ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய சீனப் பயணத்தை, பொருளாதாரப் பாதாளத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வாய்ப்பாகக் குறிப்பிடலாம். சீனாவில் இடம்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பிற்கான “பட்டி மற்றும் பாதை” முன்னெடுப்பு மாநாட்டில் பங்கேற்று கடந்த ஒக்டோபர் 16 முதல் 20ஆம் திகதி வரை சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு சீன ஜனாதிபதி, துணைப் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களை, நிபுணர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்தார். சர்வதேச ஒத்துழைப்புக்கான “பட்டி மற்றும் பாதை” முன்னெடுப்பு மாநாடு இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக நடைபெற்றது. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் எண்ணக்கருவுக்கு அமைவாக ஆரம்பமான இந்த மாநாடு ஐந்து நாட்களாக 20 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட 130 நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் பீஜிங்கில் நடைபெற்றது.
இதன் போது எதிர்காலத்தில் “பெல்ட் அன்ட் ரோட்” முன்னெடுப்பு வேலைத்திட்டத்துக்கு அடிப்படையாக முன்மொழியப்பட்ட எட்டு அம்சக் கொள்கைத் தொடரை வெளியிட்ட சீன ஜனாதிபதி, அனைவரும் கைகோர்த்துக் கொண்டு ஒருவருக்கொருவருடனான ஒத்துழைப்பதனூடாக எழுச்சி பெறுவதே இந்த எண்ணக்கருவின் அடிப்படை நோக்கம் என்றும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட இலங்கை தூதுக் குழுவில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தனர். நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக எவ்வித அரசியல் நோக்கங்களுமின்றி இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயார் என்றும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிச் செயற்படுவதே தமது நோக்கம் என்றும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அங்கு தெரிவித்தார். இது ஜனாதிபதியின் சீன விஜயத்தின் சுருக்க குறிப்பாகும்.
விஜயத்தின் முதல் நாளை ஆரம்பித்து வைத்து, 16ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறை தொடர்பான அமர்வில் கலந்து கொண்டதோடு, போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கை படிப்படியாக முன்னேறிச் சென்று கொண்டிருப்பதால் எதிர்கால வர்த்தக வாய்ப்புக்களுக்காக இலங்கையைத் தளமாக ஆக்கிக் கொள்ளுமாறு இதன் போது ஜனாதிபதி சீன வர்த்தகர்களிடம் அழைப்பு விடுத்தார். இலங்கையின் பூகோள அமைவிடத்தின் காரணமாக ஆசிய பிராந்தியத்தின மேற்கு சந்தையை வெற்றி கொள்வதற்காக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு விசேட வாய்ப்பு காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, முதலீட்டு சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் இதன் போது சீன வர்த்தகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக் குழுவினர் கடந்த 17ம் திகதி காலை பீஜிங்கில் அமைந்துள்ள ஹூவாவி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டதோடு, இதன் போது சீனாவின் (Huawei) நிறுவனத்தின் கண்காணிப்புப் பயணத்திலும் ஈடுபட்டனர். இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடந்தோரும் உருவாக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒத்துழைப்பை வழங்குவதற்கு தமது நிறுவனம் ஆயத்தமாக இருப்பதாக ஹூவாவி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் ஹூவாவி ஆசியா பசுபிக் பிராந்திய தலைவர் சைமன் லின் (Simon Lin) ஆகியோர் இதன் போது குறிப்பிட்டனர்.
எதிர்கால உலகிற்கு பலத்துடன் முகங்கொடுப்பதற்காக இலங்கையில் மிகவும் போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது குறிப்பிட்டார். இலங்கையின் பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஹூவாவி நிறுவனம் உதவி வழங்குவது தொடர்பான ஒப்பந்தமும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது.
