நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தெரிவித்துள்ள கருத்து மற்றும் அமைச்சரவையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்பன அரசியலில் இவ்வாரம் பரபரப்பான விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன.
அடுத்த வருடம் தேர்தல்களுக்கான ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்து அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது எனக் கூறலாம். தேர்தலொன்றை இலக்கு வைத்து அரசியல் கட்சிகள் ஏற்கனவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், ஜனாதிபதியும் தேர்தல் பற்றிய கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தலில் ஓர் அங்கமாக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. செப்டெம்பர் மாதம் நடைபெறவிருந்த அக்கட்சியின் வருடாந்த மாநாடு சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்றது.
அக்கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது மாநாடு இதுவென்பதால் இம்மாநாடு அனைவரின் எதிர்பார்ப்பையும் ஈர்த்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந்த மாநாடு நடத்தப்பட்டிருந்தது. கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீள்எழுச்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக்கட்டியெழுப்பும் முக்கியமான காலப்பகுதியில் கட்சிப் படிநிலைக்குள் பாரிய மாற்றங்களின் அவசியம் பற்றியும் தெரிவித்திருந்த கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய கட்சிக் கட்டமைப்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுக்க முடியாத ஆளுமை நிறைந்த தலைவராக இருக்கும் போது, அவருக்கும் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைக்கும் இடையே கணிசமான ‘தலைமுறை இடைவெளி’ உள்ளது. இதனால், பதவிகளுக்கு ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் இம்மாநாட்டில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான ஐம்பது வீத வாக்குகள் எந்தவொரு வேட்பாளருக்கும் கிடைக்காமல் போய்விடும் என்றும், இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டை மேலும் பிளவுபடுத்தும் என்றும் கூறியிருந்தார்.
அதேநேரம், தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஆராய்ந்து தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஒன்பது பேர் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான இந்தக் குழுவில் எஸ். அருமைநாயகம், ஏ. சேனாநாயக்க, நளின் ஜே. அபேசேகர, ஆர்.என்.சி. சேனாரத்ன பெரேரா, ஏ.எல்.எம். சலீம், சகாரிகா டெல்கொட, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் தீபானி சமந்தா ரொட்ரிகோ ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்தக் குழு தனது பணியை முடிப்பதற்கு ஆறு மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதிக்குள் இக்குழுவின் பணி முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஒட்டுமொத்த தேர்தல்கள் குறித்தும் ஆராய்வதற்கான பொறுப்பு இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டிருப்பதால் பல்வேறு சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது.
மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் மற்றும் காலத்துக்குப் பொருத்தமான முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்பன இதில் அடங்குவதால், குழுவுக்குப் பாரிய சவாலொன்று உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் தேர்தல் குறித்து ஜனாதிபதி வழங்கிய அறிவித்தல்களுக்கு ஒத்திசைவாக இந்தக் குழுவின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், ‘விசேட பரிசீலனைக்கு’ இந்தக் குழுவினால் அனுப்பப்படும் பெரும்பாலான பிரச்சினைகள் ஜனாதிபதித் தேர்தலைப் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன், அரசியலமைப்புக்கு அமைய அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவும் வேண்டும்.
தேர்தலுக்கான முயற்சிகள் இவ்வாறிருக்கையில், அமைச்சரவையில் ஜனாதிபதி மேற்கொண்ட மாற்றங்களும் அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.
சுகாதார அமைச்சராகவிருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், போதிய மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லையென்றும் எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கொண்டுவரப்பட்டது. இருந்தபோதும் அதில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
எனினும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் கெஹலிய ரம்புக்வெல்லவிடமிருந்து சுகாதார அமைச்சுப் பதவி மீளப்பெறப்பட்டிருந்தது.
கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரணவுக்குத் தற்பொழுது சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்த பெருந்தோட்டத்துறை அமைச்சுப் பதவி கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டது. பெருந்தோட்டத்துறை குறித்த அமைச்சரவை அந்தந்து அற்ற அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டார்.
அதேநேரம், ஹெகலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. சுற்றாடல் அமைச்சராகவிருந்த நசீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்தமையால், அத்துறைக்கான வெற்றிடம் காணப்பட்டது.
ஜனாதிபதியின் இந்த அமைச்சரவைத் திடீர் மாற்றம் குறித்து அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான பொதுஜன பெரமுன தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலருக்கு அதாவது கடந்த அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவர்களுக்கு அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்தது. எனினும், புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் முயற்சியை ஜனாதிபதி மீண்டும் எதிர்த்துள்ளமையே இந்த மறுசீரமைப்பின் மூலம் தெரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது. அரசியலமைப்பு ரீதியாக, ஜனாதிபதி மேலும் எட்டு அமைச்சர்களை நியமிக்க முடியும்.
ஜனாதிபதியின் இந்த அமைச்சரவை மறுசீரமைப்புத் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டிருப்பதுடன், ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைப்பதைக் காணமுடிகிறது. கூட்டணியமைத்துச் செயற்படும்போது ஒன்றிணைந்து எவ்வாறு முடிவுகளை எடுப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி உணர்ந்து செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வரை மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தாம் இணைந்து செயற்படுவோம் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு பொதுஜன பெரமுனவுக்குள் சிறியதொரு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். விசேடமாக 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வாறான காய்நகர்த்தல்கள் அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.