இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடந்த சுமார் மூன்று வார காலமாகத் தொடருகின்ற தீவிர யுத்தத்தினால் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் அனுபவிக்கின்ற துன்பங்களை அறிந்து ஒட்டுமொத்த உலகமே துயரடைந்துள்ளது.
காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருப்பதால் அப்பிரதேசம் உருக்குலைந்து போய்க் கிடப்பதுடன், அங்கு சாதாரண மக்களின் உயிர்ப்பலிகளும் சொல்லொணா அவலங்களும் முடிவின்றித் தொடருகின்றன.
மருத்துவமனை, வணக்கத்தலம், அகதிகள் தங்குமிடம் என்றெல்லாம் எதுவுமே தாக்குதலுக்குத் தப்பவில்லை. உயிர், உடைமை அழிவுகளை கணக்கிடவே முடியாதிருப்பதாக அங்கு பணிபுரிகின்ற தொண்டு நிறுவனங்கள் கவலையுடன் அறிக்கையிடுகின்றன.
இத்தனை மனிதப்பேரவலம் அங்கு தொடருகின்ற போதிலும், யுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் அமைதிவழிக்கு வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.
மூன்று வார காலத்துக்கு முன்னர் இஸ்ரேல்- காஸா யுத்தம் உக்கிரமாக வெடிப்பதற்குக் உடனடிக் காரணமாக அமைந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் அதிரடியான தரைவழி, வான்வழி அகோரத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் குழுக்களின் உக்கிரத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதத்தில் மூன்று வார காலமாக இஸ்ரேல் படையினர் நடத்திக் கொண்டிருக்கின்ற மோசமான வான்வழித் தாக்குதலில் பலஸ்தீன தரப்பில் ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் இதுவரை பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதரப்பிலும் பலியானோரில் பெரும்பாலானோர் சாதாரண மக்கள் என்பதுதான் கவலைதரும் விடயம். அதுவும் காஸா மீதான தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயாளர்கள் என்றெல்லாம் பாகுபாடின்றி மக்கள் அனுபவிக்கின்ற பேரவலம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாததாகும்.
யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் ஒருபோதுமே மனித அவலங்களை கவனத்தில் கொள்வது வழக்கமில்லை. எதிர்தரப்பை தோல்வியுறச் செய்வதும் பழிவாங்குவதுமே ஆயுதமேந்தியோரின் ஒரே குறிக்கோளாக அமைவதுண்டு. அப்பாவிப் பொதுமக்களின் துன்பங்களையோ உலகின் வேண்டுதல்களையோ அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தில் இன்று நடப்பதுவும் அதுதான்.
யுத்தத்தை நிறுத்துமாறும், அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாக்குமாறும் உலகின் பல நாடுகளிலிருந்து குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இலங்கையிலும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் இனமத பேதமின்றி அமைதிக்கான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். அங்கு மரணஓலங்கள் ஓய்ந்து அமைதி பிறக்க வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த உலகமும் அமைதி முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதே எமது ஏக்கம்.