நாட்டின் நிலப்பரப்பையும் சமுத்திரத்தையும் பாதுகாப்பதற்கான மூலோபாயத் திட்டம் தயாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை ஆறு மாதங்களினுள் வழங்குமாறு ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீளாய்வுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
நாட்டின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் பொறுப்பை வழங்கி, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஜனாதிபதியால் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகவின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், முப்படைகளின் ஓய்வுபெற்ற தளபதிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சு, நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர்கள் உட்பட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, சமுத்திர பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக 2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்ட மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கும் ஜனாதிபதி இந்தக் குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டார்.