அதிகாரங்களின் சதிகளில்
அநாதரவாகிப் போகும்
வெள்ளை மொட்டுக்கள்
நிலவெறியின் சர்வாதிகாரத்தில்
நசுக்கப்பட்ட விதைகள்
ஏகாதிபத்தியத்தின்
ஏவுகணை ஏவல்களில்
சிதறிப்போயின எங்கள்
சின்னஞ் சிறுகூடுகள்
கோடுகள் போட முன்னரே எம்
எழுத்தாணிகளைப்
பிடுங்கி வைத்துக்கொண்டு
எக்காளமிடுகின்றன
ஏப்பம்விட்டபடி
பல பெருச்சாலிகள்
நாசகார வேலைகளில்
நியாயங்கள் விலைபோன
நிலையில்
அஸ்தமனங்களே எங்கள்
வாழ்வில் நொடிக்கு
நூறு முறை பூக்கின்றன
இதயங்கள் வெந்து உருகிய நெடியில்
நாசியிலும் கண்களிலும்
ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை
எரி சாம்பலில் எங்குமே
ஆன்மாக்களின் ஓலங்கள்
காதுகளைச் சிரைத்தபடி…
மருந்துக்கும் கூட
மனிதாபிமானம் இன்றிய
அநீதியின் காட்டில்
தலைக்கனங்கள் வென்று
சமாதி முகடுகள் முளைத்த
பாலைவனத்தில்
அவர்கள் பொய்யான வெற்றிக்
கம்பங்களை நடட்டும்
உள்ளங்களின்
கைவிரல்களை ஒவ்வொன்றாய்க்
கூறு போட்டுவிட்டு
போலி விதானங்களில்
பொன்னாடை போர்த்தும்
பொய் முகங்களே
உங்கள் முகத்திரை கிழித்து
கோரப்பற்களை உடைத்து
பச்சோந்தித்தனத்தைப் புறந்தள்ளி
நரமாமிசப் பட்சணிகளின்
கழுத்தை நெரித்து
உண்மையை உரக்கச் சொல்லும்
நீதத்தின் சத்திரியங்கள்
வெல்லும்
ஒருநாளைச் சந்திக்க..
உரிமைகளை உயிராய் விதைக்கும்
துணிவை அணுக்களில்
ஏந்தி
நாளும் வாள்
முனைகளாவோம்
நெஞ்சுரம் வழியும்
சமுத்திரமாய் வளர்வோம்
மனித உயிரின் மகத்துவம்
உணர்த்த
தொலைந்த வாழ்க்கை
மொத்தத்தையும்
திருப்பிவிட ஏகனின்
மறுமொழி என்றுதான்
எங்களை அடையும்?
இன்றைய
யதார்த்தத்தின் நிழல்கள்
நாங்கள்…
நாளைய நந்தவனத்தின்
விதைகளாய் ஆவோம்…
சிதைகளுக்குள் கரம் கோர்த்து
செந்தீயில் யாகம்
வளர்க்கிறோம்
யுத்தபூமியில்!