பாராளுமன்றம் என்ற உயரிய சபையில் எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற நியதிகள் காணப்படுகின்ற நிலையிலும் அதற்காக எழுத்து மூல சட்டங்கள் நியதிகள் உள்ள போதும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்வது தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
இது மிகுந்த கௌரவத்துக்குரிய பாராளுமன்றத்திற்கும் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தை அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதிக்கும் விடயமாகவே அமைந்து விடுகின்றது.
அந்த வகையில் இக்காலங்களில் பாராளுமன்றத்தில் நடக்கக் கூடாத சில விடயங்களும் சம்பவங்களும் நடந்து வருவதைக் காணலாம்.
சில தினங்களாகவே பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளினால் சில சில குளறுபடிகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்ச்சை யொன்றின்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும சபையின் மத்திக்கு வந்து மிக மோசமாக நடந்து கொண்டதுடன் செங்கோலையும் தூக்குவதற்கு முயற்சி செய்து, அதன் போது அதில் தமது கைகளை பதித்து செங்கோலை தமது கைகளால் தட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றது.
செங்கோலை தூக்க முயல்வது செங்கோலின் மீது கைகளை பதிப்பது அதன் மீது தட்டுவது போன்ற செயற்பாடுகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின்படி குற்றமாகும்.
அவ்வாறு நடந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு நான்கு வாரங்கள் பாராளுமன்ற அமர்வுக்கான தடையை சபாநாயகர் விதித்தார்.
தமது செயற்பாட்டை நியாயப்படுத்தி பாராளுமன்றத்துக்கு வெளியில் ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்து தெரிவித்திருந்தமையையும் குறிப்பிட வேண்டும். என்றாலும் எந்த வகையிலும் அதனை நியாயப்படுத்த முடியாது. பாராளுமன்றத்தில் செயல்பட வேண்டிய விதிமுறைகளுக்கு இணங்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்பதை தெரிந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அது அவ்வாறிருக்க கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தில் வைத்து சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகேக்கும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள வாய்த் தர்க்கம் கைகலப்பு வரை சென்றுள்ளது. தம்மீது பாராளுமன்ற கட்டடத்திற்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபாநாயகருக்கு முறைப்பாடு ஒன்றை முன்வைத்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான அஜித் ரோஹண பண்டாரவும் தன்னை டயனா கமகே தாக்க வந்ததாக தெரிவித்து சபாநாயகரிடம் முறைப்பாட்டை முன் வைத்தார். அதனைக் கவனத்தில் கொண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தமைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
மேற்படி குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரண, ஷகயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அந்த குழுவினர் விசாரணைகளை நடத்தி தீர்ப்பை வெளியிடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தன் மீது சபைக்கு வெளியே வைத்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜித் பெரேரா தாக்கியதாக சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய நிலையில்.
டயனா கமகேயினால் சுஜித் பெரேரா எம்.பி.யே தாக்கப்பட்டதாக கூறி அதற்கான வீடியோ ஆதாரத்தையும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்தனர்.
பாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது மாலை 3.55 மணியளவில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே திடீரென சபைக்குள் வந்து ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி விடயத்தை முன்வைத்தார்.
அதில் இராஜாங்க அமைச்சரான தான் சபைக்கு வெளியில் நின்றபோது அங்குவந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சுஜித் பெரேரா தன்னுடன் தர்க்கப்பட்டு தன்னைத் தாக்கியதாகக் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதில்தான் ஆர்வமாக உள்ளார்கள். இந்த சுஜித் பெரேரா எம்.பி. வீட்டில் தனது மனைவியை தாக்குவது போலவே ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரான தன்னையும் தாக்கியதாக டயனா குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். அதுமட்டுமன்றி நான் வீதியில் இறங்கிப் போராடவுள்ளேன். எனவே என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கிடைக்க பாராளுமன்றத்தில் உள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்னுடன் அனைவரும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளலாம். தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்விடயம் பாரதூரமானது. எனவே உடனடியாக சபையை 10 நிமிடங்கள் இடைநிறுத்தி சபாநாயகர் அலுவலகத்தில் இது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்றார்.
அதனையடுத்து சபைக்கு தலைமை தாங்கிய பியதிஸ்ஸ எம்.பி. சபையை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக 4 மணியளவில் அறிவித்தார். அதன்பின்னர் சபை மீண்டும் 4.15 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் ஷ தலைமையில் கூடியது.
இதன் போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. பேசுகையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சுஜித் பெரேரா தாக்கியதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார். சபையும் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டயனா கமகே எம்.பி. மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி கைப் பையால் சஜித் பெரேரா எம்.பி.யைத் தாக்கும் வீடியோ ஆதாரத்தை சபாநாயகரிடம் கையளித்தோம். எனவே அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
அதனையடுத்து எழுந்த சுஜித் எம் பி ரோஹன பண்டார எம்பி யுடன் டயானா கமகே தகபா வார்த்தைகளைப் பயன்படுத்தி தர்க்கப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் எனக்கூறியபோது என்னையும் தகாத வார்த்தைகளினால் திட்டியவாறு தாக்கினார். அவரின் தாக்குதலை தடுக்கும் முயற்சியிலேயே நான் ஈடுபட்டேன். எனவே நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹன பண்டார பேசுகையில், டயனா கமகே எம்.பி. என்னுடன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுபட்டார். எனது காற்சட்டையை கழற்றுவதாகவும் கூறினார். எல்லோருமே பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவே கூறுகின்றனர். ஆனால் டயனா கமகே எம்.பி.யினால் ஆண் எம்.பி.க்கள் துன்புறுத்தப்படுகின்றனர். எமக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இந்த பெண் எம்.பி.யிடமிருந்து ஆண் எம்.பி.க்களின் உரிமைகளை சபாநாயகர் பாதுகாக்கவேண்டும் . அவர் ஒரு கழிவு பௌஸர் என்றார்.
இதனைக் கேட்டு ஆவேசமாக எழுந்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் கன்னத்தில் அறைவேன். இரண்டு எம்பிக்களையும் அப்போதே அறைந்திருக்க வேண்டும். ஆனால் அறைய முடியவில்லை. என்னை அப்படி கழிவு பௌசர் என்று கூறும் எம்.பி. யின் அம்மா, மனைவி, சகோதரிகள்தான் கழிவு பௌசர்கள் என்றும் அவர் கூச்சலிட்டார். அதன் போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் ஷ. இது தொடர்பில் சபாநாயகர் முறையான விசாரணை நடத்துவார் என்றார்.
அதனையடுத்து வருகை தந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மேற்படி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட பின்னர் அவர்கள் விசாரணை செய்து தீர்ப்பொன்றை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார். அந்த விவகாரம் சபையில் இவ்வாறுதான் முற்றுப் பெற்றது.