தரவு சேகரிப்பில் புதிய அறிவியல் முறை; Random Access Management Information System ஊடாக கடமையைச் செய்யாத அதிகாரிகளும் சிக்குவர்
வரி ஏய்ப்பு செய்யும் வர்த்தகர்கள் மற்றும் முறையாக வரி வசூலிக்காத அதிகாரிகளின் விவரங்களை சேகரிக்கும் முறையான ‘Rams’ என்று அழைக்கப்படும் இலத்திரனியல் கட்டமைப்பான (Random Access Management Information System) எழுமாறான அணுகல் முகாமைத்துவ தகவல் கட்டமைப்பை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இறைவரித்துறையின் கீழ் இயங்கும் இந்த ‘Rams’ கட்டமைப்பின் மூலம் வங்கிகள், சுங்கம், கலால் வரி போன்றவை கண்காணிக்கப்படுகின்றன.
பல வருடங்களுக்கு முன்னர் இந்தத் தகவல் முறைமை இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு, இந்த அமைப்பை எவ்வாறு செயற்படுத்துவதென்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்ட போதிலும், பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது தாமதமாகி வருவதாகக் கூறப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய முறை அதிகாரிகளுக்கு வருமான வரி வசூல் செய்வதை எளிதாக்குவதுடன், வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறியவும் உதவும். வருமானக் கோப்புகளை திறக்காத நபர்களைக் கண்டறியவும் அதிகாரிகள் வருமான வரி வசூலிக்கத் தவறினால் அவர்களை இந்த புதிய முறையின் கீழ் அம்பலப்படுத்தப்படுவதையும் கண்டறிய முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், இந்த ‘Rams’ முறையை நடைமுறைப்படுத்தி பராமரிக்குமாறு சாகல ரத்நாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார். இதற்கமைய நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்தப் புதிய முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தரவு சேகரிப்பு வலையமைப்பும் இதன் கீழ் உருவாக்கப்படும். அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதானிகள் தங்கள் கைபேசி அல்லது கணினியில் இந்த அமைப்பு சரியாக வேலை செய்கிறதா? என்பதை கண்காணிக்கவும் வாய்ப்புள்ளது.