தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சினூடாக தற்போது இரண்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்கப்படாதெனவும், சுகாதார அமைச்சர், வைத்தியக் கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்த போது, குற்றவாளிகள் எந்தத் தராதரமும் பாராமல் தண்டிக்கப்படுவரெனவும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை காரணமாக மருந்துகள் மட்டுமல்லாமல் ஏனைய பொருட்களுக்கான கொள்வனவின் போது, தரப்படுத்தல் மற்றும் தரம் ஆகியவற்றில் சிக்கல்கள் இருந்தன. ஆனால், உட்கட்டமைப்பு பிரச்சினைகள் இருந்ததுடன் மற்றும் தனிநபர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை இருந்த குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, மருந்து இறக்குமதி மோசடிக்காரர்களுக்கு தடை ஏற்படுத்தப்படுமெனவும், சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Aminoglobin மருந்து தொடர்பாக மூன்று விதமான எதிர்வினைகள் மட்டுமே பதிவாகியுள்ளதுடன், கண் வைத்தியசாலைகளில் நடந்தது பாக்டீரியாவின் மூலம் மருந்தின் பாதுகாப்பை இழந்ததாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அது தொடர்பாக இழப்பீடு வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.