தற்போது எமது நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுவதினால், தொற்றுநோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறு அதிகளவில் காணப்படுகின்றது. ஏற்கெனவே எமது நாட்டில் டெங்குநோய்த் தாக்கம் பெரிதாக தாண்டவமாடுவதுடன், தற்போது வடமாகாணம் உட்பட பல்வேறு இடங்களில் கண்நோயும் பரவலாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வேளையிலேயே எமது அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்களில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையால் பல்வேறு இடங்களில் தொற்றுநோய்கள் பரவுகின்றமையை சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்துறையினர், வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசக்கோளாறுடன் கூடிய காய்ச்சல் பரவுகின்றமை பதிவாகியுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். அத்துடன், இவ்வேளையில் டெங்கு மற்றும் கண் நோய்களும் பரவுவதாகவும், சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நோய் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரித்துள்ள சுகாதாரத்துறையினர், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கினால் மாத்திரம் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 62,168 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, காலி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயம் உள்ள மாவட்டங்களாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,
இம்மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நுகேகொடை, கொதட்டுவ, அத்தனகல்ல ஆகிய இடங்களிலும் டெங்குநோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாகவும், சுகாதாரத்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இவற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் கடந்த வாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13,203 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்நோய் ஆரம்பத்தில் வடமாகாணத்தில் பரவி தற்போது பல்வேறு இடங்களிலும் அது விரைவாகப் பரவி வருகின்றது. கண்நோயைப் பொறுத்தவரையில் கண் சிவத்தல், கண் வீங்குதல் ஆகியன இந்த நோய்க்குரிய அறிகுறிகளாக உள்ளன.
ஆகையினால், எமது உடல், உளம் சார்ந்த ஆரோக்கியத்தில் நாமே அக்கறையுடனும் முற்கூட்டிய விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியமாவதுடன், இவ்வாறான தொற்றுநோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும் வகையில் ‘வரும் முன் பாதுகாப்போம்’ என்பதற்கமைய எமது அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.
மழைக் காலத்தில் உணவு மற்றும் குடிநீரே எமக்கு கிருமித்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைவதுடன், இவற்றினால் எமது உடலினுள் மிக இலகுவில் கிருமிகள் புகுந்து விடுகின்றன. நோய்க்கிருமிகள் எங்கிருந்து உருவாகின்றனவெனத் தெரியாமல், அந்நோய்க்கிருமி துரிதமாக எமது உடலினுள் பரவி நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி விடுகின்றது.
உணவு மற்றும் குடிநீரில் கிருமிகள் பரவி உள்ளமை தொடர்பாக எமக்குத் தெரியாமலேயே, அவற்றை நாம் உள்ளெடுப்பதினால், எமக்குத் தெரியாமலே எமது உடலினுள் நோய்க்கிருமிகள் மிக இலகுவாக புகுந்து பல்வேறு தொற்றுநோய்களை ஏற்படுத்தி விடுவதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரக் கல்வி அதிகாரி ஏ.ஜெயபாலன் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.
உணவைப் பொறுத்தவரையில் உணவு தயாரிக்கும் போதும், ெவளியே உணவைக் கொண்டு செல்லும் போதும், உணவைச் சேமித்து வைக்கும் போதும், உணவு விநியோகத்தின் போதும், உணவு பரிமாறும் போதும் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன், குடிநீரைப் பொறுத்தவரையில் மழைக் காலத்தில் கொதித்தாறிய நீரை நாம் பருகுவதே உகந்ததாகுமெனவும், அவர் தெரிவித்தார்.
பழங்கள் போன்ற நேரடியாக உட்கொள்ளும் உணவு வகைகளை சுத்தமான ஓடும் நீரிலோ, உப்புக் கலந்த நீரிலோ நன்றாகக் கழுவியே உட்கொள்ள வேண்டும்.
மேலும், சிறு பிள்ளைகளை பொறுத்தவரையில் அவர்கள் மலசலகூடத்தை பாவிக்க பழக்கப்படுத்த வேண்டுமென்பதுடன், குழந்தைகளின் அணையாடைகளை உரிய முறையில் அகற்ற வேண்டும். அணையாடைகளைக் கழுவிப் பாவிக்கும் பட்சத்தில் அவற்றைக் கழுவுவதற்கு பாவித்த நீரை வெளியில் ஊற்றாது, மலசலகூடத்தினுள் ஊற்றுவதே கிருமிகள் பரவாதிருக்க உகந்ததாகுமெனவும், அவர் தெரிவித்தார்.
மேற்கூறிய விடயங்களுடன் எமது கைகளை ஓடும் நீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்வது அவசியமானதாகும். வெளியிடங்களுக்கு சென்றுவரும் பட்சத்திலும் பிராணிகளை தொட்டு விளையாடும் பட்சத்திலும் எமது கைகளில் அழுக்கு படிந்துள்ளதாக நாம் உணரும் பட்சத்திலும் சவர்க்காரத்தை பாவித்து உரிய முறையில் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். ஏனெனில் எமது கைகளே உணவை வாய்க்கு கொண்டு செல்வதால், முதலில் கைகளை சுகாதாரத்துடன் பேண வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
கண்நோயானது தொடுகை மூலம் துரிதகதியில் பரவக் கூடியதென்பதுடன், அதிகளவில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலேயே அதி கமாக பரவுகின்றது. பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைத்தள பணியாளர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆகையினால், கண்நோய்க்கு உள்ளாகுபவர்கள் ஏனையோருக்கும் கண்நோய் பரவாதிருக்கும் வகையில் முதலில் தம்மை தனிமைப்படுத்தி, தமக்கு தனியாக துவாய், சவர்க்காரம், படுக்கை விரிப்பு உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
கண்நோய்க்கு உள்ளாகும் பட்சத்தில் உரிய மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தவிதமான கைமருந்தையோ அல்லது வேறு மருந்தையோ பாவிக்கலாகாது. மாறாக நாம் செயற்படும் பட்சத்தில் கண்ணில் நிரந்தர பாதிப்பை எதிர்நோக்க நேரிடுமென்பதுடன், இது தொடர்பாக நாம் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் தாண்டி நோய்த்தொற்று ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடி அதற்குரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளவதே சிறந்ததாகுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
மழையுடன் கூடிய காலநிலை இயற்கையாக நடைபெறும் விடயமென்பதினால், மழை காலத்தில் நாமே எமது அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், துப்புரவான சூழலை பேணுதல் ஆகியவற்றில் அதிகூடிய கவனம் செலுத்தி, எம்மையும் எம்மை நெருங்கி வாழ்வோரையும் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்போம்.
ஆர்.சுகந்தினி