புறக்கோட்டை (Pettah) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் பெரும் வர்த்தக நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப் பகுதியான கோட்டையிலிருந்து கிழக்காக உள்ளது. இங்குள்ள திறந்தவெளிச் சந்தையும் கடைகளும் புகழ்பெற்றவை.
கொழும்புத் துறைமுகம், புகையிரத நிலையம், மத்திய தனியார் அரச பஸ் நிலையங்கள் என்பன புறக்கோட்டையின் முக்கிய பகுதிகளாக உள்ளன. இதனால் இப்பிரதேசத்தில் ஒருநாளைக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாளாந்தம் வந்து போகும் பிரதேசமாக புறக்கோட்டை காணப்படுகின்றது.
வர்த்தக நடவடிக்கைக்காக இலங்கையின் நாலா பாகங்களில் இருந்தும் வர்த்தகர்கள், பொதுமக்கள் புறக்கோட்டைக்குள் வருகின்றனர். இப்பகுதியின் கட்டடங்கள், காணிகள், சொத்துக்கள் என எல்லாமே ஏனைய பகுதிகளிலும் விலை மதிப்பு மிக்கவை. அங்குள்ள அனேக கடைத் தொகுதிகள் செல்வந்தர்களால் கட்டப்பட்டு வர்த்தகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டவையே. காலை 08.00 மணி முதல் இரவு 8.-00 மணிவரை பாரிய சன நெருக்கடியைக் கொண்ட பிரதேசமாகக் புறக்கோட்டை காணப்படுகின்றது. நடைபாதை வியாபாரிகள் பாதையின் இரு மருங்கிலும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவர். இதனாலும் அங்கு வரும் மக்கள் பெரிதும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் பார்க்க புறக்கோட்டை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. கட்டடங்கள் மிகவும் நெருக்கமாகக் கட்டப்பட்ட மிகவும் நெரிசல் மிகுந்த பகுதி இது. இங்குள்ள கட்டடங்கள் வர்த்தகர்களுக்கே சொந்தமானவை. பழைய கட்டடங்களை புதுப்பித்து சிலர் கடைத்தொகுதிகளாக மாற்றியுமுள்ளனர். அத்தோடு அக் கடைத்தொகுதிகளை மொத்த, சில்லறை ஜவுளிக் கடைகளுக்கு நீண்ட காலத் தவணை அடிப்படையில் வாடகைக்கும் விட்டுள்ளனர்.
புறக்கோட்டையின் மௌலானா கடைத்தொகுதி என்றால் கொழும்பில் உள்ள அனேகருக்கு மிகவும் பரிச்சியமானது. 7 மாடிகளைக் கொண்ட இக்கட்டடத் தொகுதி புடவைகள், திருமண, முகூர்த்தப் புடவைகள், போன்றவற்றுக்கான மொத்த, சில்லறை விற்பனை நிலையமாக விளங்குகின்றது. இக் கட்டடம் இந்திய வர்த்தகர் மௌலானாவால் கட்டப்பட்டது. ‘மௌலானா சாரம்’ அக்காலத்தில் பிரபலமானது.
அதன் பிறகு நவ்பர் என்பவர் இக்கட்டடத்தினை வாங்கி இங்கு பல கடைத் தொகுதிகளை நிர்மாணித்தார். இக் கடைகள் சிறிய, நடுத்தர வர்த்கர்களுக்கு நீண்டகால குத்தகையடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையும் வழமைபோலவே புறக் ேகாட்டைப் பகுதி காலை 8 மணிக்ேக ஜே ஜே என்று சனக்கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. சாதாரண நாட்களிலேயே கூட்டம் நிரம்பி வழியும் மௌலானா கட்டடத் தொகுதியில், அன்று வெள்ளிக்கிழமை அசாதாரண சனக்கூட்டம் காணப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை இலங்கையின் தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலுமே தீயாய்ப் பரவிய செய்தி புறக்ேகாட்டையின் வர்த்தகக் கடைத் தொகுதியொன்று தீப்பற்றிக்ெகாண்டது என்பதுதான்.
