நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மையை ஒழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? அதன் மூலம் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமா? என்பது போன்ற விடயங்கள் கடந்த சில வாரங்களாக அரசியல் அரங்கத்தில் பேசுபொருளாகியுள்ளன.
தற்போது இது வெறும் ஊகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இந்தச் சாத்தியக்கூறு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் பிரமுகர்களிடையே அரசியல் விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இது தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு சூழ்ச்சியென எதிர்க்கட்சியினால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த வருடம் தேர்தல்கள் நடத்தப்படும் ஆண்டாக அமையும் எனக் கணிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையிலேயே இவ்வாறான கருத்தாடல்கள் முன்வைக்கப்படுகின்றன.
தேர்தலை இரத்துச் செய்யவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சின் செயலாளர் போதியளவு நிதியை வழங்க முடியாதென தெரிவித்திருந்தார். தனிப்பட்ட ரீதியில் தேர்தலுக்கு செலவிடுவதற்கு நிதி கிடைக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ற வகையில் இதற்கான நிதியை விடுவிக்க முடியாத நிலையிலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். சில பகுதிகளுக்கு பிரதிநிதிகள் இல்லாமலாகும் நிலைமை தொடர்பிலும் அனைவரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு தேர்தல் சட்டத்தைத் திருத்துவது குறித்து கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை கலப்பு முறையில் நடத்துவது தொடர்பான யோசனைகளும் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுத்தேர்தல் குறித்த சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பது குறித்து கருத்தாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான யோசனையை நீதி அமைச்சர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருப்பதாக அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறது.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வருட முற்பகுதியில் நடவடிக்கை எடுத்திருந்த போதும், பொருளாதார நெருக்கடிகளால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது எனத் திறைசேரியினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டன.
உண்மையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தேர்தலுக்கு செலவு செய்யப்படும் பணம் குறித்த அக்கறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். இருந்தபோதும், மக்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மக்களுக்குக் காணப்படும் உரிமைக்கு மதிப்பளிக்கப்படவும் வேண்டும். இது இவ்விதமிருக்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்த கருத்தாடல்கள் மீண்டும் உருவாகியுள்ளன. கடந்த ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கட்சிக் காலத்தில் பேசப்பட்ட விடயம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
அது மாத்திரமன்றி 2022 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயின் கொள்கை ரீதியில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடந்தால், அது எதிர்க்கட்சிகளை, குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருபவர்களை ஒரு கடினமான நிலைக்கும் தள்ளலாம். அதை முன்வைக்கும் போது அவர்கள் அதை எதிர்ப்பதாக பார்க்க முடியாது. அனைத்து அரசியலமைப்பு சீர்திருத்தங்களும் முடிவடையும் வரை பொதுத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம் என்பது எதிர்க்கட்சிகளின் முக்கிய கவலையாகும்.
இருந்தாலும், எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தம்மைத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடுத்தியிருப்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் பொதுக் கூட்டணிகளை அமைத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முனைப்புக்களைக் காண்பித்து வருகின்றன.
ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியும், பிரதான ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்கவிருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றபோதும், இதுபற்றிய உறுதியான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலொன்று நடத்தப்படும் பட்சத்தில் பொதுவேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனப் பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்திலேயே இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. அதேபோல எதிர்க்கட்சிகளும் தமக்கிடையிலான கூட்டணிகளை அமைப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.
எனினும், அடுத்த வருடம் எந்தத் தேர்தலில் முதலில் நடத்தப்படும், அதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பி.ஹர்ஷன்