இலங்கையின் உயர்கல்வி மேம்பாட்டில் மாலபேயில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவகம் மிகவும் உன்னதமான சேவையை வழங்கி வருகிறது. கடந்த 9ஆம் திகதி SLIIT பல்கலைக்கழகத்தின் புதிய கிளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
மாலபேயில் அமைந்துள்ள SLIIT இன் மானுடவியல் மற்றும் விஞ்ஞானங்கள் பீடத்தின் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் தை. தனராஜ் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி…
இலங்கையின் உயர்கல்வித்துறை பற்றி விளக்கம் தருவீர்களா?
இலங்கையின் மூன்றாம் நிலைக் கல்வி (Tertiary Education) யில் உயர்கல்வி ஒரு பகுதியாகும். உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் தொழில்வாண்மைக் கல்வி ஆகியவை இணைந்தே மூன்றாம் நிலைக் கல்வி எனப்படுகிறது. உயர்கல்வி என்பது பல்கலைக்கழகக் கல்வியை குறிக்கும். இலங்கையில் திறந்த பல்கலைக்கழகம், உட்பட பதினெட்டு அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை தவிர குறிப்பிட்ட அமைச்சுக்களின் கீழ் ஐந்து பல்கலைக் கழகங்கள் உள்ளன. உதாரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இரத்மலானை யுனிவொக் (UNIVOC) பல்கலைக்கழகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களையும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டங்களையும் வழங்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அரசுசாரா உயர் கல்வி நிறுவனங்கள் (Non State Higher Education Institutions ) எனப்படுகின்றன. SLIIT இவற்றில் ஒன்றாகும். இவற்றைத் தவிர வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டங்களை மாத்திரமே வழங்கும் நிறுவனங்கள் இலங்கையில் பரவலாக காணப்படுகின்றன.
SLIIT பல்கலைக்கழகத்தின் ஆரம்பம் பற்றி கூறுவீர்களா ?
1999ஆம் ஆண்டு அரச அங்கீகாரத்துடன் தகவல் தொழில் நுட்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் SLIIT ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது. சுமார் 40,000 க்கும் மேற்பட்ட SLIIT இன் பழைய மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரிவதோடு பலர் உயர் பதவிகளிலும் உள்ளனர். தற்போது SLIIT ஆனது தொழில்நுட்பம், முகாமைத்துவப் பொறியியல், மானுடவியல் மற்றும் விஞ்ஞானங்கள் மற்றும் உயர் பட்டப்படிப்புக்கள் ஆகிய ஐந்து பீடங்களைக் கொண்டுள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் கற்பிக்கின்றனர். இவர்களில் சுமார் 25 பேராசிரியர்களும் 60 கலாநிதிகளும் அடங்குவர். மாலபே SLIIT பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் கல்விசார் வசதிகளும் உள்ளன.
SLIIT ஆரம்பத்தில் மாலபேயில் மட்டும் இயங்கிய போதிலும் இன்று கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், மாத்தறை, பல்லேகல ஆகிய இடங்களிலும் தன்னுடைய கிளை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
SLIIT பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு அனுமதி பெறலாம்?
ப. கடந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சையில் தகுதி பெற்ற ஒரு இலட்சத்து எழுபத்தேழாயிரம் மாணவர்களில் 44,000 மாணவர்களுக்கு மாத்திரமே அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைத்தது. உயர் சித்தி பெற்ற மாணவர்களுக்குக் கூட பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமை மிகவும் வருத்தத்துக்குரிய விடயமாகும். ஆனால் SLIIT அனுமதி பெற க.பொ.த. உயர்தரத்தில் மூன்று சாதாரண சித்திகள் போதுமானவை. அத்துடன் SLIIT நடத்தும் அனுமதிப் பரீட்சையில் சித்தி பெறுவது கட்டாயமாகும்.
SLIIT இலாப நோக்கம் கொண்ட நிறுவனமா?
ப. நிச்சயமாக இல்லை. SLIIT ஹாவர்ட், ஸ்டான்போர்ட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் போன்று ஒரு சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. பேராசிரியர்கள் லலித் கமகே, லக்ஷ்மன் ரத்னாயக்க, நிமால் ராஜபக்ஷ போன்ற உயர்கல்வியின் நிபுணத்துவம் பெற்றவர்களினால் SLIIT வழிகாட்டப்படுகின்றது. இப் பல்கழைக்கழகத்தில் பெறப்படுகின்ற வருமானம் முழுவதும் SLIIT இன் வளர்ச்சியில் மீள முதலீடு செய்யப்படுகின்றது.
