553
குயவன் வனைந்து வைத்த
வனப்பான பானை
அடுக்களையை
அலங்கரித்துக் கொண்டிருக்கும்
ஒரேயொரு அலங்காரப்
பொருள் அதுதான்
எங்கள் வயிற்றுக்கும் அதற்கும்
சிறிதளவும் வித்தியாசமில்லை
அதன் வாயும்
எங்கள் வயிறும்
நிரம்பியதேயில்லை
மூன்று வேளையும்
வெண்முகம் காட்டும் பானையை
எட்டி எட்டிப் பார்த்ததுண்டு
மூச்சைவிட
பானையை
நிரப்புவதற்கு ஏதுமில்லை
கறுப்புச் சாயம்
இல்லை என்றாலும்
அம்மா சுத்தம்
செய்யத் தவறியதேயில்லை
“பானையைக்
கழுவவில்லை என்றால்
திருமகள் வரமாட்டாளாம்”
அடிக்கடி அம்மா
சொல்வதுண்டு
ஏப்பம் வரும் போதெல்லாம்
உண்டுவிட்டதாக ஒரு திருப்தி
ஒருமுறையேனும்
நிரம்பிவிடட்டும்
வனப்பான பானையும் வயிறும்.