மௌலானா கடைத் தொகுதியில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ பரவி அக் கட்டடத் தொகுதியில் உள்ள அனைத்து கடைத் தொகுதிகளும் அவற்றில் இருந்த பொருட்களும் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளன. இக் கட்டடத்தில் இருந்து தீயணைப்பு படையினரால் காப்பாற்றப்பட்ட 23 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் நச்சுப் புகையைச் சுவாசித்ததால் 6 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 18 முதல் 25 வயதுடையவர்கள் என்பதோடு அவர்களில் 11 பேர் பெண்களாவர் என கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார். அனேகர் அக்கடைத் தொகுதிகளில் பணியாற்றுவோர்.
தீ விபத்து ஏற்பட்ட போது அருகில் இருந்த பொதுமக்களில் சிலர் இத் தீ விபத்துப் பற்றித் தெரிவிக்கையில், இக் கடைத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில் காலையில் கடையைத் திறந்ததும் தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டையைப் பற்றவைக்கும் நோக்கில் அங்கு பணியாற்றிய ஒருவர் தவறுதலாக அதற்குள் பெற்றோல் ஊற்றியதாகவும் உடனேயே அது விரைவாகப் பரவத் தொடங்கியதாகவும் தெரிவித்தனர்.
இக் கட்டடம் எவ்வாறு தீப் பற்றியது? என்ற விசாரணையை புறக்கோட்டை பொலிஸாரும் மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 09.37க்கு தகவல் கிடைத்த உடனேயே தீயினை அணைப்பதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைக்கும் 30க்கும் மேற்பட்ட படையினர் 8 க்கும் மேற்பட்ட தீயணைக்கும் பவுசர்களையும் கொண்டு தீயினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாக தீயணைக்கும் அதிகாரி தெரிவித்தார். இத் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டல் அதனுடன் நெருக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் ஏனைய கடைகளிலும் தீ பரவியிருக்கக் கூடும் என அவர் தெரிவித்தார். இந் நடவடிக்கையில் முப்படையினருடன் பொலிஸாரும் பொதுமக்களும் ஒத்துழைத்ததாக கொழும்பு தீயணைக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலைத்தேய நாடுகளின் தலைநகரில் உள்ள வர்த்தகத் தொகுதிகள் போன்று கொழும்பின் வர்த்தக கட்டடத் தொகுதிகள் அமையாதது துரதிர்ஷ்டமே. பாதுகாப்பு வசதிகள், முறையான வாகனத் தரிப்பிடம், தீயணைப்புப் பிரிவு, நீர் மற்றும் மலசல கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள், மற்றும் நவீன நகரமயமாக்கல் திட்டங்கள் இங்கு கடந்த ஒரு நூற்றாண்டாக செயற்படுத்தப்பட வில்லை. கடைத்தொகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தனிப் பிரிவுகளாக அமையப் பெற்றிருத்தல் வேண்டும். தனியார் தாம் நினைத்தவாறு தமது கட்டடங்களை நிர்மாணித்துக் கொண்டுள்ளனர். இங்கு வர்த்தக கடைத் தொகுதிகள், இலக்ரோனிக் பிரிவு, ஜவுளிகள் பிரிவு, ஆபரணப் பிரிவு, உணவுப் பிரிவு, கட்டடப் பொருட்கள், என தொகுதிகள் பிரிக்கப்பட்டு, வசதியானதொரு வர்த்தக மையமாக புறக்கோட்டை அமையவில்லை. இதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும் கொழும்பு மாநகர சபையும் இணைந்து எதிர்காலத்தில் சிறந்த நகரமயமாக்கல் திட்டத்தினை உருவாக்கி புறக்கோட்டையை சிறந்த அழகானதொரு வர்த்தக மையமாக மாற்றினால் மட்டுமே கடந்த வெள்ளிக் கிழமை போன்றதொரு அனர்த்தம் மேலும் இடம் பெறாமல் தவிர்க்கலாம்.
அஷ்ரப் ஏ சமத்