Home » பரபரப்பு எங்கே?

பரபரப்பு எங்கே?

by Damith Pushpika
October 29, 2023 6:00 am 0 comment

உலகக் கிண்ண லீக் போட்டிகளின் பாதி ஆட்டங்கள் கடந்துவிட்டன. அனைத்து அணிகளும் தற்போது தனது ஆறாவது ஆட்டங்களை ஆட ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அணிகள் அரையிறுதி வாய்ப்புகளை இழந்து வெளியேறுவதற்கான நேரம் இது.

தென்னாபிக்காவை நெதர்லாந்து வீழ்த்திய மற்றும் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தியது என்று அதிர்ச்சி முடிவுகள் அங்கங்கே கிடைத்தபோதும் போட்டிகளில் பரபரப்பு பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான போட்டிகள் ஒரு பக்க ஆட்டங்களாகவே தெரிகின்றன. உலகமே எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி கூட உப்புச்சப்பு இன்றி முடிந்தது. போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் அல்லது இரண்டாவது இன்னிங்ஸின் பாதித் தூரத்திலேயே முடிவை கணிக்க முடியுமாக இருக்கிறது சுவாரஸ்யம் குறைவதற்கு முக்கிய காரணம்.

இதுவரை நடந்த போட்டிகளை பார்க்கும்போது 1999 தொடக்கம் அதிக ஒரு பக்க ஆட்டங்கள் கொண்ட உலகக் கிண்ணத் தொடராக இந்தத் தொடரை சந்தேகம் இன்றி குறிப்பிடலாம். ஒன்று, முதலில் துடுப்பெடுத்தாடும் அணி அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது அல்லது முதலில் பந்துவீசும் அணி அதிக விக்கெட் வித்தியாசத்தால் வெற்றி பெறுகிறது என்பதே இதுவரையான போட்டிகளின் போக்காக பெரும்பாலும் இருந்திருக்கிறது.

அதாவது முதலில் துடுப்பெடுத்தாடும் அணி சராசரியாக 110 ஓட்டங்களால் போட்டியில் வெற்றியீட்டி இருப்பதோடு பதிலெடுத்தாடிய அணி சராசரியாக 63.5 பந்துகளை மிச்சம் வைத்து 6.7 விக்கெட் வித்தியாசத்தால் வெற்றிபெற்றிருக்கிறது.

இதற்கு முன்னர் இந்த மூன்று சாதனைகளையும் முறியடித்த ஒரே உலகக் கிண்ணம் 2011 உலகக் கிண்ணம் தான். அந்தத் தொடரின் முதல் 20 போட்டிகளை எடுத்துக் கொண்டால் சராசரி ஓட்ட வித்தியாசம், விக்கெட் வித்தியாசம், மிச்சம் வைத்த பந்துகள் எண்ணிக்கை ஆகிய மூன்றுமே இம்முறை உலகக் கிண்ணத்தை விடவும் அதிகம்.

அதாவது 2011 உலகக் கிண்ணத்தின் முதல் 20 போட்டிகளையும் பார்த்தால் அணிகள் சராசரியாக 130 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் 7.6 விக்கெட் வித்தியாசத்திலும், 115 பந்துகளை மிச்சம் வைத்தும் போட்டிகளில் வென்றிருக்கின்றன. எனினும் அந்தத் தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்திய போட்டி இரு அணிகளும் சம ஓட்டங்களை பெற்று சமநிலையில் முடிந்ததோடு அயர்லாந்து இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளால் பரபரப்பு வெற்றியை பெற்றது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 344 ஓட்டங்களை பெற பாகிஸ்தான் அணி அதனை துரத்தியது பரபரப்பாக இருந்தபோதும் அது கடைசி ஓவர் வரை நீடித்த ‘த்ரில்’ ஆட்டமாகக் குறிப்பிட முடியாது.

இதற்கு என்ன காரணம் என்று குறிப்பிட்டு அனுமானிக்க முடியாது. சில அணிகள் அதீத திறமை பெற்றும் மற்றும் சில அணிகள் பலவீனப்பட்டிருக்கின்றன என்று எடுத்த எடுப்பில் முடிவுக்கு வர முடியாது. வேரெந்த அணியை விடவும் தென்னாபிக்காவின் துடுப்பாட்டம் பலமாக இருக்கிறது. அந்த அணி போட்டிகளில் சர்வ சாதாரணமாக 300 ஓட்டங்களுக்கு மேல் பெறுகிறது. என்றாலும் அந்த அணி நெதர்லாந்திடம் மண்டியிட்டதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இதுவரை தோல்வியுறாத அணியாக இருக்கும் இந்தியா தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 200 ஓட்டங்களை துரத்தியபோதும் 2 ஓட்டங்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. எனவே, எதிர்வரும் போட்டிகளில் எதுவும் நடக்கலாம்.

