நடப்புச் சம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியுடன் இலங்கை அணியின் உலகக் கிண்ண போக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. முதல் மூன்று போட்டிகளில் தோற்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி இருப்பது மூலோபாய ரீதியில் எப்படி இருந்தபோதும் அணியின் உற்சாகத்தை அதிகரிக்க காராணமாகி இருப்பதே எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமானது.
தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் தோற்ற இலங்கை அணியிடம் போதிய நம்பிக்கை இருக்கவில்லை. குறிப்பாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 400க்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்தது அடுத்து வந்த போட்டிகளில் அணியின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியது.
இதனாலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 344 ஓட்டங்களை பெற்றபோதும் இலங்கை அணியால் அதனை காத்துக்கொள்ள முடியாமல்போனது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் இதே கதைதான் தொடர்ந்தது. இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கும் பலவீனமான அணியாக நெதர்லாந்து இருந்தபோதும் அந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் வெற்றி என்பது உலகக் கிண்ணத்தில் முன்னேறிச் செல்வதற்கான ஒரு திருப்பமாக எடுத்துக்கொள்ளலாம். அது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்த உதவியது.
உபாதைகளால் குழப்பத்துக்கு உள்ளான இலங்கை அணிக்கு கடைசியில் அந்த உபாதையே ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண முதல் இரண்டு போட்டிகளிலும் சோபிக்காத நிலையிலேயே தோள் பட்டை காயத்திற்கு உள்ளாகி அணியில் இருந்து வெளியேறினார்.
அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியுஸ் அணிக்கு திரும்ப அதுவே முக்கியமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரின் ஆட்டத்தை பார்த்தாலே உலகக் கிண்ணம் போன்ற மிகப்பெரிய தொடர்களில் அனுபவ வீரர்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும்.
இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட் இன்றி 45 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே அந்த இணைப்பாட்டத்தை முறியடித்து ஜொன்னி பெஸ்டாவின் விக்கெட்டை பந்துவிச வந்த மத்தியூஸ் சாய்த்தார். இது இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு ஆரம்பப் படியாக இருந்தது. மத்திய வரிசையில் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸை கட்டியெழுப்ப முயன்றபோது மொயின் அலியின் விக்கெட்டையும் அவர் தகர்த்தார்.
மத்தியூஸ் அண்மைக்காலமாக துடுப்பாட்ட வீரராகவே செயற்பட்டுவந்தபோதும் அவரது பந்துவீச்சின் பாதிப்பு இன்னும் குறையாது இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் முதல் முறையாகவே ஒருநாள் போட்டிகளில் பந்துவீச அழைக்கப்பட்டிருந்தார்.
அது மாத்திரமன்றி இலங்கை அணியில் அணித்தலைவராக இருந்த அவரது அனுபவம் மற்றும் இப்போதைய இலங்கை அணியில் அனுபவம் மிக்க வீரர் என்ற வகையில் இந்த உலகக் கிண்ணம் அண்மித்தபோது எப்போதையும் விட மத்தியூஸின் தேவை அதிகமாக இருந்தது. என்றாலும் தேர்வுக் குழு அவரை கவனத்தில்கொள்ள தவறியது. ஏகப்பட்ட குழப்பத்திற்கு பின்னரே அவர் அணிக்கு அழைப்பக்கட்டிருக்கிறார்.
குறிப்பாக அணித்தலைவர் தசுன் ஷானக்க உபாதைக்கு உள்ளானபோது அவரை அணியில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் அவசரப்பட்டது. அவருக்கு பதிலாக சாமிக்க கருணாரத்னவை அழைக்கவும் அவசரம் காட்டியது. இலங்கை அணியுடன் தொடர்ந்து இருக்கும் ஷானக்க பயிற்சிகளில் ஈடுபடுவதோடு அணியில் இணைக்கப்பட்ட கருணாரத்ன சோபிக்கத் தவறி வருகிறார்.
இதனால் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர உடல்தகுதி பெற்று அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டபோதும் அவரை இலங்கைக் குழாத்தில் இணைப்பதற்கான வாய்ப்பு தவறிப்போனது.
அடிப்படையில் உலகக் கிண்ணத்திற்கான அணித் தேர்வில் குழப்பங்கள் இருப்பதை மூத்த வீரர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். ஆரம்ப வரிசையில் ஆடுவதற்கு பத்தும் நிசங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் இருக்கும்போதே டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன சேர்க்கப்பட்டிருந்தார். இப்போது அவரை பயன்படுத்துவது பற்றி அணி நிர்வாகம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.
குசல் பெரேரா எதிர்பார்த்தளவு சோபிக்காதபோதும் அவரது ஆட்டம் எப்போதும் போட்டியை திசைதிருப்பும் திறன்படைத்தது. எனவே அவரை வெளியே அமரவைக்கவும் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் மத்திய வரிசையில், தேர்வு செய்யப்பட்ட குழாத்தில் மாற்று வீரர் இருக்கவில்லை. அஞ்சலோ மத்தியுஸ் மேலதிக வீரராக வந்தே அணியில் நுழைய வேண்டி இருந்தது.
எப்படியோ இலங்கை அணி தன்னை சரிசெய்து கொண்டு ஆடும் சூழலுக்கு வந்திருக்கிறது. பத்தும் நிசங்க தொடர்ச்சியாக அரைச்சதங்களை பெற்று ஆரம்ப வரிசையை பலப்படுத்துவதோடு சதீர சமரவிக்ரமவின் பொறுப்பான ஆட்டம் தேவையான நேரத்தில் அணிக்கு கிடைத்திருக்கிறது. அணித் தலைவரான பின் குசல் மெண்டிஸ் மட்டையில் சோபிக்காதபோதும் அவரது ஆட்டம் தீர்க்கமானது.
அஞ்சலோ மத்தியூஸின் வருகையுடன் மத்திய வரிசை பலம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். அத்தோடு சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா இன்னும் பொறுப்போடு ஆடினால் இலங்கை அணிக்கு எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள முடியுமாக இருக்கும்.
மறுபுறம் இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசை பெரிதாகக் கூறும்படி பலம்பெற்றிராதபோதும் டில்ஷான் மதுஷங்க சிறந்த முறையில் பந்துவீசி வருவதோடு லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித்த கடந்த போட்டியில் சோபித்தனர். சுழற்பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன அணிக்கு முக்கியமானவராக இருக்கிறார்.
இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை யாருடைய தயவும் இன்றி உறுதி செய்வதற்கு அடுத்து இருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெறுவதும் அவசியம். இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளை தவிர்த்துப்பார்த்தால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
எனவே, இந்த உற்சாகத்தை இலங்கை அணி தொடர்ந்து தக்கவைப்பது அவசியமாகும்.