இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக இந்தியா அறிவித்திருந்தது. ஆனாலும், இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலில் பாதிக்கப்படும் காஸா மக்களுக்காகவும், பாலஸ்தீன மக்களுக்காகவும் தொன் கணக்கிலான உதவிப் பொருட்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போர் இதுவரை பல்லாயிரக்கணக்கானோரை பலி கொண்டிருக்கும் நிலையில், இந்தியா மேற்கொண்ட இவ்வாறான துணிச்சலான நடவடிக்கையைப் பார்த்து உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்துள்ளன. ஒருபுறம் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக இந்தியா ஆதரவு தெரிவித்த போதிலும், பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொன் கணக்கிலான உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது.
வல்லரசு நாடுகளுக்கு இணையான இராணுவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்குள் புகுந்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஒருபக்கம் தரைவழியாகவும், மறுபக்கம், வான் வழியாகவும் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் இஸ்ரேலின் பல நகரங்கள் தரைமட்டமாகி இருக்கின்றன. இஸ்ரேல் நிலைகுலைந்து போனது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் போரில் குதித்திருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே மூன்று வாரகாலத்துக்கு மேலாக இந்தப் போரில் இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் கோட்டையாகக் கருதப்படும் காஸாவை குறிவைத்து இஸ்ரேல் அதிபயங்கர தாக்குதலை நடத்தி வருவதால் தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் இறந்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், இஸ்ரேல்_- ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்குதான் இந்தியா ஆதரவு வழங்குமென்றும், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக அறிவித்தார். இருந்தபோதிலும், இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி காஸா மக்களுக்காக உதவிக்கரம் நீட்டியது இந்தியா. அதன்படி, காஸியாபாத்தில் இருந்து இன்று புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் எகிப்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் ஆறரை தொன் எடை கொண்ட மருந்துப் பொருட்களும், 32 தொன் பேரிடர் நிவாரணப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், கூடாரங்கள், பாய்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீரை தூய்மைப்படுத்தும் மாத்திரைகள் உள்ளிட்டவையும் அப்பொருட்களில் அடங்கியிருந்தன. எகிப்தில் இருந்து வீதி மார்க்கமாக இந்தப் பொருட்கள் காஸாவை சென்றடைந்தன.
அதேசமயம் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு இந்தியா உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் காஸா மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீன மக்களுக்கான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உதவிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘காஸாவில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது. 6.5 தொன் மருந்து, மாத்திரைகள் மற்றும் 32 தொன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்களில் உயிர்காக்கும் மருந்துகள், சத்திரசிகிச்சைக்கான கருவிகள், கூடாரங்கள், போர்த்திக்கொண்டு உறங்குவதற்கான ஸ்லீப்பிங் பைகள், பாய் மற்றும் படுக்கைகள், சுகாதார பொருட்கள் உள்ளிட்டவை உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்_- பலஸ்தீனம் இடையே போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளமை ஒருபுறமிருக்க, இரு நாடுகளின் தீர்வின் கீழ் சுதந்திரமான பலஸ்தீன அரசை உருவாக்கவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இருதரப்பும் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இதேசமயம் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஒஹானா தலைமையிலான குழுவினர் சமீபத்தில் இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு வந்திருந்த வேளையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இக்கருத்தைத் தெரிவித்திருந்தார்.
“இந்தியா_- இஸ்ரேல் இடையேயான நட்புறவு பாரம்பரியமானது. இரு நாடுகளும் வலுவான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டவை. பல்வேறு கலாசாரங்களை மதிப்பது, ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றுவது என இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. மாறிவரும் உலக சூழலில் இந்தியா_- இஸ்ரேல் உறவு மிகவும் முக்கியமானது.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா, இஸ்ரேல் போன்ற ஜனநாயக நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா மற்றும் இஸ்ரேலின் பொதுவான உத்தி உலகிற்கு புதிய திசையை வழங்கும்.
இந்தியா எப்போதும் யூதர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இந்தியாவில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான சூழலை உறுதி செய்து வருகிறது. இஸ்ரேலிய இளைஞர்கள் இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா மேலும் வலுப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இஸ்ரேலியர்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்” என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த இஸ்ரேலிய சபாநாயகர் அமிர் ஒஹானா, “இந்தியாவும் இஸ்ரேலும் பழைமையான நாகரிகங்கள் கொண்ட நாடுகளாகும். இரு நாடுகளுக்கிடையேயான உறவு காலம்காலமாக வலுப்பெற்று வருகிறது. இந்தியா அனைத்துத் துறைகளிலும் அற்புதமாக முன்னேறி வருகிறது. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுவடையும். உலகளாவிய சவால்களை இரு நாடுகளும் கூட்டாக எதிர்கொள்ளும் என்றும் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
எஸ்.சாரங்கன்