ஒருநாள் போட்டிகள் என்றால் பொதுவாக கடைசி 10 ஓவர்களுமே பரபரப்பாக இருக்கும், ஆனால் இந்த உலகக் கிண்ணத்தில் அதனை பெரிதாகப் பார்க்க முடிவதில்லை. இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரையான கடைசி ஓவர்களின் ஓட்ட வேகம் 7.33. இது உலகக் கிண்ண தொடர்களில் மூன்றாவது மந்தமான ஓட்ட வேகம்.

எவ்வாறாயினும் இன்னிங்ஸ் ஒன்றில் இரு வெவ்வேறு பந்துகள் பயன்படுத்தப்படுவது கூட இந்தப் போக்கிற்கு காரணமாக இருக்கலாம். அதாவது கடைசி ஓவர்களில் அதிகம் அடிவாங்கிய பந்துகள் பயன்படுத்தப்படாதது துடுப்பாட்ட வீரர் அடிப்பதற்கு சிரமமாக இருக்கக் கூடும். என்றாலும் இது தான் காரணம் என்றும் குறிப்பிட முடியது.

என்றாலும் முன் எப்போது இல்லாத அளவுக்கு ஆரம்ப வரிசை துடுப்பாட்டம் பலம்பெற்றிருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளை பார்க்கும்போது இம்முறை உலகக் கிண்ணத்தில் முதல் 30 ஓவர்களுக்கும் சராசரியாக 5.46 வீதத்தில் ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இது 1999 உலகக் கிண்ணத்திற்குப் பின்னரான தொடர்களில் அதிமாகும்.

வேகப்பந்து வீச்சிலும் ஏதோ மந்தப் போக்குத் தெரிகிறது. பந்தில் வேகம் போதவில்லை ‘சுவிங்’ ஆகின்ற போக்கும் குறைவு. ஷஹீன் ஷா அப்ரிடி போன்ற அதிரடி வேகப்பந்து வீச்சாளர்கள் கூட தடுமாற்றம் கண்டு வருகிறார்கள். இதற்கு பயன்படுத்தப்படும் பந்து அதிகம் சுவிங் ஆவதில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

என்றாலும் இது மைதானங்களுக்கு மைதானம் மாறுபடுகிறது. தர்மசாலா, லக்னோ, ஓரளவு டெல்லியில் பந்து அதிகம் சுவிங் ஆவது தெரிகிறது. மற்ற மைதானங்களில் தட்டையான ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சாளர்களால் அதிகம் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை.

எனவே இதற்குக் காரணம் பந்தா? ஈரப்பதமா? அப்படி இல்லை என்றால் பந்துவீச்சாளர்களா? என்று அனுமானிக்க முடியாது.

என்றாலும் ஐ.பி.எல் அனுபவம் என்பது இம்முறை உலகக் கிண்ணத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. கடந்த மூன்று ஐ.பி.எல் தொடர்களிலும் 18 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் ஆடிய 10 வேகப்பந்து வீச்சாளர்களே இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் நன்றாக செயற்பட்டு வருகிறார்.

இந்த பத்து வீரர்களும் ஓவருக்கு 5.3 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 29.6 சராசரியை பதிவு செய்திருக்கும் அதேநேரம் மற்ற வீரர்கள் ஓவருக்கு 6.4 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 35.1 சராசரியை வைத்திருக்கிறார்கள். இந்த ஐ.பி.எல் அனுபவத்தை பெற்ற இந்தியர் அல்லாதவர்களாக லொக்கி பெர்கியுசன், ஜோஷ் ஹேசில்வுட், ட்ரென்ட் போல்ட், ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சாம் கரன் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர்.

இதனால் கடைசி பத்து ஓவர்களுக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் தங்கி இருக்கும் போக்கும் அணிகளிடையே மாறி இருக்கிறது. அதாவது முதல் 40 ஓவர்களுக்குள் இடை நடுவே வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதோடு கடைசி ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் அணித்தலைவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.

பந்து அதிகம் கீறல் விழுந்து, பெளண்டரி எல்லையில் மேலதிக வீரர் ஒருவரை பயன்படத்த வாய்ப்பு இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக இதுவரை நடந்த போட்டிகளை பார்க்கும்போது கடைசி ஓவர்களில் 32.6 வீதமான பந்துகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசி இருக்கிறார்கள்.

இதுவே 2015 மற்றும் 2019 உலகக் கிண்ணங்களில் கடைசி ஓவர்களில் முறையே 21.6 மற்றும் 19.75 வீதமான பந்துகளையே சுழற்பந்து வீச்சாளர்கள் வீசி இருக்கிறார்கள். என்றாலும் 2011 மற்றும் 2003 உலகக் கிண்ணங்களில் இந்தப் போக்கு தற்போதை விடவும் அதிகம் என்பதை குறிப்பிட வேண்டும்.

இம்முறை உலகக் கிண்ணத்தின் தற்போதைய போக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று குறிப்பிட முடியாதும். நொக் அவுட் கட்டத்தை எட்டும்போதும், போட்டிகளில் அணிகளின் அனுபவம் அதிகரிக்கும்போதும் ஆட்டத்தின் போக்கு மாறக்கூடும். அது இதுவரை சோபிக்காத அணிகள் கூட சாதிக்க வழிவகுக்கும்.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division