானதாகவே இருந்தது.
“மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் இரண்டு தடவை ஜனாதிபதியை விமர்சித்தார். அவர் ஒரு தடவை அமைச்சு பதவிகள் பற்றி கூறினார். இப்போது இன்னொன்றைக் கூறுகின்றார்” எனக் கூறினார் பேராசிரியர் ஆஷு மாரசிங்க.
“ஜனாதிபதியை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிப்பதாகக் கூறியே அவர்கள் ஜனாதிபதி நியமனத்தை ஆதரித்தார்கள். அப்படி இருக்கும் போது அழுத்தங்களைச் செய்ய முடியாதே” என அதற்கு பதலளித்தார் வஜிர அபேவர்தன.
“தனியாகச் செல்வதானால் தனியாகச் செல்லச் சொல்லுங்கள். ஜனாதிபதி சுயாதீனமாகவே செயற்படுவார். வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் நாம் அதனை அந்த நேரத்தில் பார்த்துக் கொள்வோம்” என ஆவேசமாகக் கூறினார் நிமல் லான்சா.
இந்தப் பேச்சுக்களுடன் ஜனாதிபதி தொடர்பு படாத போதிலும் அங்கிருந்த அமைச்சர்கள் மொட்டுக்கட்சி ஜனாதிபதியிடமிருந்து தூர விலகியிருப்பதாகக் குசுகுசுத்துக் கொண்டனர்.
“ஊழல் மோசடிகளில் குற்றவாளிகளாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை வெளியேற்றுவதற்கான அதிகார சபையை உருவாக்குவது மிகவும் நல்ல விடயம். ஜனாதிபதி சொல்வதைச் செய்யும் தலைவர் என்ற வகையில், நாட்டின் இளைஞர்கள் கேட்கும் மாற்றங்களைச் செய்து வருகிறார். அவ்வாறில்லாமல் வாயால் வடை சுடுபவரல்ல” என்றவாறு பேச்சுடன் இணைந்து கொண்டார் அமைச்சர் பந்துல.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்நாட்டிற்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக் ஷவை சந்திப்பதற்காகும்.
பகல் 11.00 மணியளவில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு இரவு உணவு அருந்திவிட்டே அங்கிருந்து வெளியேறியமை விசேட அம்சமாகும்.
மெதமுலனவில் கலந்துரையாடல்
ராஜபக் ஷ குடும்பத்தின் சகோதரர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரத்தில் ஒரு நாள் மெதமுலனவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக் ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் பசில் ராஜபக் ஷ ஆகியோருக்கிடையில் ராஜபக் ஷ குடும்ப உறுப்பினர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லான்சாவுடன் அமைச்சர்கள் சிலர் என்ன பேசினார்கள்?
புதிய கூட்டணியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, சுகீஷ்வர பண்டார, சட்டத்தரணிகளான நளின் சமரக்கோன், ஹர்ஷான் பெரேரா, சாகர பண்டார, லக்ஷான் பெரேரா உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கட்சியின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சட்ட ஆதரவை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஆலோசனை வழங்கினார். அத்துடன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் தங்கள் கூட்டணியின் மாநாட்டை நடத்துவது குறித்தும் இதன் போது பேசப்பட்டது.
லான்சாவின் கதைக்கு அமரவீர என்ன கூறினார்?
“கடந்த வாரத்தில் லான்சாவின் கதையின் காரணமாக மொட்டு கட்சியினர் நன்றாகவே குழம்பிப் போயுள்ளார்கள். லான்சா அவ்வாறு பேசுவார் என அவர்கள் நினைத்திருக்கவில்லை” என அமரவீர பேச்சை ஆரம்பித்துக் கூறினார்.
“ஆம்… இருப்பதானால் வாயை மூடிக் கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டும். என்ன இது கேலிக்கூத்து? பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கிவிட்டு வெளியில் வந்து ஏசுகிறார்கள்” என்றவாறு நளின் பெர்னாண்டோ பேச்சை ஆரம்பித்தார்.
சித்தப்பா அமைச்சுப் பதவிகளை வழங்கும்போது எங்கே இருந்தீர்கள்?
“இல்லை, நான் தெளிவாகக் கேட்டது பெருந்தோட்டத்துறையை விவசாய அமைச்சுக்கு வழங்காமல், வேறு எந்தஅமைச்சை வழங்கப்போகின்றீர்கள் என்றுதான். ஜனாதிபதி சரியில்லையென்றால் எதிர்க்கட்சியில் போய் அமருங்கள் எனக் கூறினேன். சித்தப்பா நிறைய அமைச்சுப் பதவிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் போது எங்கே இருந்தீர்கள்? என நாமலிடம் கேட்டேன். அதேபோன்று வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கப் போவதாகச் சத்தம் போடுகிறார்கள்தானே, முடியுமானால் தோற்கடித்துக் காட்டுங்கள் என நான் கூறினேன். இவற்றிற்குப் பதில் கூறாமல் மலுப்பல் பதில்களால் பலனில்லை” என லான்சா அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.
“இப்போது நாமலின் அடிவருடியாக இருப்பது புத்தளத்தின் ஒக்ஷிஜன் நிசாந்ததானே? லான்சா நாமலுக்கு கூறும் விடயங்களுக்கும் நிசாந்த பதில் கூறுவதைக் காண்கிறேன்” என துமிந்த பிரியங்கரவைப் பார்த்துக் கூறினார்.