இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிகளில் ஒன்றாக கடன் மறுசீரமைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பெற்றுக் கொண்ட கடன்களை மறுசீரமைப்புச் செய்வதற்கு உடன்பாடுகள் எட்டப்பட்டு வருகின்றன.
இலங்கையின் இந்தக் கடன்மறுசீரமைப்புகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என மீண்டும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ‘பெல்ட் அண்ட் ரோட்’ மூன்றாவது மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் தெரிவித்திருந்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கடியைச் சமாளிக்க இதுவரை இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் வரவேற்றிருந்தார்.
இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து பூரண ஆதரவை வழங்கும் என்றும், சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வருகின்ற உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இது மாத்திரமன்றி சீனாவின் துணைப் பிரதமருடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் ‘பெல்ட் அண்ட் ரோட்’ முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், இத்திட்டங்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது.
சீன – இலங்கை இறப்பர், அரிசி ஒப்பந்தம் இலங்கை செய்து கொண்ட முதலாவது வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கை என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளினதும் பொதுவான கொள்கைகளுக்கு அமைவாக புதிய வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ‘பெல்ட் அண்ட் ரோட்’ மூன்றாவது மாநாட்டில் ரஷ்யா, இந்தோனேசியா, வியட்னாம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்திருந்தது. சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ முயற்சி குறித்து எடுத்து நோக்கினால் இத்திட்டம் உருவாக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு இதன் முதலாவது மாநாடு நடைபெற்றது. ‘பெல்ட் அண்ட் ரோட்’ அல்லது ‘வன் பெல்ட், வன் ரோட்’ என அறியப்படும் இந்த முயற்சியானது சீன அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலோபாயத் திட்டமாகும். 150 இற்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களில் முதலீடுகளைச் செய்யும் சீனாவின் திட்டமாகும்.
‘பெல்ட்’ என்பது ‘பட்டுப் பாதைப் பொருளாதார பட்டை’ என்பதன் சுருக்கமாகும். இது மேற்குப் பகுதிகளின் புகழ்பெற்ற வரலாற்று வர்த்தகப் பாதையில் நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசியா வழியாக தரைவழி மற்றும் ரயில் போக்குவரத்திற்காக முன்மொழியப்பட்ட தரைவழிப் பாதைகளைக் குறிக்கிறது.
அதேசமயம் ‘ரோட்’ என்பது ’21 ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப் பாதை’ என்பதன் சுருக்கமாகும். இது தென்கிழக்கு ஆசியா வழியாக தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கு இந்தோ-பசிபிக் கடல் மார்க்கத்தைக் குறிக்கிறது.
துறைமுகங்கள், வானளாவிய கட்டடங்கள், ரயில் பாதைகள், வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், அணைகள், நிலக்கரியால் இயங்கும் மின் நிலையங்கள் மற்றும் ரயில் பாதை சுரங்கங்கள் ஆகியவை ‘பெல்ட் அண்ட் ரோட்’ முன்முயற்சி உள்கட்டமைப்பு முதலீடுகளின் எடுத்துக்காட்டுகளாகும்.
சீனாவின் தொன்மையான பட்டுப்பாதைத் திட்டத்தின் மெருகூட்டப்பட்ட கொள்கைத் திட்டமாக இதனை அறிமுகப்படுத்தலாம். பட்டு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்துச் செய்வதற்கான கடல்மார்க்கத்தில் இணைக்கப்படும் நாடுகளை தற்போது ஒருங்கிணைத்து அந்த நாடுகளுடன் தனது தொடர்புகளை வலுப்படுத்துவது சீனாவின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டத்தினால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் நன்மைகளைப் பெறுகின்றன. இதனை பரஸ்பர நன்மையைப் பெறுவதற்கான முயற்சியாக்குவதற்கு நாடுகளின் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று சீனா விரும்புகின்றது. எதிர்காலத்தில் ‘பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு’ திட்டத்திற்கு அடிப்படையாக அமையும் எட்டு அம்சக் கொள்கைகளையும் சீன ஜனாதிபதி வெளியிட்டார். சர்வதேச பலதரப்பு வலையமைப்பை உருவாக்குதல், உலகளாவிய திறந்த பொருளாதாரத்தை ஆதரித்தல், ஒத்துழைப்பிற்கான நடைமுறை அணுகுமுறையை உருவாக்குதல், பசுமை வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ‘பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பு’ திட்டம், உறுப்பு நாடுகளிடையே பிரிக்க முடியாத உறவை ஊக்குவித்தல், உறவுகளை ஊக்குவித்தல் மற்றும் அந்த நாடுகளுக்கு இடையே நிறுவன ரீதியான உறவுகளை வலுப்படுத்துவது என்பனவே அந்த எட்டு முக்கிய கொள்கைகளாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நாடு எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையில் சீனாவின் உதவியைப் பெற்றுக் கொண்டுள்ளது. சீனாவிடமிருந்து இலங்கை பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, இலங்கைக்கு உதவி தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் சீனா உதவிகளை வழங்கியுள்ளது.
இதற்கு பெல்ட் அண்ட் ரோட் போன்ற முயற்சிகள் பேருதவியாக இருந்துள்ளன.
அதேநேரம், இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் பங்கெடுப்பது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த சீன விஜயத்தின் போது இந்தோனேசியா மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அந்நாட்டு உயர்மட்டக் குழுவினருடன் கலந்துரையாடுவதற்கும், ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்குமான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
அதேசமயம் இலங்கையில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அண்மைய பொருளாதார நெருக்கடி மற்றும் பாம்ஒயில் மீதான தடை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி- இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்தோனேசிய ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
ஆசிய நாடுகள் பலவற்றுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முறைப்படுத்தவும் இலங்கை செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தோனேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமான சமயம் என இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கான களமாக வியட்நாமை மாற்றியமைக்க தயாரெனவும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் வியட்நாம் ஜனாதிபதி வோ வென் தோக், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்தார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்று சர்வதேச தலைவர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவதற்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது காலத்தின் தேவையாகும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.