நதியோரமாய்
நான்…!
ஓ…!
விதிசெய்த
சதியாலே அல்ல
விதிதந்த மதியாலே…!
நதியோரமாய்…
நதியோர…
நாணலோரமாய் நான்…!!
சதியேதும் அறியாத
நதிதந்த சுதியாக…
புதிதான கதியாக…!!
கதிகலங்காமலே
மதியாலே வாழுகிறேன்…!
விதிப்பயணத்தை
மதிப்பயணமாய்
மாற்றியமைத்தபடியாக…!!
நாணல்கள்
நர்த்தன மகளிராய்
நளினங்கள் புரிகின்றன…
வாழ்வின் கோலங்கள் தெரிகின்றன…!
மகிழ்கிறேன்…!!
மெல்லிய காற்று
செல்லமாய்
வருடிச் செல்கிறது…
தாயின் தாலாட்டாய் உணர்கிறேன்…!
தந்தையின் தமிழாய் நுகர்கிறேன்…!!
பறவைகள் வந்து
பாடல்கள்
இசைக்கின்றன…!
என்
பள்ளிக்கூடத்து
மாணவர்களைப்
பாசத்தோடு
நினைத்துப் பார்க்கிறேன்…!!
இத்தனைக்கும் மத்தியிலே…
மொத்தமாய்…
விமர்சனங்கள்
சுத்தி வருகையிலே…
சலவைக் கல்லாக…
சாதிக்கத் தெரியாத
கல்லாக…
சறுக்கும் கல்லாக…
சங்கீதம்
இசைக்கத் தெரியாத
கல்லாக…
அவர்களின் பார்வையிலே…
அப்பாவியான
அவர்களுக்குப் பாவியான
நான்…!!
கரையோரமாய் வசிக்கும் என்னிலே
நுரைபெருகி வழிகிறது இப்போது…
நீராட வந்தவர்கள்
தங்களுக்குச்
சவர்க்காரம் இட்ட
தங்கள் கால்களை உரசிஉரசி
அழுக்குகளை நீக்கும் போதும்…
நீர்வீழ்ச்சி நுரையாக…
அதுவே துணையாக…!!
என்னிலே…
பெருகி வழியும் நுரைகளை
பெருகிவரும் ஆறு வந்து
பெருமையோடு நீராட்டி
தன்நுரைகளைத்
தடமாக்கி விட்டுச் செல்கிறது…
இந்தியாவின் சந்திரயான்
விண்கலம் போலவும்…!
இன்னும் அந்த…
சாதிக்கத் துடிக்கும் அதன்
ஆதித்யான் விண்கலம் போலவும்…!!
பாவம் அவர்கள்…!
அவர்கள்மீது
கோபம் கொண்டென்ன (இ)லாபம்…??
ஆம்… அவர்கள்
தூசித்து நிற்கையிலும்…
நேசிக்கத் தெரிந்த கல்லாகவே
அவர்களும் வாழவேண்டும்
என்பதற்காகவே…
வாசித்துக் கொண்டிருக்கிறேன்…!
தன்னந் தனியாக
வசித்துக் கொண்டிருக்கிறேன்…
இருவரும்
ஒன்றாகப் பயணித்து
கொடிய கொரோனாக் காலத்திலே…
என்னை மட்டும்
பாதுகாப்பாய்
வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு…
நேர காலம் பார்த்து
நெறி முறைகள் காத்து
நல்ல முறையாய்
எம்மெல்லோரையும்
மேன்மேலும் நல்வழிப்படுத்திடவே…
தனியாகவே ‘அமரலோகவாசம்’ எய்தித்
தடம் பதிக்கப்போன
அருமைக்கினிய அப்பாவாக…!
கரையோரக் கல்…!
509
previous post