நீண்ட இப்பிரபஞ்சத்தில்
நான் நானாகவே இருந்து விடுகிறேன்
நீல வானத்தில் கோடையும் மாரியும் வருவதுபோல
நீண்ட வாழ்க்கைபயணத்தில்
எதுவும் நடக்கலாம்
இன்றைய நாளைப்போன்று
நாளைய நாள் இல்லாமலிருக்கலாம்
கடலில் எழும் பூகம்பம் போல
அகத்தில் அலைகள் தோன்றலாம்
சிறு தூரலும் பெருமழையும்போல
வாழ்விலும் எதுவும் நடக்கலாம்
அது அப்படித்தான்
வாழ்வென்றால் அப்படித்தான்
நான் நானாகவே இருந்து விடுகிறேன்
எனது வாழ்வை நானே வாழ்ந்து
என்னை நான் செதுக்கிக் கொள்கிறேன்
என்னால் விரும்பப்படாத நாவுகளில்
வரும் சொற்களை பொறுக்கி
கவிதைகளை விதைத்துக் கொள்வேன்
பார்க்கும் பார்வைகளை பிடித்து விழி
அம்பாய் மாற்றிக்கொள்வேன்
எனக்காக விடியும் பொழுதுகளை
நானாகவே வாழ்ந்து விடுகிறேன்
யாரைப்போலும் வாழ்ந்து என்னை நான்
கண்டுகொள்ளாமல் வாழ
ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்
என்னை என்னைப்போல வாழ விடுங்கள்
என்னை உங்கள் விருப்பம்போல் செதுக்க
சொற்களை உருவாக்காதீர்கள்
அதை ஓரமாய் ஒதுக்கி விட்டுச்
செல்பவளல்ல நான்
ஒவ்வொன்றையும் உரமாய் சேகரித்து
வெற்றிக்கு விதை போடுபவள்
எனது சொற்களில் என் வாழ்வை தேடாதீர்கள்
எனது சொற்கள் என்னைவிட
பிறருக்காகத்தான் அதிகம்
பேசிக்கொண்டிருக்கும்.