Home » மீண்டெழுந்து வந்த உலக பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள பேரிடி!

மீண்டெழுந்து வந்த உலக பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள பேரிடி!

by Damith Pushpika
October 22, 2023 6:48 am 0 comment

உலகின் அமைதி குலைந்து பல வருடங்களாகிவிட்டது. உலக நாடுகளின் பொருளாதாரம் சீரடைந்து கொண்டு வருகையில், ஒவ்வொரு தடவையும் பாரதூரமான நிகழ்வுகள் அரங்கேறி விடுகின்றன. உலகநாடுகள் பொருளாதாரத்தில் மீண்டும் அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து விடுகின்றன. அந்நாடுகள் பொருளாதாரத்தில் மீண்டெழுவதற்கு வருடக்கணக்கில் மீண்டும் போராட வேண்டியிருக்கின்றது.

கடந்த சுமார் நான்கு வருடங்களாகத் தொடருகின்ற நிகழ்வுப் போக்குகளைப் பார்க்கும் போது, உலக பொருளாதாரம் இயல்புநிலைமைக்கு மீண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லையென்றே நினைக்கத் தோன்றுகின்றது. உலகின் நிலைமை கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வாறுதான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இன்னுமே மீண்டெழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

நாடுகளின் வருமானம் குன்றி விட்டது. தொழிலில்லாப் பிரச்சினை அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இலாபத்தில் இயங்கிய பெருநிறுவனங்களே இறுதிமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன. உலகின் பிரபல்யமான பெருநிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்ைகயைக் குறைக்கத் தொடங்கி விட்டன. இலாபப் பங்கீட்டுக் கொடுப்பனவு வழங்குவதையும் ஏராளமான நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. அந்நிறுவனங்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

2019 டிசம்பர் மாதத்தில் கொவிட் பெருந்தொற்று உலகநாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் சர்வதேச பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு வீழ்ச்சியடையத் தொடங்கியது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எந்தவொரு நாடுமே தப்பிக் கொள்ளவில்லை. அதன் தாக்கம் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இலங்கையும் அப்பாதிப்புக்கு விதிவிலக்காகவில்லை.

உலகை விட்டு கொவிட் பெருந்தொற்று படிப்படியாக விடைபெற்றதும், உலக பொருளாதாரம் பெரும் பிரயத்தனத்துடன் மீண்டெழுந்து வரத் தொடங்கிய வேளையில், ரஷ்ய_ உக்ேரன் யுத்தம் திடீரென வெடித்தது. இருதரப்பிலும் உயிர்ப்பலிகள் அதிகரித்தன. இருநாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியுற்றது.

அதன் காரணமாக உலகின் பொருளாதாரமே மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கியது. உலகில் கோதுமைத் தானியத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதில் ரஷ்யாவும் உக்ேரனும் பிரதான இரு நாடுகளாகும். இவ்விரு நாடுகளும் உலகின் கோதுமைத் தேவையில் மூன்றிலொரு பங்கைப் பூர்த்தி செய்கின்றன.

கோதுமையை மாத்திரமன்றி, உலகநாடுகளின் பிறதேவைகள் பலவற்றை ரஷ்யாவும் உக்ேரனும் பூர்த்தி செய்து வந்ததனால் அவ்விரு நாடுகளுக்குமிடையில் கடந்த ஒன்றரை வருடகாலத்துக்கு மேலாக தொடருகின்ற யுத்தமானது உலக பொருளாதாரத்தை மறைமுகமாகப் பாதித்த வண்ணமே உள்ளது.

ரஷ்ய_ உக்ேரன் போர்த்தாக்கம் தணிவதற்கிடையில், இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமிடையில் இப்போது கடும்போர் மூண்டுள்ளது. ரஷ்ய_ உக்ேரன் யுத்தத்தைப் பார்க்கிலும், இஸ்ரேல்_ ஹமாஸ் யுத்தமானது உலக பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தைச் செலுத்துமென்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இப்பாதிப்பிலிருந்து இலங்கையும் விதிவிலக்காகப் போவதில்லை.

உலகசந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பதால் இலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கும், சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும், பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும். இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கத்தான் போகின்றன.

உலகநாடுகள் மாத்திரமன்றி, இலங்கையும் இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொள்ளத்தான் போகின்றது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமிடையிலான யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்துவிடுமென்று எதிர்பார்க்க முடியாது. இருதரப்புமே பலம் பொருந்தியவை என்பதால் தீவிர யுத்தம் தொடரத்தான் போகின்றது.

நாளும்பொழுதும் தாக்குதல்கள் உக்கிரமடைகின்றன. உயிர்ப்பலிகள் மோசமாக அதிகரித்துச் செல்கின்றன. கட்டடங்கள் தரைமட்டமாகிப் போகின்றன. இருதரப்பு உயிர்ப்பலிகளையும் பார்த்து உலகமே அதிர்ந்து போய் நிற்கின்றது.

கொவிட் தாக்கத்தின் பின்னர் உலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்ற மூன்றாவது காரணியாக இஸ்ரேல்_ ஹமாஸ் யுத்தத்தைக் குறிப்பிடலாம்.

உலக பொருளாதாரத்தைப் பாதிக்கின்ற யுத்தம் இவ்வாறு அடுத்தடுத்து உருவெடுக்கும் போது, உலகநாடுகள் எப்போதுதான் அமைதிக்காற்றைச் சுவாசிக்கப் போகின்றன? போட்டாபோட்டிகளும் யுத்தங்களும் உலகைவிட்டு முற்றாக நீங்குவது எப்போது? அமைதியை விரும்புகின்ற உலகமக்களின் ஏக்கம் இதுதான்!

எஸ்.பி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division