தீராத பகையும் தீர்க்க முடியாத பிரச்சினையும் உலகில் இல்லை என்று சொல்லும் போது தவிர்க்கவே முடியாதவை குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு வாக்குவாதங்கள். ஆனால் இன்று அந்த சிறு வாக்குவாதமே கொலை, தற்கொலை வரை சென்று அன்றாடம் தலைப்பு செய்திகளாகி வருகின்றன.
குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையில் ஏற்படும் அதிகாரப்போட்டி, கருத்துவேறுபாடு, விட்டுக்கொடுப்பின்மை, புரிந்துணர்வின்மை போன்ற காரணங்களினால் விவகாரத்து வழக்குகள் அதிகமாகி வருவதை போல் கொலை வழக்குகளும் அதிகரித்துவருகின்றன. அதிலும் புதிதாக திருமணமான 25 முதல் 35 வயதுக்குள்ளானவர்கள் குடும்பத் தகராறு காரணமாக இத்தகைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்தவரிசையில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த த.கீதா (வயது 23) என்ற பெண்னே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான கணவர் முள்ளியவளை குமாரபுரத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது. இருவரும் திருமணம் முடித்து நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைக்கு வீடொன்றை பெற்று கடந்த மூன்று மாதகாலமாக வசித்துவந்துள்ளனர்.
உயிரிழந்த இளம் பெண் தனது தாயாருடன் தினமும் தொலைபேசியில் உரையாடிவந்துள்ளார். எனினும் கடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் தாயுடன் அவர் பேசவில்லை. அவருடைய தொலைபேசி இலக்கமும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தாய், கடந்த 23ஆம் திகதி தனது மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டில் எவரும் இருக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர், வீட்டைச் சுற்றித் தேடியுள்ளார். இதன்போதே அவர்கள் தங்கிருந்த வீட்டின் பின்புறத்தில் புதிதாக மண்ணால் நிரப்பப்பட்ட குழியொன்று இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சந்தேகம் ஏற்பட்டவே, முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.
அதன்படி நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் இருவரும் தங்கியிருந்த வாடகை வீட்டில் பொலிஸார் சோதனைகளை ஆரம்பித்தனர். இதன்போதே துரதிர்ஷ்டவசமாக அந்த வீட்டின் பின்புறமாகவுள்ள மலசலகூடத்துக்கருகே புதைக்கப்பட்ட சடலமொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் நடைபெற்றன. சுமார் 05 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இதுதொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாய் தெரிவிக்கையில்,
“என் மகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது அவளுக்கு 19 வயது தான் இருக்கும். இளம் வயது திருமணம்.
இருவரும் கடந்த மாதம் முள்ளியவளை பகுதியில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து தங்கியிருந்தனர். இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன. மகள் என்னிடம் எல்லாவற்றையும் கூறுவாள்.
கடந்த சனிக்கிழமை (21) முதல் மகளின் தொலைபேசி இலக்கம் செயலிழந்திருந்தது. பின்னர் மகளும் மருமகனும் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றபோது அங்கு யாருமிருக்கவில்லை. எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நான் வீட்டை சுற்றித் தேடிப்பார்த்தேன். அப்போது தான் அவர்கள் தங்கிருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பப்பட்ட குழியொன்று இருப்பதை கண்டேன். இதனையடுத்தே பொலிஸில் முறைப்பாடு செய்தேன் “ என அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமையவே சந்தேகத்தின் பேரில் இளம் பெண்ணின் கணவர் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
கணவர் 23 வயதுடைய ‘பகீர்’ என அழைக்கப்படும் இளைஞன் என தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பில் கணவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
“எங்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகின்றன. இந்த மூன்று வருட திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியிருக்கவில்லை. இருவருக்குமிடையில் அடிக்கடி சண்டை சச்சரவுகளாகவே இருந்தது. அதற்கு முடிவே இருக்கவில்லை. சம்பவத்தன்றும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டிருந்தது.
நான் மனைவியை அடித்தேன். அவருடைய கழுத்தில் பலமாக அடிபட்டது. அவர் மயங்கி கீழே விழுந்தார். நீண்டநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. நான் அருகில் சென்று பார்த்த போது அவள் மூச்சு நின்றிருந்தது. அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து பயந்தேன்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னால் எதையுமே யோசிக்கவும் முடியவில்லை. உடனே வீட்டின் பின்புறம் கழிப்பறை குழிக்கருகில் குழியொன்றை வெட்டி அதில் அவளை போட்டு புதைத்தேன்” என கணவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெண்ணைக் கொலைசெய்து குழி தோண்டிப் புதைத்த இரு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல் இத்தகையதொரு சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்திலும் இடம்பெற்றிருந்தது. அஜந்தன் யமுனா என்ற 23 வயதான பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக கணவரால் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
அதேபோன்று கோப்பாயில் குடும்ப முரண்பாடு காரணமாக மனைவி கணவனை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
எது எவ்வாறாயினும் இத்தகைய குடும்ப சண்டைகள் பெரியவர்களை மட்டுமல்லாது குழந்தைகளையும் வெகுவாக பாதித்து விடுகிறது.
முன்பெல்லாம் கணவன், மனைவி பிரச்சினையென்றால் குழந்தைகளின் நலனைக் கருத்திற் கொண்டு பிரச்சினைகளை சரிசெய்ய முற்படுவார்கள். ஆனால் இன்று கணவன்,-மனைவி பிரச்சினையால் குழந்தைகள் கொடூரமாக கொலைசெய்யப்படும் பரிதாபங்களும் ஏற்பட்ட வண்ணமுள்ளன.
சந்தோசங்கள், சிறு சிறு முரண்பாடுகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புதமான அமைப்பே குடும்பம். எந்தப் பிரச்சினையானாலும் பெரிதாக்காமல் இருப்பதும், நகைச்சுவை உணர்வுடன் எளிமையாக பழகுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். அதேபோல் இத்தகைய பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் பிரதான காரணமாகவுள்ளது.
எனவே உளரீதியான ஆலோசனைகளை நாடுவதும் கட்டாயம். ஏனெனில் குடும்ப உறவுகளை விட குடும்ப வன்முறைகள் பலமாவது குடும்ப அமைப்புக்கும், சமூக கட்டமைப்புக்கும் நல்லதல்ல.
வசந்தா அருள்ரட்ணம்