SLIIT வழங்கும் பட்டங்களின் உயர்தரம் காரணமாக பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் அமைப்புக்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களின் அமைப்பு முதலிய உயரிய சர்வதேச அமைப்புக்கள் SLIIT வழங்கும் பட்டங்களை அங்கீகரித்துள்ளன.
தங்களது பீடம் பற்றி…..
ப. நான் மானுடவியல் மற்றும் விஞ்ஞானங்கள் பீடத்தில் (Faculty of Humanities and Science ) பணிபுரிகின்றேன். இப் பீடத்தின் தலைவராக துணைப் பேராசரியர் கலாநிதி மாலித்த விஜேசூரிய பணிபுரிகின்றார். சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் கொண்ட இப் பீடத்தில் நாற்பது விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றார்கள். இவர்களில் ஐந்து பேராசிரியர்களும் பதினைந்து கலாநிதிகளும் அடங்குவர். இப் பீடத்தில் கல்வி, விஞ்ஞானம், உளவியல், சட்டம், ஆங்கிலம், கணிதம், மற்றும் புள்ளிவிபரவியல் ஆகிய ஆறு துறைகள் உள்ளன.
புதிய பட்டப் படிப்புக்களைஆரம்பிக்க உள்ளீர்களா?
ப. ஆம். ஆசிரியர்களின் தொழில் வாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் நாம் ஏற்கனவே பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) கற்கை நெறியை சிங்கள மொழியில் வழங்கி வருகின்றோம். இதன் இணைப்பாளராக கலாநிதி விராஜித் கமகே பணிபுரிகின்றார். அத்துடன் விஞ்ஞானம், சமூகவியல், ஆங்கிலம், பௌதீகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கல்விமாணி (B.Ed) பட்டப் படிப்புக்களையும் வழங்கி வருகின்றோம். கலாநிதி சுசில் பெரேரா இவற்றின் இணைப்பாளர். அடுத்த ஆண்டில் நாம் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாட நெறியை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆரம்பிக்க உள்ளோம்.
கல்வி முதுமாணி பட்டப்படிப்பு பற்றி ?
ப. ஆசிரியர்கள் தொழில் வாண்மையை மேம்படுத்தும் நோக்கில் கல்விமாணி (Master of Education) ஆரம்பிக்க உள்ளோம். இதற்காக ஒரேநேரத்தில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் போதனைகள் ஆரம்பிக்கப்படும்.
மேற்படி பட்டப் படிப்புக்களின் விசேட அம்சங்கள் யாவை ?
ப. தற்போது பாடசாலைகளில் பணிபுரிகின்ற ஆசிரியர்களின் வசதிகளின் அடிப்படையில் இக் கற்கைநெறிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மேற்படி பட்டப்படிப்புகளைக் கற்பிப்பதற்கு (Flipped classroom model) பின்பற்றப்படும். இதன் அடிப்படையில் பாடங்கள் பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வார இறுதிகளில் மேற்படி பாடங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். இக்கலந்துரையாடல்களும் நேரடியாகவும் நிகழ்நிலை ஊடாகவும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களின் தொழில் வாண்மையை மேம்படுத்துவதே எமது அடிப்படை இலக்காகும்.
கல்வி முதுமாணிப் பட்டத்தில் விசேட அம்சம் உள்ளதா ?
ப. கல்வி முதுமாணிப் பட்டப்படிப்பை 12 மாதங்கள் அல்லது 24 மாதங்களில் நிறைவு செய்யமுடியும். 24 மாதங்களில் நிறைவு செய்வோர் நேரடியாக கலாநிதி பட்டத்துக்குத் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.
ஆசிரியர் சமூகத்துக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?
ப. நான் தற்போது பேராசிரியராக கடமை புரிந்தபோதும், ஆசிரியனாகவே எனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தேன். எனது காலத்தில் இப்போதுள்ள வசதி, வாய்ப்புக்கள் எதுவும் இருக்கவில்லை. உயரிய இலக்கு, கற்பதில் ஆர்வம், கடின உழைப்பு ஆகியவையே நான் இந்த நிலையை அடைய எனக்கு உதவின.
இவற்றைவிட மிகவும் முக்கியமானது, எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் அவர்கள் எனக்களித்த வழிகாட்டல்களும். மானுட வாழ்க்கையில் மற்றவர்கள் பின்னிப்பிணைந்திருந்தாலும் இன்று போல் மனிதன் மாற்றங்களுக்கு முகம் கொடுத்ததில்லை. இம்மாற்றங்களை ஏற்று அவற்றுக்கு உடன்பாடாகத் துலங்கும் வகையில் இன்றைய ஆசிரியர்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள் ஆகும்.
நேர்காணல் - அஷ்ரப் ஏ சமத்