இந்த விஜயத்தின் மூன்றாம் நாளான கடந்த 18ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்றாவது “பெல்ட் என்ட் ரோட்” முன்னெடுப்பு சர்வதேச மாநாட்டை ஒத்ததாக அன்றைய தினம் மாலை சீனா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “இயற்கை இணக்கங்களுக்காக பசுமை பட்டுப்பாதை” என்ற தலைாப்பில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். செயலமர்வு சீன மக்கள் குடியரசின் உப ஜனாதிபதி ஹான் ஷெங்க் (Han Zheng) தலைமையில் ஆரம்பமானதோடு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்தோனியோ குடரெஸ் (Antonio Guterres) மற்றும் ஏனைய நாடுகளின் அரச தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்தனர். எதிர்கால காலநிலை மாற்றங்களுக்கு வலுவான முறையில் முகங்கொடுப்பதற்காக வெப்பமண்டல நாடுகளை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
உலகில் காணப்படும் தாவர இனங்களில் 80% மற்றும் அனைத்து பவளப்பாறைகள் மற்றும் கண்டல் தாவரங்களில் 50 வீதமானவை வெப்பமண்டல பிராந்தியங்களிலேயே அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த நிலையினைப் பின்புலமாகக் கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றங்களைக் குறைப்பதற்கு முழு உலகும் ஒன்று சேர்ந்து தீர்வினைத் தேட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகக் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் சலுகைகளை வழங்குதல், அதிக வருமானம் பெறும் நாடுகளுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி உள்ளிட்ட ஏனைய பலதரப்பு நிறுவனங்களின் ஊடாக மேலதிக நிதியுதவிகளை வழங்குதல் போன்ற மூன்று திட்டங்களையும் முன்வைத்தார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுகளுக்கு சாதகமான முறையில் பதிலளித்த சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கை முன்வைத்த யோசனை தொடர்பில் கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளின் ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மறுநாளாள கடந்த 19ம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒப்புக்கொண்டனர்.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான இலங்கையின் முயற்சி மிகவும் அத்தியாவசியமானது மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டது என அந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அன்றைய தினம் மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீன துணைப் பிரதமர் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று பீஜிங்கில் இடம்பெற்றது. சீன மக்கள் குடியரசுடன் இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதன் ஊடாக இலங்கை தமக்கு வழங்கிய ஒத்துழைப்பை சீன மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், சீனா எப்போதும் இலங்கையை நோக்கி ஒத்துழைப்புக்கான இரு கரங்களையும் நீட்டுவதாகவும் சீன துணைப் பிரதமர் திங் யேசங் இதன் போது தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக “பட்டி மற்றும் பாதை” வேலைத்திட்டத்தின் கீழ் முழுமையான உதவிகளை வழங்குவதாகவும் இதன் போது குறிப்பிட்ட சீன துணைப் பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முடிக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை RCEP எனும் பிராந்திய பொருளாதார உறவுகள் அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் அன்றைய தினம் சீனாவின் தொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், BYD நிறுவனம் உள்ளிட்ட முன்னணி சீன நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். துறைமுக நகரை சர்வதேச நிதி மையமாக அபிவிருத்தி செய்தல், துறைமுக நகர வளாகத்துக்கான புதிய நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், துறைமுக நகர வளாகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட நீதித்துறை மற்றும் மத்தியஸ்த நடைமுறைகளை அமைத்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதேபோன்று, இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்பை மின்சாரத்தில் செயற்படுத்துவதற்கு இடமளித்தல், மின்சார வாகனங்களைப் பொருத்துதல் மற்றும் மின்சார புகையிரத சேவை உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அன்றைய தினம் மாலை இலங்கை ஜனாதிபதி பீஜிங் நகரில் “சுது துரங்க” விகாரைக்குச் சென்று அதன் விகாராதிபதி இன் லீ தேரரைச் சந்தித்து கலந்துரையாடினார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது இந்த “சுது துரங்க” விகாரைத் வளாகத்தில் இலங்கையின் விகாரை மண்டபம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவின் மூலமாக நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் பின்னைய காலங்களில் அதன் பணிகள் செயற்படவில்லை.
எனவே அந்த இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும், விகாரை மண்டப திட்டத்தை புதிதாக உருவாக்குமாறும் ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார். இதனடிப்படையில் சீனாவின் முதலாவது பௌத்த விகாரையாகக் கருதப்படும் ஹினான் மாகாணத்தில் உள்ள “சுது துரங்க” விகாரை வளாகத்தில், இலங்கை பாரம்பரிய கட்டடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் விகாரை மண்டபம் மற்றும் தூபி ஆகியவற்றை நிர்மாணிக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஃபாஹியன் துறவி இலங்கையிலிருந்து சீனாவிற்கு கொண்டு வரப்பட்ட பௌத்த சமய பாலி வேதத்தின் பிரதிகளை இந்த விகாரை மண்டபத்தில் வைப்பதற்காக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை கடந்த 20ம் திகதி காலை சீனாவின் மக்கள் மண்டபத்தில் இடம்பெற்றதோடு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா நட்புரீதியான, நடைமுறை மற்றும் விரைவான ஆதரவை வழங்கும் என்று சீன ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையில் இலங்கையின் மூலோபாய சுதந்திரம் பிரதிபலித்தது எனக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி, இலங்கையின் நடுநிலை நிலைப்பாட்டையும் பாராட்டினார்.
சீனா, மியன்மார், இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை இணைக்கும் கடல்சார் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவது இலங்கையின் எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதுடன், அதனை ஆரம்பிக்குமாறு சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
மாநாட்டுடன் இணைந்ததாக சீனாவில் இடம்பெற்ற 29வது ITS உலக சம்மேளன அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அங்கு உரையாற்றும் போது, “பெல்ட் அன் ரோட்” முன்னெடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பல நாடுகளில் நிர்மாணத்துறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பல திட்டங்களுக்கு பல தனித்துவமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் நாடுகளுக்காக புதிய புகையிரதப் பாதைள், வீதிகள், துறைமுகங்கள் மற்றும் ஏனைய திட்டங்களில் முதலீடு செய்வதற்காக நாடுகளுக்குள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வதில் “பெல்ட் என்ட் ரோட்” முன்னெடுப்புத் திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது, சீனா இலங்கையினுள் போக்குவரத்து, நீர், மின்சாரம், துறைமுகம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை நிறைவேற்றி, நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், கொழும்பு நகரை விமான நிலையத்துடன் தொடர்புபடுத்தி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அறிமுகப்படுத்தியதன் மூலம் விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை மிகத் துரிதமாக விமான நிலையம் கொண்டு செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தியின் மூலம் தொழில்முயற்சியாளர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சந்தையில் நுழைவதற்கு அதிக ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு புலமைப் பரிசில்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் உள்ளகப் பயிற்சி போன்றவற்றிற்கான 1200க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை சீனா வழங்கியுள்ளமை தொடர்பில் கலாநிதி பந்துல குணவர்தன தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கை “பட்டி மற்றும் பாதை ” முன்னெடுப்புத் திட்டத்தினுள் பொருளாதார மையமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இலங்கை பிராந்தியத்தில் ஒரு முன்னணி வழங்கல், வர்த்தகம் மற்றும் உற்பத்தி மையமாக ஆகும் என்ற எதிர்பார்ப்புக்கு “பட்டி மற்றும் பாதை ” முன்னெடுப்பு திட்டத்திற்கு சிறப்பான பங்கைச் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டின் ஊடாக நட்புறவு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் வலுவான உறவைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதுடன், ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் அனைவருக்கும் நிலையான அபிவிருத்தியையும், அனைவரும் அனுபவிக்கக் கூடிய நன்மைகளையும் மற்றும் மிகவும் நெருக்கத்துடன் இணைக்கப்பட்ட உலகை உருவாக்கிக் கொள்வதற்கும் முடியும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நம்பிக்கை தெரிவித்தார்.
சுரேகா நில்மினி இலங்ககோன் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்